புதினங்களின் சங்கமம்

சிறப்பாக தாம்பத்தியம் செய்து விவாகரத்து ஆகாமல் வாழ்வது எப்படி? யாழ் இந்து கல்லுாரி மாணவர்களுக்கு பயிற்சி!!

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…
இனிவரும் காலம் யாழ் இந்துக்கல்லுாரி மாணவர்களைக் கலியாணம் கட்ட கொடுத்து வைக்க வேண்டும்…. கலப்படமில்லாத உண்மைகளுடன் கூடிய பதிவு
7X + 19y = 1000 இந்த கணக்கை செய்கை வழியுடன் செய்யவும் என யாழ் இந்துக்கல்லுாரியில் கற்கும் தரம் 10 மாணவர்களுக்கு முதலாம் தவணைப் பரீட்சையில் கொடுக்கப்பட்ட விசேட கணித வினாக்களில் ஒன்றாக வந்தது. இதே போல் மிகவும் நுட்பமான கணக்குகள் விசேட கணித வினாத்தாளில் இருந்தன. அந்த வினாத்தாளுக்கு எனது மகன் எடுத்த புள்ளி 27. 350 பிள்ளைகளுக்கு மேல் கற்கும் இவனது தரம் 10 வகுப்பில் 3 பிள்ளைகள் மாத்தரம் 50 புள்ளிகளுக்கு மேல் பெற்றார்கள். 100 பிள்ளைகளுக்கு மேல் 10ற்கும் குறைவான புள்ளிகள் பெற்றார்கள். வகுப்பு ஆசிரியர் வைத்த பெற்றோர் சந்திப்பில் இது தொடர்பாக கேள்வி கேட்டு முரண்பட்டு பின்னர் வீட்டில் வந்து மனைவி, மகனிடம் ஏச்சு வாங்கினேன்.
இவ்வாறான விசேட கணிதம், விசேட விஞ்ஞானம் போன்றவை எதற்காக யாழ் இந்துக்கல்லுாரி அதிபரின் வழிநடத்தலில் பிள்ளைகளுக்கு வைக்கப்பட்டு ஒரு சில பிள்ளைகளைத் தவிர ஏனைய அனைத்து பிள்ளைகளையும் குறித்த பாடங்களில் ஏன் பெயில் ஆக்குகின்றார்கள் என்பது தெரியாது நான் தடுமாறி நின்றேன்.
ஓரிரு வாரங்களுக்கு முன் மாணவர்களின் 2ம் தவணைப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கான பெற்றோர், அதிபர் சந்திப்பு நடந்தது. அங்கு அதிபர் உரையாற்றினார். பாடசாலையில் கல்வி கற்றல் செயற்பாடுகளுக்கு அப்பால் ஆளுமையான விடயங்களையும் மாணவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக அவரது பேச்சின் சாராம்சம் இருந்தது. அத்துடன் ஓ.எல் இல் சிற்பபு தேர்ச்சி பெறும் மாணவர்கள் ஏ.எல் பாடங்களில் கோட்டை விடுகின்றார்கள் என்பதால் அவர்களுக்கு 10ம் தரத்திலேயே ஏ.எல் பாடம் என்றால் என்ன என்பது தொடா்பாக சில கடினமான வினாக்களை தற்போதே கொடுத்து வருகின்றோம். அதுதான் விசேட கணித, விஞ்ஞானப் பரீட்சை எனவும் விளக்கம் கொடுத்தார்.அத்துடன் குறிப்பாக ஏட்டுக்கல்வி கற்று வெளியேறும் மாணவர்கள் பல்கலைக்கழகங்களி்ல் கற்று முடித்து குடும்ப வாழ்க்கைக்குள் வரும் போது கடும் சவால்களை எதிர்கொள்கின்றார்கள். பலர் விவாகரத்துப் பெறுகின்றார்கள். நல்ல பதவியில் உள்ளவர்களின் குடும்ப வாழ்க்கை சீரழிந்து போகின்றது, பிள்ளைகளுக்கு வீட்டில் அவர்களின் வேலைகளை அவர்களையே செய்ய விடுங்கள்… அவர்களின் உடுப்புத் தோய்க்காதீர்கள், அவர்களையே தோய்க்க விடுங்கள் என பல கருத்துக்களைக் கூறி சிறப்பாக உரையாற்றினார்.
