யாழில் போதைப்பொருள் விற்பனை போல் சூடுபிடிக்கும் பிள்ளைப்பேற்று வியாபாரம்!! அன்பு மனைவியை இழந்து குழந்தையுடன் வாழும் தந்தையின் கண்ணீர் கதை!!
யாழ்ப்பாணத்தில் பணத்திற்காக போதைப்பொருள் வியாபாரத்தை காவாலிகள் பலரும் செய்துவரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் பணத்திற்காக பல கர்ப்பிணிப் பெண்களும் நோயாளர்கள் பலரும் மருத்துவக் கொலை செய்யப்பட்டு வருகின்றார்கள். தற்போதைய NPP அரசு இது தொடர்பாக அக்கறை செலுத்துமா?
நெடுந்தீவு 10ம் வட்டாரத்தைச் சேர்ந்த 28 வயதான கில்மன் நோபேர்ட். 2025ம் ஆணடு தை மாதம் 19ம் திகதி பெரும் கனவுகளுடன் தனது வாழ்க்கைத் துணையாக 25 வயதான தர்சிகாமேரியை கரம்பிடிக்கின்றார்கள்.

அவர்களது இனிய இல்லறவாழ்வுக்கு அத்தாட்சியாக தர்சிகாமேரி கர்ப்பம் தரிக்கின்றார். நெடுந்தீவில் கர்ப்பிணிகளுக்கான கிளினிக் வசதி குறைபாடு காரணமாக தனது ஆசை மனைவியை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்து தனியார் சிகிச்சை நிலையத்தில் மகப்பேற்று நிபுணர் சரவணபவன் அவர்களிடம் பலதடவைகள் பரிசோதனைகள் மேற்கொண்டு வந்துள்ளார். குறிப்பாக யாழ் குருநகர் கடற்கரை வீதியில் அமைந்துள்ள கோலிக்குறோஸ் எனப்படும் திருச்சிலுவை சுகநிலையம் என்ற பெயரில் இயங்கும் தனியார் சிகிச்சை நிலையத்தில் 8 ஆயிரம் ரூபா பணம் கட்டி மனைவியை பலதடவைகள் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றுள்ளார். தர்சிகாமேரியின் மகப்பேற்று திகதி 10 மாதம் 26ம் திகதி என கணக்கிடப்பட்டிருந்தது.

கர்ப்பம் தரித்து தாய்மையின் பூரிப்பில் திளைத்திருந்த தர்சிகாமேரி

இந் நிலையில் தர்சிகாமேரியை ஒருதடவை மகப்பேற்று நிபுணர் சரவணபவன் அவர்கள் பார்வையிட்ட போத தர்சிகாமேரிக்கு ஹீமோகுளோபின்( சிவப்பு இரத்த அணுக்கள்) மிகக் குறைவாக இருப்பதை அறிந்துள்ளார். அதன் பின்னர் தனியார் வைத்தியசாலையில் மகப்பேற்றை செய்வதை தவிர்க்குமாறு வைத்தியநிபுணர் கூறிய ஆலோசனையின் அடிப்படையில் தர்சிகாமேரி யாழ் போதனா வைத்தியசாலையில் மகப்பேற்று நிபுணர் சரவணபவன் அவர்களின் பொறுப்பிலிருந்த 20ம் இலக்க விடுதியில் 29.09.2025 அன்று அனுமதிக்கப்பட்டார். குறித்த விடுதிக்கு பெண் மருத்துவர் ஒருவரே விடுதிப் பொறுப்பாளராக காணப்பட்டுள்ளார். விடுதியில் அனுமதிக்கப்பட்டு ஒரு கிழமையான நிலையில் தர்சிகாமேரிக்கு சிசேரியன் அறுவைச்சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அன்றைய தினம் சிசேரியனுக்காக 3வது ஆளாக தர்சிகா சிசேரியனுக்காக தியேட்டருக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். இதே வேளை காலை தர்சிகாமேரிக்கு 9.45 மணிக்கு பன்னீர்க்குடம் உடைந்துள்ளது. அதன் பின்னர் தர்சிகாமேரிக்கு சுகப்பிரசவம் நடக்கலாம் என்று கருதி தர்சிகாமேரிக்கு சிசேரியன் செய்யாது உள்ளே வைத்திருந்த போது தர்சிகாமேரிக்கு துணையாக வெளியே அம்மா நின்றுள்ளார். இருப்பினும் இன்று இரவு 10.21 மணிவரை தர்சிகாமேரி எந்தவித கவனிப்பும் இன்றி இருந்துள்ளார். காரணம் மகப்பேற்று நிபுணர் சரவணபவன் சிசேரியனுக்கு அனுமதி கொடுப்பதற்கு கையழுத்திட்டால் மட்டுமே சிசேரியன் செய்வோம் என அங்கு நின்ற மருத்துவர்கள் கூறியுள்ளார்களாம். ஆனாலும் சரவணபவன் அதுவரை அங்கு வரவில்லை.
(தர்சிகாமேரியை மருத்துவக் கொலை செய்த பின்னர் வந்து நின்று முழிக்கும் மகப்பேற்று நிபுணர் சரவணபவன் . பொதுவாகவே யாழ்ப்பாணத்தில் பெயர் சொல்லக்கூடிய அளவுக்கு திறமையான மற்றும் சமூக அக்கறை கொண்டவர் எனப் பெயர் எடுத்தவர் மகப்பேற்று நிபுணர் சரவணபவன். ஏனைய மகப்பேற்று நிபுணர்களை விட நோயாளர் நலன் பேணுபவர் மற்றும் ஆளுமை மிக்கவர் என கருதப்படும் சரவணபவனுக்கும் அடி சறுக்கியது ஏன்? வைத்திய நிபுணர் சரவணபவன் அவர்களே……எதிர்காலக்கனவுகளுடன் உங்களை நாடி வந்த இளம் கர்ப்பிணிப் பெண் உங்களது மருத்துவ விடுதியில் மருத்துவர்களின் அசண்டையீனமான செயற்பாட்டால் பலியாகியுள்ளாளா? ஆபத்தான நிலையில் ஒரு கர்ப்பிணிப் பெண் காணப்பட்ட போது, அந்தக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏற்கனவே இரத்தச் சோகை உள்ளது என நீங்களே அறிந்து அவளை தனியார் வைத்தியசாலையில் மகப்பேற்றுக்கு அனுமதியாது போதனா வைத்தியசாலையில் அனுமதிப்பதில் உங்களுக்கு இருந்த அக்கறை உங்கள் விடுதியில் உள்ள பொறுப்பு வைத்திய அதிகாரிக்கு இருக்கவில்லையா? தர்சிகாமேரி ஆபத்தான நிலையில் உள்ளார் என பொறுப்பு வைத்திய அதிகாரி உங்களுக்கு தெரிவித்திருந்தும் நீங்கள் அங்கு வராது தனியார் சிகிச்சை நிலையத்தில் பணத்திற்காக கடமையாற்றினீர்களா? நீங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதானா?)

இந் நிலையில் 10.30 மணியளவில் தர்சிகாமேரி மயக்கமடைந்துள்ளார். அதன் பின்னர் உள்ளே நடந்தவை என்னவென்று தெரியாத நிலையில் பெண் குழந்தை அறுவைச்சிகிச்சை மூலம் வெட்டி எடுக்கப்பட்ட பின் தர்சிகாமேரி சடலமாகவே வெளியே கொண்டுவரப்பட்டார்.
இவ்வளவு பதற்றமும் நடந்து கொண்டிருந்த நேரத்தில், பல தடவைகள் கோலிகுறோசில் காசு கட்டியபின் தர்சிகாமேரிக்கு கர்ப்பப்பரிசோதனை மேற்கொண்டு யாழ் போதனா வைத்தியசாலையில் தனது பொறுப்பில் இருந்த மருத்துவ விடுதியில் அனுமதித்திருந்த மருத்துவநிபுணர் சரவணபவன் அவர்கள் தர்சிகாமேரியின் உயிர் ஊசலாடிக்கொண்டிருந்த சமயத்தில் யாழ் போதனா வைத்திசாலைக்கு முன் உள்ள கம்சிகா என்னும் தனியார் வைத்தியசாலையில் பணத்திற்காக கர்ப்பிணிகளைப் பார்வையிட்டுக்கொண்டிருந்துள்ளார். அந்த நேரத்தில் இறந்த தர்சிகாமேரியின் சகோதரியும் குறித்த கம்சிகா வைத்தியசாலையில் சரணவனபவனிடம் பரிசோதனைகள் மேற்கொள்வதற்காக காத்திருந்துள்ளார். அவர் முக்கியமான சாட்சியாவார்.

