புதினங்களின் சங்கமம்

திருகோணமலையில் 25 வயது வினோதினி காதலனால் கொல்லப்பட்டது எப்படி? காதலன் உட்பட 7 பேர் கைது.!

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட தங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த யுவதியின் காதலனான பிரதான சந்தேக நபர் மூதூர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் இன்று திங்கட்கிழமை மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை நாளை செவ்வாய்கிழமை வரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த படுகொலைச் சம்பவம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை ஆறு சந்தேக நபர்கள் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு கடந்த சனிக்கிழமை மூதூர் நீதிவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே குறித்த பிரதான சந்தேக நபரான படுகொலை செய்யப்பட்ட யுவதியின் காதலன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மூதூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை குறித்த யுவதியின் காதலன், காலனின் தந்தை, சகோதரி அவரது வீட்டில் வேலை செய்தவர், உட்பட JCB வாகன சாரதி இருவருமாக ஏழுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் கிராமத்தைச் சேர்ந்த நடேஸ்குமார் வினோதினி (வயது-25) என்ற யுவதி காணாமல் போயிருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (6) பாழடைந்த கிணறு ஒன்றில் கல்லோடு கட்டி போட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இதன்போது அவருடைய ஆவணங்கள் அடங்கிய கைப்பை, உடைந்த தலைக்கவசம் என்பனவும் மீட்கப்பட்டிருந்தன.

குறித்த யுவவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தபோது தலைப்பகுதி தாக்கப்பட்டு மண்டையோடு உடைந்திருந்ததாகவும், தலையின் பிற்பகுதியில் பாரிய துளை இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் காதலனின் வீட்டில் இருந்து தாக்குதலுக்கு பயன்படுத்தியிருக்கலாம், என்ற சந்தேகத்தில் இரும்புக்குழாய் உட்பட சில சான்றுப் பொருட்களையும் மீட்டுள்ளனர்.