புதினங்களின் சங்கமம்

*போர் வெற்றி விழா கொண்டாட்டம் கொழும்பில்!!

”தேசிய போர் வீரர்கள் நாள்” (National War Heroes Day) நாளை 19 ஆம் திகதி திங்கட்கிழமை நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்பாகவுள்ள, போரில் கொல்லப்பட்ட இலங்கை இராணுவத்தின் நினைவுத் தூபியில் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வு 2009 மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் போர் இல்லாதொழிக்கப்பட்ட நாளின் ”வெற்றிவிழா கொண்டாட்டம்” என்பதில் சந்தேகமே இல்லை.

உண்மையில் இப் போர் வெற்றியைக் கொண்டாட வேண்டியது ஜேவிபிதான் —-

ஏனெனில், 1994 இல் இருந்து 2009 மே இறுதிப் போர் வரையும் புலிகளை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று ”கங்கணம் கட்டியது” (Bracelet) ஜேவிபிதான்.

சந்திரிகா – மகிந்த ஆகியோருடன், ஜேவிபி செய்து கொண்ட ஒப்பந்தங்கள் அதனை வெளிப்படுத்தும்.

இலங்கை இராணுவம் வேறெந்த ஒரு நாட்டுடனும் போர் நடத்தவில்லை. இராணுவத்தினர் இறக்கவுமில்லை.

1920 இல் ஆரம்பித்த சிங்கள – தமிழ் முரண்பாடு, 1983 இல் இருந்து ஆயுதப் போராட்டமாக மாறிய பின்னரே, இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர், அங்கவீனமடைந்துமுள்ளனர்.

ஆகவே, 2009 மே மாதம் விடுதலைப் புலிகளை வெற்றிகொண்ட நாள் என்பது, இலங்கை ஒற்றை ஆட்சி அரசின் ”இரண்டாவது சுதந்திரம்” என்ற ஆழமான சிந்தனை மற்றும் நிலைப்பாடு சிங்கள அரசியல் தலைவர்கள் அனைவரிடமும் உண்டு.

இதைத்தான் தமிழர்களில் சிலர் புரிந்துகொள்ள மறுக்கின்றனர். அல்லது தெரிந்தும் அற்ப சலுகைக்கு அடி பணிகின்றனர் எனலாம்.

ரணில் சமஸ்டி தருவார், சஜித் நல்லவர், ராஜபக்ச நல்லவர், கோட்டாபய கெட்டிக்காரன், அநுர புரிந்துகொள்வார் என்று காலத்துக்கு காலம் வெவ்வேறுபட்ட தமிழர்கள், மாறி மாறி ஆதரவு வழங்கி, – விளக்கம் கொடுத்து – நியாயப்படுத்தி எண்பது வருட அரசியல் போராட்டத்தை காட்டிக் கொடுக்கின்றனர்.

1949 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணம் கல்லோயா குடியேற்றத்தின் மூலம் வகுக்கப்பட்ட ”இன அழிப்பு” திட்டத்தின் நீட்சிதான் இவை.

இடையில் இடம்பெற்ற முப்பது வருட போர் அத் திட்டத்திற்கு தடையாக இருந்தது. ஆனால், 2009 ஆம் ஆண்டு போர் இல்லாதொழிக்கப்பட்ட பின்னரான 15 வருடங்களில், அத் திட்டம் எத் தடையுமின்றி வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

“இலங்கை ஒற்றையாட்சி அரசு” என்ற கட்டமைப்பு – அதன் ”அரசியல் யாப்புச் சட்டங்கள்” – தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு ஒத்துவராதவை.

ஆகவே, முறைமை மாற்றம் (Systems Change) என்பதுதான் தமிழர்களின் கோரிக்கையே தவிர, ஆட்சியாளர்கள் மாற்றம் அல்ல.

சிங்கள ஆட்சியாளர்கள் எல்லோருமே வடக்கு கிழக்கை பொறுத்தமட்டில், 1949 இல் வகுக்கப்பட்ட ”சிங்களக் குடியேற்றம்” – “இராணுவ பொறிமுறை“ என்ற இரண்டு திட்டங்கள் ஊடாகவே செயற்படுகின்றனர்.

வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு வெளியே மாத்திரம், சிங்கள ஆட்சியாளர்களின் கட்சி அரசியலை காண முடியும்.

ஆகவே, தயவு செய்து ஜனநாயக வழியில் ”சர்வதேச சட்டங்கள்“ , ”சர்வதேச அரசியல்” போன்றவற்றின் ஊடாக எப்படி நகர முடியும் என்பதற்கான “பொறிமுறை கட்டமைப்பு“ ஒன்றை உருவாக்க வேண்டும்.

இதனை 2010 ஆம் ஆண்டில் இருந்து நான் மாத்திரமல்ல, புவிசார் அரசியல் வியூகங்களை எழுதுகின்ற வேறு சிலரும் வலியுறுத்துகிறார்கள்.

ஆனால்???

அ.நிக்ஸன்-
பத்திரிகையாளர்