மனைவி இறந்த பின் கணவன் வைத்தியசாலையில் நீதி, நியாயம் கேட்டு தர்க்கம் செய்யும் காட்சிகள் தரப்பட்டுள்ளன.
தர்சிகாமேரியை மருத்துவக்கொலை செய்யப்பட்ட பின்னர் சடலம் பிரேதபரிசோதனை செய்யப்பட்டது. எந்தவித நியாயமான தீர்வுகளுமின்றி தமக்கு இருக்க வேண்டிய உயிர்காப்புப் பொறுப்புக்கள் பற்றி கிஞ்சித்தும் அக்கறை கொள்ளாது ஒரு இளம் தாயைக் கொலை செய்துள்ளோமே என்ற எந்தவித மனச்சாட்சியுமின்றி யாழ் போதனாவைத்தியசாலை நிர்வாகம் கணவனையும் குழந்தையையும் கைகழுவி அனுப்பியது.
மருத்துவத் தவறுகள் மற்றும் மருத்துவக் கொலைகளுக்கான யாழ் போதனா வைத்தியசாலையின், பணிப்பாளர் சத்தியமூர்த்தியின் விசாரணைகள் எப்படியானவை என்பது எமக்கு மட்டுமல்ல…உலகத்திற்கே தெரிந்த விடயமாகும்… நீதிமன்றத்தை நாடினாலும் நீதிகிடைக்குமா என்பது சந்தேகமான ஒன்றே….ஏனெனில் வைத்தியத் தவறுகளுக்கு ஆயிரம் காரணங்கள் அவர்களால் கூற முடியும்….

யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்து 3 நாட்களுக்குப் பதில் கூறுவேன் என கணவரை சடலத்துடன் அனுப்பி வைத்துள்ளார்.

ஆனாலும் நேற்று வரை அவர் விசாரணை செய்ததாகத் தெரியவில்லை.
இந் நிலையில் சத்தியமூர்த்தியை சந்திப்பதற்காக கணவன் நேற்று முன்தினம் அனுப்பிய மின்னஞ்சலும் அதற்கு பதில் அனுப்பியுள்ள சத்தியமூர்த்தியும்…

மனைவி இறந்த சோகத்திலிருந்து கணவன் மீளெழும்ப முடியாமல் இருக்கும் நிலையில் நேற்று முன்தினம் கணவனுக்கு கோலிக்குறோஸ் தனியார் வைத்தியசாலையிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்திருந்தது.
தர்சிகாமேரி இறந்ததையே அறியாது தமது வைத்தியசாலைக்கு மகப்பேற்று செய்ய வருமாறு குறித்த வைத்தியசாலையிலிருந்து கணவனுக்கு தொலைபேசி அழைப்பு வந்திருந்தது. அதனை தந்துள்ளோம்.
சிசேரியன் செய்வதற்கு இவ்வளவு பணம் எனவும் சாதாரண மகப்பேற்றுக்கு இவ்வாறான பணம் எனவும் கர்ப்பிணிகளை பணம் காய்க்கும் இயந்திரமாக நினைத்து பண பேரம் செய்யும் நிலையில் தனியார் வைத்தியசாலைகள் காணப்படுகின்றன.
போதைப்பொருள் வர்த்தகம் யாழ்ப்பாணத்தில் ஒருபுறம் அமோகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் மக்களுக்காக மருத்துவத்தையும் மருத்துவ மாபியாக்கள் எவ்வாறு பணம் ஈட்டும் ஒரு வியாபாரமாக செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை தற்போதைய NPP அரசு கருத்தில் எடுப்பது அவசியம்…..

