பட்டதாரிகள் நியமனத்துக்கு எதிராக நீதிமன்றத்தை நாடும் வெளிவாரிப்பட்டதாரிகள்… பட்டதாரி நியமனம் தாமதமாகலாம்….
அரசாங்கத்தால் விரைவில் வழங்கப்படவுள்ள பட்டதாரிகள் நியமனத்தில் தாம் பழிவாங்கப்படுவதாக
குறிப்பிட்டு, வெளிவாரி பட்டதாரிகள் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர்.
அரசாங்கத்தால் வழங்கப்படும் நியமனங்களில் தாம் புறக்கணிக்கப்படுவதாக குறிப்பிட்டே
நீதிமன்றத்தை நாட இன்று முடிவு செய்துள்ளனர்.
இம்முறை நாடளாவிய ரீதியில் 16,000 பட்டதாரிகளிற்கு நியமனம் வழங்க அரசாங்கம் முடிவு
செய்துள்ளது. இதற்கான பெயர்ப்பட்டியல் பிரதேச செயலகங்களிற்கு தற்போது அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.
இம்முறை உள்வாரி பட்டதாரிகளிற்கே நியமனம் வழங்கப்படவுள்ளது. கடந்தமுறை பட்டதாரிகளிற்கு
நியமனம் வழங்கப்பட்டபோதும், உள்வாரி பட்டதாரிகளே நியமனம் பெற்றனர்.
வெளிவாரியாக 2012ம் ஆண்டின் பின் பட்டம் பெற்றவர்களிற்கு இதுவரை அரச நியமனம்
வழங்கப்படவில்லை. அரசாங்கம் வெளிவாரி பட்டதாரிகளை புறக்கணிக்கிறதா?, வெளிவாரி
பட்டதாரிகளிற்கு அரச நியமனம் இல்லையெனில் எதற்காக வெளிவாரி பட்டப்படிப்பு கல்வி
நிறுவனங்களை அனுமதிக்கிறது என வெளிவாரி பட்டதாரிகள் நீண்டகாலமாக கேள்வியெழுப்பி வந்தனர்.
இம்முறை வழங்கப்படும் பட்டதாரி நியமனத்திலும் உள்வாரி பட்டதாரிகளே நியமனம்
பெறுகின்றனர். யாழ் மாவட்டத்தில் 1249 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 179 பேரும் பட்டம்
பெறுகின்றனர்.
இந்தநிலையில், இன்று மாலை அவசரமாக யாழில் ஒன்றுகூடிய வெளிவாரி பட்டதாரிகள், தமக்கு
நியமனம் வழங்கப்படாததை எதிர்த்து நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர். அடுத்த
சிலநாட்களில்- இந்தவார இறுதிக்குள்- வெளிவாரி பட்டதாரிகள் சார்பில் 10 பேர் வழக்கு
தாக்கல் செய்வார்கள் என தெரிகிறது.

