புதினங்களின் சங்கமம்

மாத்தளையில் சிறுவர் காப்பகத்திலிருந்து காணாமல் போன மூன்று சிறுமிகள் மீட்பு!

மாத்தளை பிரதேசத்தில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றிலிருந்து காணாமல் போயிருந்த மூன்று சிறுமிகள் கெக்கிராவ, கிரானேகம பிரதேசத்தில் வைத்து இன்று (29) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தளை பிரதேசத்தில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றிலிருந்த மூன்று சிறுமிகள் காணாமல் போயுள்ளதாகக் குறித்த சிறுவர் காப்பகத்தின் உரிமையாளரால் கெக்கிராவ பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த சிறுமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 17 வயதுடைய சிறுமியும், 09 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகளுமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சிறுமிகள் மூவரும் தற்போது கெக்கிராவ பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளின் பின்னர் அவர்கள் சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்கப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.