மாவை சேனாதிராஜாவின் மறுபக்கம் இது!!
நினைவுக்கு வருவதைத்தடுக்க முடியாது. அறுபதுகளில் நடந்த சத்தியாக்கிரகப் போராட்டம். அப்போது அமிர்தலிங்கம் அவர்களும், மங்கையர்க்கரசி அமிர்தலிங்கமும் கைது செய்யப்பட்டார்கள். அதன் பின்னர் எழுபதுகளில் ஶ்ரீமா அம்மையாரின் காலத்தில் புதிய அரசியலமைப்பு, தரப்படுத்தல் போன்றவை காரணமாகக் கைது செய்யப்பட்ட தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியைச் சேர்ந்த காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன், மாவை சேனாதிராசா போன்ற இளைஞர்கள் நினைவுக்கு வருவார்கள். மாவை சேனாதிராசாவின் தமிழ் அரசு வாலிப முன்னணி, தமிழ் இளைஞர் பேரவைக் காலகட்டமும் ,அவர் பங்களிப்பும் இலங்கைத் தமிழர் போராட்ட வரலாற்றில் முக்கியமானவை. இவ்வமைப்புகளின் செயலாளராகவிருந்தவர் மாவை சேனாதிராசா.
பாடசாலை மாணவனாக இருந்த காலத்தில், எழுபதுகளில் யாழ் முற்றவெளியில் நடந்த தமிழரசுக் கட்சி, கூட்டணிக்கூட்டங்களும், மாவை சேனாதிராசா போன்ற இளைஞர்களின் உரைகளும், இளைஞர்கள் இட்ட இரத்தத்திலகக் காட்சிகளும் , சுதந்திரன் பத்திரிகைச் செய்திகளும் மீண்டும் நினைவுக்கு வருகின்றன.
ஶ்ரீமா அம்மையாரின் காலகட்டத்தில் மாவை சேனாதிராசா அவர்கள் 895 நாட்கள் சிறையிலிருந்து சிறை மீண்டபோது சுதந்திரன் பத்திரிகையில் வெளியான புகைப்படங்கள், செய்திக்குறிப்பு ஆகியவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். இவை மாவை சேனாதிராசாவின் வரலாற்றுப் பங்களிப்பினை வெளிப்படுத்தும் ஆவணங்கள் என்பதால் முக்கியமானவை.