50 ஆயிரத்துச் சொச்ச அரசாங்க சம்பளத்தை எடுத்துக் கொண்டு 7X + 19y = 1000 என்ற சமன்பாட்டை தீர்க்க முடியாமல் திண்டாடுவது போல் குடும்ப நிர்வாகத்தையும் அந்த சம்பளத்தை வைத்து தீர்க்க முடியாமல் திண்டாடுவது எனக்கு புரிந்தது. அதிபரின் துார நோக்கை எண்ணி வியந்தேன். எப்பேர்பட்ட சிந்தனை யாழ் இந்து அதிபருக்கு.
எனது மகனின் வகுப்பும் முன்னைய காலத்தில் யாழ் இந்துக்கல்லுாரியில் நான் கற்ற வகுப்பும் ஒரே ஆங்கில எழுத்தைக் கொண்ட பிரிவாகும். நான் கற்ற வகுப்புப் பிரிவில் எனது மகனும் கற்கின்றான் என்று சற்று சந்தோசப்பட்டாலும் அவன் என்னைப் போல காவாலி கடைப்புளியாக வந்துவிடக் கூடாது என்றும் கலவரப்பட்டேன். ஆனால் எனது மகனின் வகுப்பு வாத்தியர் மிகவும் ஆளுமை உடையவர். அவர் ஒரு கணித வாத்தியார். தான் அறிந்தவரை ஒரு நாள் கூட வகுப்புக்கு வராது இருந்ததில்லை என மகன் கூறினான். அவர் மாணவர்களின் ஆளுமை விருத்தியில் முக்கிய கவனம் செலுத்துபவர்.
சில நாட்களுக்கு முன் வீட்டில் உள்ள கழிவுப் பொருட்களில் பயனுள்ள கருவிகள் மற்றும் பொருட்களைச் செய்து கொண்டுவருமாறு அவர் எனது மகன் உட்பட்ட 40 பிள்ளைகளுக்கும் உத்தரவு இட்டார். எனது மகன் சில நாட்களாக யூரியூப் போன்ற வலைத்தளங்கள் மற்றும் தனது நண்பர்கள் போன்றவர்களிடமிருந்து அறிய முயற்சித்து வீட்டில் உள்ள கழிவுப் பொருட்களில் என்னெவெல்லாம் செய்யலாம் என்று ஆராய்ச்சி பண்ணத் தொடங்கினான். ஒரு நாள் என்னிடம் கேட்டான் ”அப்பா ஒரு ‘PVC’ குழாயும் காந்தமும் சின்ன விளையாட்டு மோட்டரும் வாங்கித் தாங்கோ. நான் ஒரு பொருள் செய்யப் போறேன் என்றான். ”டேய் உன்னை சேர் சொன்னது கழிவுப் பொருளைக் கொண்டு ஆக்கம் செய்யச் சொல்லி, நான் ஒருக்காலும் காசு தர மாட்டன்” என கூறிவிட்டேன். ”றோட்டில் மாடு போட்ட சாணியை எடுத்து எரித்துக் கொண்டு போ.. அதுதான் திருநீறு.. அதுவும் கழிவுப் பொருட்களில் செய்ததுதான்” என நான் கூறியதாலும், மகனும் வேறு பல ஆக்கங்கள் செய்ய முயன்றும் நான் அந்தப் பொருட்கள் எல்லாம் விலைக்கு வாங்க வேண்டும் என கூறி காசு கொடுக்காததாலும் அவன் எதுவும் செய்யாது நேற்று பாடசாலை போய் விட்டான்.
கணித வாத்தியார், மகன் உட்பட்ட சிலரை பாடசாலை முடிவடைந்த பின்னர் மறித்து வைத்திருந்துள்ளார். மகன் சைக்கிளில் செல்பவன். வீட்டுக்கு வர மகன் பிந்தியதால் மனைவி எனக்கு தொலைபேசி எடுத்து மகன் வரவில்லை என்று கூறினாள். நான் எனது வைபரில் இருந்த பகுதித் தலைவரின் இலக்கத்திற்கு கோல் எடுத்தேன்… ”இப்ப.இப்பத்தான் உங்கட மகன் உட்பட்டவர்களை விட்டார்கள். இதோ வருகின்றார்” என பகுதித் தலைவர் கூறி எனது பதிலையும் கேட்காது தொலைபேசியை வைத்துவிட்டார். ஏன் பிந்தி விட்டார்கள் என்று கேட்பதற்காக மீண்டும் அவருக்கு கோல் தொடர்ச்சியாக எடுத்தேன்.. அவர் பதிலளிக்கவில்லை. அவரும் குடும்பஸ்தர்தானே… அவரும் விவாகரத்து பெறாமல் குடும்பம் நடாத்துவது எப்படி என்று யாழ் இந்து அதிபரிடம் ‘கோஸ்’ முடித்து வைத்திருந்திருப்பார். மனைவி தொல்லை பண்ணினால் மௌனமாக வாயை மூடி இருப்பதே சிறந்தது என்பது போல் இவனோட கதைச்சால் விசர் வரும் என்று நினைத்து எனது தொலைபேசிக்கு அழைப்பு எடுக்கவில்லை.
மணி பி.ப 2.30 யாழ் இந்துக்கல்லுாரிக்கு ஓடினேன். அதிபர் இருந்தார். கதைத்தேன். முரண்பட்டேன். அதிபர் சலிக்காமல் புன்முறுவலுடன் பதில் தந்து கொண்டிருந்தார். என்னைப் போல எத்தனை அப்பா, அம்மாக்களின் ஆக்ரோசத்தை கண்டிருப்பார் அவர்… ”அட பாவி.. உன்ர மனிசி ஒருக்காலும் உன்னை விட்டு ஓடிப்போகாதுடா..” என்று எனக்குள் நினைத்துக் கொண்டு வடிவேலு போல மெதுவாக வெளியேறிவிட்டேன். 😌🥰நான் அதிபரிடம் போனது மகனுக்குத் தெரியாது.
நேற்று பாடசாலையால் வந்த மகன் வீட்டில் வந்து பொரியத் தொடங்கினான். நான் மெதுவாகக் கூறினேன்… ”டேய் உனக்கு உன்ர கணித வாத்தி கணிதம் மாத்திரம் கற்பிக்கவில்லை… அவர் வாழ்க்கையை கற்பிக்கின்றார். 40 பேர் வீட்டில் உள்ள கழிவுப் பொருட்களைக் கொண்டு 40 விதமான பிரயோசனமான உற்பத்திப் பொருட்கள் செய்வது என்பது முடியாத காரியம்.” ஆனால் கட்டாயம் ஏன் அப்படி செய்யச் சொல்கின்றார்?… எங்கட வீட்டையே எடுத்துக் கொள்ளு.. என்ர நிலையைப் பார்.. எல்லாப் பக்கத்தாலும் அழுத்தம் வந்து நான் நொந்து நுாலாகி ‘முடியல’ என்று வடிவேலு சொல்வது போல் சொல்லி நின்றாலும் உன்ர அம்மாவை விவாகரத்துச் செய்யாமல் இருக்கிறன்.. உங்களை விட்டு இன்னொருத்தி கூட ஓடிப் போகாமல் இருக்கிறன்… இதுதான்டா வாழ்க்கை… இதைத்தான் உன்ர கணித வாத்தியார் செய்கிறார். நீயும் என்னைப் போல சிறந்த குடும்பஸ்தனா வருவாய் என்று கூற மகனும் மனைவியும் காதுக்குள் இரையத் தொடங்கினார்கள். மெதுவாக மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியேறினேன்.
நேற்று இராத்திரி மகனும் மனைவியுமா என்னை ஏசி ஏசி ஏதோ பொச்சுத்தும்பையும் பசையையும் வைத்து செய்து கொண்டிருந்தார்கள். நான் நித்திரை போல் கிடந்துவிட்டேன். விடிய மகன் சொன்னான்.. ”அப்பா உங்களை வந்து கிளாஸ் ரீச்சர் சந்திக்கச் சொன்னவர்” என்று சொன்னான். நான் சில நேரம் வர முடியாது. ஒப்பீஸ் விசயமா பருத்துறை போக வேணும். வராட்டியும் அவருக்கு ரெலிபோனில் சொல்கின்றேன் என கூறிவிட்டு அவன் போன பின் பல தடவைகள் வாத்தியாருக்கு ரெலிபோன் எடுத்தேன்… பதில் இல்லை.. இன்று மத்தியாணம் 2 மணிக்கு பள்ளிக்கூடத்தால மகன் வந்தான். ” சேர் என்னவாம்” என்று கேட்டேன்… ஒரு கதையும் கதைக்காது அம்மாவிடம் போனான்… ” அப்பாவுக்கு விசர் என்டு எங்கட சேருக்கு தெரிஞ்சிட்டது…உவர் நேற்று போய் ஏதோ சண்டை பிடிச்சிருக்கிறார் ” என்று மட்டும் சொல்லிவிட்டு சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். திரும்ப ஏதாவது கதைத்தால் மனைவியும் சேர்ந்து இரைவாள் என்று தெரிந்து புறப்பட்டு விட்டேன்.
வேம்படி பள்ளிக்கூடத்தில இந்த வருசம் ஓ.எல் பரீட்சையில் நுாற்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் 9 ஏ எடுத்துள்ளார்கள். யாழ் இந்துக்கல்லுாரியில் 54 பேர் மாத்திரமே எடுத்துள்ளார்கள். யாழ் இந்துவில் படித்த மாணவர்கள் ஏன் குறைவான 9ஏ எடுத்தார்கள் என்றால் அவர்கள் ஆங்கில இலக்கியம், சிங்கள மொழி போன்ற கடினமான பாடங்களை எடுத்த காரணத்தால் மாத்திரமே. சில வேலை ஆங்கில இலக்கியம் மற்றும் கடினமான பாடங்கள் கற்பிக்கும் யாழ் இந்துக்கல்லுாரி ஆசிரியர்களும் விவாகரத்தாகாமல் குடும்பம் நடாத்துவது எப்படி என்பது தொடர்பாகவே பிள்ளைகளின் ஆற்றல்களை மேம்படுத்துபவர்களாக இருக்கலாம்.
வேம்படி, இந்துமகளீர் கல்லுாரி, சுண்டுக்குழி போன்ற பாடசாலைகளில் கற்கும் மகன் வயதுக்கு கீழ் உள்ள மாணவிகளின் பெற்றோர் இந்தப் பதிவைப் பார்த்தால் குறித்து வையுங்கள். யாழ் இந்துக்கல்லுாரியில் அதிபர் செந்தில்மாறன் இருக்கும் காலத்தில் கற்ற ஆண் பிள்ளைகள் சிறந்த மாப்பிளைகளாக உங்கட பிள்ளைகளுக்கு வருவார்கள். யாழ் இந்துக் கல்லுாரி மாணவர்களை விட கூடிய அளவு கல்வி கற்று சிறந்த உத்தியோகத்தில் உங்கள் பிள்ளைகள் இருப்பார்கள். உங்கள் பிள்ளைகளின் அறிவு ஆற்றலுக்கு இணையாக இல்லாவிட்டாலும் யாழ் இந்துக்கல்லுாரி மாணவர்கள் உங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த துணைவராக இருப்பார்கள். அந்த அளவுக்கு யாழ் இந்துக்கல்லுாரியில் சகிப்புத்தன்மை உட்பட சிறப்பான ஆளுமைகளுடன் கூடிய மாணவர்கள் உருவாக்கப்படுகின்றார்கள். உங்கட பெண் பிள்ளை காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டு என்ன வேலை சொன்னாலும் யாழ் இந்துக்கல்லுாரியில் கற்ற மாப்பிளை என்றால் வெக்கப்படாது, கூச்சப்படாது, கோபப்படாது செய்து முடிப்பான். விவாகரத்து என்பது கனவிலும் நடக்காது…
பொம்பிளைப் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோரே…. காத்திருங்கள் உங்கள் மகள்களுக்கு தங்கப்பவுணான மாப்பிளைகள் யாழ் இந்துக்கல்லுாரியில் புடம் போட்டு தயாராகிக் கொண்டு இருக்கின்றார்கள். 😇😇😇
நல்ல குருநாதன் நம்மை வருத்துவது கொல்லவல்லக் கொல்லவல்ல நம் பொல்லாப் பிணி அறுக்கவே.. 🥰