புதினங்களின் சங்கமம்

செவ்வந்தியின் யாழ்ப்பாண நெருங்கிய நண்பன் ஆனந்தனின் வீட்டில் ஆயுதங்கள்… இதனோடு சம்பந்தப்பட்ட வவுனியா நபரும் கைது…

ஆனந்தனின் வீட்டில் ஆயுதங்கள்… இதனோடு சம்பந்தப்பட்ட வவுனியா நபரும் கைது…

இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்வதற்கு படகு ஏற்பாடு செய்து கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்ற, ஆனந்தன் என்ற சந்தேக நபரின் வீட்டில் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவு இதை உறுதிபடுத்தியுள்ளது.

விசாரணைகளில் ஆனந்த வழங்கிய தகவலுக்கு அமையவே யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்தே துப்பாக்கிகளும் தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பிஸ்டல் ரக துப்பாக்கிகள் இரண்டும் 9 மி.மீ ரக தோட்டாக்கள் ஆறு உள்ளிட்ட ஆயுதங்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

அத்துடன், “ஆனந்தன்” என்பவருக்கு துப்பாக்கியை கொடுத்ததாக கூறப்படும் நபரொருவரும் வவுனியாவில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து ஒக்டோபர் 14 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு பின்னர் ஒக்டோபர் 15 ஆம் திகதி நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இஷாரா செவ்வந்தி வழங்கிய தகவலுக்கமைய இந்தியாவுக்கு தப்பிச் செல்ல படகு ஏற்பாடு செய்து கொடுத்து உதவிய “ஆனந்தன்” என்பவர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட நிலையில் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது