வடக்கு ஆளுநர் அலுவலகத்திற்குள் நடந்தது என்ன? அநுரா அரசுக்கு அல்வா தீத்தப் போகும் வடக்கு அதிகாரிகள்!!
வடக்கில் உள்ள அரச அதிகாரிகளில் குறிப்பிடத்தக்க சிலர் ஒரு வீதமேனும் நிர்வாகத் திறமை அற்றவர்கள் என்பது தமக்குத் தெரியும் என அநுராவின் கட்சி முக்கியஸ்தர் ஒருவர் மூத்த ஊடகவியலாளர் ஒருவருடன் தொடர்பு கொண்ட போது கதைத்துள்ளாராம். அந்த கட்சி பிரமுகர் பாவம். அவருக்கு எங்கட மாகாண அதிகாரிகள் சிலரின் நரித்தனம் தெரியாது. அநுரா ஜனாதிபதியாக வந்த பின்னர் அனுராவினால் நியமனம் செய்யப்பட்ட ஆளுநருக்கே அல்வா தீத்தியுள்ளார் ஆளுநர் செயலர் நந்தகோபன். ஆளுநர் நாகலிங்கம் வேதநாகம் அவர்கள் நிர்வாக நடவடிக்கைக்குப் புதியவர் அல்ல. அவர் மூத்த நிர்வாக அதிகாரி. அத்துடன் நேர்மையானவர் என்று பெயர் எடுத்தவர். ஆனால் அவருக்கு நரித்தனம் என்பது கட்டாயம் தேவை. ஆனால் அது வேதநாயகத்திடம் அறவே இல்லை என்று சொல்லலாம். நரித்தனம் என்பது என்னவென்றால் தனது எதிரிகளுக்கு குழி வெட்டி தந்திரமாக அதற்கு விழ வைப்பது மட்டுமல்ல… தனக்கு எதிரிகள் வெட்டும் குழியை அறிந்து அதற்குள் விழாமல் இருக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். அதுவும் ஒரு நரித்தனம் தான். அந்த நரித்தனம் இல்லாதபடியால்தான் வேதநாயகம் யாழ் அரச அதிபராக நின்று பிடிக்க முடியாமல் யாழ்ப்பாண அரசியல்வாதிகள் சிலரின் முயற்சியால் அகற்றப்பட்டார்.
ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் அவர்கள் பதவியேற்ற அன்றே, ஆளுநர் அலுவலகத்தில் கடமையாற்றிய 3 அலுவலர்களுக்கு உடனடி இடமாற்றம் கொடுக்கப்பட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் இடமாற்றம் கொடுப்பது தேர்தல் விதிமுறை மீறல் என்பதும், அந்த விதிமுறைகளை முன்னைய ஆட்சி நடாத்தியவர்கள் மீறியது போல் அநுரா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆளுநர் மீறுவது, அநுரா அரசாங்கத்தின் மீது நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும் ஒரு செயல் என்பதுக்கு அப்பால், அவர்களுக்கு ஏன் இடமாற்றம் கொடுக்கப்பட்டது? யாரால் கொடுக்கப்பட்டது என்பது, வடிவேலு நகைச்சுவை போல் சில சம்பவங்களின் தொடர்ச்சியே என தெரியவந்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் அரச உயர் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்படும் ஊழல் முறைகேடுகள்,நிர்வாகத் துஸ்பிரயோகங்கள், பாலியல் லஞ்சங்கள் போன்றவற்றை நீதியான முறையில் அவர்களின் உயர்பீடத்திற்கு எவ்வாறு முறையிடுவது என்பது தொடர்பாக பலருக்கும் தெரியாத நிலை இருந்து வந்தது. வடக்கு மாகாண ஆளுநராக இருந்தவர்களிடம் முறையிடுவதற்கு முயன்றாலும் அங்கு இருக்கும் ஆளுநரின் செயலாளர் குறித்த அணுகுண்டு போன்ற பாரதுாரமான முறைப்பாட்டை பெற்று அதனை புஸ்வாணமாக்கியே ஆளுநரிடம் கொண்டு போய் சேர்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.
உதாரணமாக ஒரு ஆசிரியை மீது ஒரு கல்வி அதிகாரியோ அல்லது அதிபரோ கண் வைத்து பாலியல் தொல்லைகள் கொடுத்தால் அதை ஆளுநருக்கு முறையிடச் சென்றால் அங்கு கடமையில் இருக்கும் நிர்வாக அதிகாரி அந்த முறைப்பாட்டைப் பெற்று சில வேளை ஆளுநருக்கு சொல்லாமல் மறைத்துவிடுவார். அல்லது ஆளுநருக்கு வேறு விதமாக கூறி குறித்த ஆசிரியையே குற்றவாளி என்று கூறும் அளவுக்கு மாற்றியமைத்துவிடுவார்.
இவ்வாறான நிலையே ஆளுநர் அலுவலகத்தில் தொடர்ச்சியான செயற்பாடாக இருந்துவந்தது. இந் நிலையில் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட ஜீவன் தியாகராஜா அவர்களின் காலத்தில் ஆளுநரின் செயலாளராக வாகீசன் நியமிக்கப்பட்டார். அவரது காலத்திலேயே ஆளுநருக்கு நேரடியாக புகார்களை தெரிவிக்கும் ”அபயம்” என்ற ஒரு பிரிவு ஆளுநர் அலுவலகத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது. ஆளுநருக்கு வரும் முறைப்பாகளைப் பெறும் குறித்த பிரிவு அதனை வகைப்படுத்தி நேரடியாக ஆளுநருக்கு தெரிியப்படுத்த தொடங்கியது. இதன் தொழிற்பாடு அடுத்ததாக நியமிக்கப்பட்ட திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் காலத்திலும் தொடர்ந்தது. இந்த அபயம் என்ற பிரிவினால் வடக்கில் தவறு செய்யும் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளானார்கள். ஏனெனில் ஆளுநர் செயலகத்தில் நந்திபோல் இருக்கும் ஆளுநரின் செயலாளர் எப்படியும் தங்களுக்கு உதவுவார் என எண்ணிக் கொண்டிருந்தவர்களுக்கு இது பெரும் சிக்கலைக் கொடுத்தது. பெரும்பாலும் ஆளுநரின் செயலாளர்கள் தமக்கு கீழ் உள்ள அதிகாரிகள் விடும் நிர்வாக, ஊழல், துஸ்பிரயோகத் தவறுகளை மூடிமறைப்பதிலேயே குறியாக இருப்பது வழமை. இதனால் வடக்கு மாகாண நிர்வாகக் கட்டமைப்பின் ஆளுமையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.
முன்னாள் ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களே நந்தகோபனை ஆளுநர் செயலாளராக கொண்டு வந்ததார். அவர் ஆளுநரின் செயலாளராக வந்த போது, அப்போதைய ஆளுநரின் செயலாளராக இருந்த வாகீசனின் கீழ் கடமையாற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர் சோமசுந்தரம் சிவசுந்தரம் ஜீவன் தியாகராஜாவால் ஆரம்பிக்கப்பட்ட அபயம் பிரிவில் பல செய்பாடுகளைச் செய்து வந்துள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த அபயம் பிரிவு வழமை போல் சாள்ஸ் அவர்களுக்கும் குறித்த பிரிவுக்கு வரும் முறைப்பாடுகளை நேரடியாக கையளித்து நடவடிக்கை எடுத்து வந்தது. இதனை ஆளுநரின் செயலாளராக இருந்த நந்தகோபனால் தடுக்க முடியாது போனது.
குறிப்பாக கல்வித்துறையில் நடக்கும் துஸ்பிரயோகச் செயற்பாடுகள் மற்றும் பாலியல் லீலைகள், பழிவாங்கல்கள் போன்ற பெருமளவு செயற்பாடுகள் ஆளுநரின் நேரடிக் கவனத்துக்கு நந்தகோபன் என்ற நந்தியின் தடை இல்லாது கொண்டு செல்லப்பட்டு அவற்றில் சிலவற்றுக்கு தீர்வும் பெற்றுக் கொடுக்கப்பட்டது. இதனால் கடுப்பான நந்தகோபன் தனது பத்திரிகை நண்பனான வலம்புரி ஆசிரியர் விசர்ச் சுந்தரம் என்று ஏனைய ஊடகச்செயற்பாட்டாளர்களால் அழைக்கப்படும் விஜயசுந்தரத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார். விஜயசுந்தரமும் தொண்டர் ஆசிரியராக டக்ளஸ்தேவானந்தாவால் நியமிக்கப்பட்டு பின்னர் நிரந்தரநியமனம் பெற்று அதே டக்ளஸ்தேவானந்தாவின் தயவால் அதிபர் பரீட்சை எடுக்காமலே நியமன அதிபர் சேவைக்குள் உள்வாங்கப்பட்ட ஒருவர். பல தடவைகள் அதிபர்களுக்கான பரீட்சை எடுத்து பெயிலான ஒருவர் என ஊடகத்தரப்பால் கூறப்பட்டு வருகின்றது. வலம்புரிப் பத்திரிகை ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக பல செய்திகளையும் ஆசிரியர் தலையங்கங்களையும் பிரசுரிக்கத் தொடங்கியது. இந் நிலையில் வலம்புரிப் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தி்ற்கு எதிராக ஆளுநர் தரப்பு பொலிசில் முறையிட்டது. இது தொடர்பாக ஊடகச் செயற்பாட்டாளர்கள் அதிருப்தி அடைந்தார்கள். வலம்புரிப் பத்திரிகைக்கு எதிராக ஏன் ஆளுநர் தரப்பால் முறைப்பாடு செய்யப்பட்டது என்பது தொடர்பாக ஆளுநர் தரப்பு தமது இணையத்தளத்தில் விளக்கம் கொடுத்திருந்தது. கீழே உள்ள இணைப்பில் விபரம் உள்ளது.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதி மாறினார். வடக்கு ஆளுநரும் மாறினார். கடந்த மாதம் 27ம் திகதி வெள்ளிக்கிழமை ஆளுநர் வேதநாயகம் வடக்கு ஆளுநர் அலுவலகத்திற்கு வந்தார். அடுத்த இரு நாட்களும் விடுமுறை நாட்கள். 30ம் திகதி ஆளுநர் செயலகத்தில் ஆளுமை மிக்கவராக செயற்பட்டு அபயம் பிரிவை இயக்கி வந்த சோமசுந்தரம் சிவசுந்தரம் என்ற அபிவிருத்தி உத்தியோகத்தர் உடனடியாக இடமாற்றப்பட்டார். அதற்கு முழுக்காரணமும் ஆளுநரின் செயலார் நந்தகோபனின் நரித்தனம் என தகவல்கள் வெளியாகின. நந்தகோபன் எப்படி ஆளுநரிடம் கூறி குறித்த சிவசுந்தரத்தை இடமாற்றியிருப்பார் என்பது அவருக்கே வெளிச்சம்.
சிவசுந்தரம் ஆளுநர் செயலகத்திற்கு இடமாற்றம் பெற்று வந்தது இரு வருடங்கள் ஆகாத நிலையில் உடனடி இடமாற்றம் பெற்றார். சிவசுந்தரம் தொடர்பாக வடக்கு மாகாணசபையில் அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது. வடக்கு மாகாணசபையில் கடமையாற்றும் ஏராளமான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கு அவர்கள் கேட்கும் நேரங்களில் தடைதாண்டல் பரீட்சைக்கான விளக்கங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு மனம் கோணாமல் விளக்கம் கொடுப்பவர். அத்துடன் நேரடியாக தவறுகளைச் சுட்டிக்காட்டியும் செயற்படுபவர் என்று சிவசுந்தரம் தொடர்பாக மாகாணசபை அலுவலர்கள் பலர் தெரிவித்துள்ளார்கள். அவர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
கடந்த திங்கள் சிவசுந்தரம் இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர் வலம்புரிப் பத்திரிகை ஆசிரியர் தலையங்கத்தில் அபயம் பிரிவினை தாறுமாறாக விமர்சித்து தனது பழிவாங்கும் கொலை வெறியை தீர்த்துக் கொண்டார் வலம்புரி ஆசிரியர் விசர்ச்சுந்தரம். குறித்த வலம்புரிப் பத்திரிகை தொடர்பாக வடக்கு மாகாண இணையத்தளத்தில் விளக்கமாக கருத்து எழுதிக் கொடுத்தது சிவசுந்தரம் என்ற சந்தேகத்திலேயே வலம்புரி விசர்ச் சுந்தரம் தொடர்ச்சியாக கொலை வெறியில் செயற்பட்டு வந்ததாக தெரியவருகின்றது.
அத்துடன் வடக்கு மாகாண காணித் திணைக்களத்தின் கீழ் செயற்பட்டு ஆளுநர் செயலகத்தில் இணைப்பு பெற்று கடமையாற்றி வந்த சிவப்பிரியா என்ற பெண் நிர்வாக அதிகாரியும் உடனடியாக இடமாற்றப்பட்டார். அவர் எதற்காக இடமாற்றப்பட்டார் என்பதும் நந்தகோபனுக்கே வெளிச்சம் என ஆளுநர் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களுடன் முன்னாள் ஆளுநரின் சாரதியும் இடமாற்றப்பட்டுள்ளார். குறித்த சாரதி முன்னாள் ஆளுநருடன் நெருக்கமானவர் என்றும் முன்னாள் ஆளுநரின் தனிப்பட்ட தேவைகளுக்கான வாகனச்சாரதியாகவும் கடமையாற்றியவர் எனவும் ஆளுநருக்கு பாதுகாப்பு கடமைகளுக்காக வழங்கப்பட்ட வாகனத்தையும் குறித்த சாரதி செலுத்தி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் குறித்த சாரதி தனது இடமாற்றத்தை ஏற்காது எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் தெரியவருகின்றது.
தற்போது வடக்கு ஆளுநர் மக்கள் சந்திப்பை திங்கட்கிழமை அல்லது புதன் கிழமை என்று பாராது தொடர்ச்சியாக மக்களின் குறைகளை நேரடியாக கேட்டுப் பெறத் தொடங்கியுள்ளதாக சந்தோசமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
வடக்கு மாகாணசபையில் கடமையாற்றும் அப்பாவி உயர் அதிகாரிகள் மற்றும் ஏனைய அப்பாவி ஊழியர்கள் அனைவருக்கும் நரித்தனம் என்பதை எப்படிப் பாவிக்க வேண்டும் என்பது தொடர்பாக வடக்கு மாகாணசபையின் கீழ் இயங்கும் ஆளணி மற்றும் பயிற்சி நிலையத்தின் ஊடாக சிறப்பான செமினார் ஒன்றை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவைக் கொண்டு நடாத்த வேண்டும் என ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள் அப்பாவி வடக்கு மாகாணசபை உத்தியோகத்தர்கள்.

