புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாண கலாச்சாரம்!கலியாண வீடு, சாமத்திய வீடுகளில் சாப்பாட்டு பார்சல் கட்டிக் கொண்டு போபவர்கள் மட்டும் வாசிக்கவும்!!

இது வேதநாயகம் தபேந்திரனின் ஆக்கம் (பதிவு) Copy Copy Copy.
எமது உணவுப் பண்பாட்டில் சீர் திருந்த வேண்டிய ஒன்று பார்சல் கட்டுதலாகும். மண்டபக் கொண்டாட்டங்களில் வெட்கம் பார்த்துப் பார்சல் கட்டுதல் பெரிதாக நிகழ்வதில்லை.
ஆனால் வீடுகளில் நிகழும் கொண்டாட்டங்களில் அல்லது உணவு பரிமாறும் சடங்கு முறைகளில் பார்சல் கட்டுதல் பெரும் தலையிடி தரும் ஒன்றாக உள்ளது.
நிகழ்வுக்கு வந்தோரில் பெரும்பான்மையானோர் உணவை உண்ட பின்பாகப் பார்சல் கட்டுதல் நிகழ்ந்தால் சமாளிக்கலாம்.
ஆனால் ஆள்கள் சாப்பிடும் போதோ, சாப்பிடுவதற்கு முன்பாகவோ பார்சல் கட்டுதல் பரவலாக நிகழும் போது வந்திருந்தோர்களுக்கே சாப்பாடு இல்லாத நிலைமையைப் பல இடங்களில் கண்டுள்ளேன்.
வீட்டுக்காரர் வாயில்லாப் பூச்சிகளாக இருந்தால் சொல்லத் தேவையில்லை.
தனி ஒருவர் உண்ணும் அளவை விட மூன்று மடங்கு உணவு நிகழ்வுக்கு வராத தனி ஒருவருக்காகக் கட்டப்படுதலைக் கண்டுள்ளேன்.
கெடுவில் கட்டிய சாப்பாட்டின் மிச்சம் நாய்,பூனைக்கோ ஆடு மாடுகளுக்கோ அல்லது மண்ணுக்குள் போகும் பரிதாபத்தைக் கண்டுள்ளேன்.
பார்சல் கட்டும் சிலர் மனிதாபிமானம்,நேர்மையைக் கடைப்பிடிப்பதில்லை.
இறைச்சிக் கறி சோறு சாப்பாடாயின் இறைச்சியை முதலில் அள்ளிப் போட்டு அதன் மேல் சோறு போட்டு பிறகு அதன் மேலும் இறைச்சியைப் போட்டு களவாடிப் பார்சல் கட்டும் களவாணிகளும் உண்டு. சில இடங்களில் வெறும் குழம்புடன் உண்ட அனுபவமும் எனக்குண்டு.
மனச்சாட்சிப்படி நேர்மையாக வாழ வேண்டும்.
ஒரு இரவுக் கொண்டாட்டத்தில் இவ்விதம் உணவு முடிந்தால் எங்கே தேடுவது? எங்கே ஓடுவது?
தான் மட்டும் வாழ்ந்தால் போதுமென்ற சுயநலமிகள் அதிகம் நிறைந்து வாழும் வாழ்வியலில் அகப்பட்டுப் போனோம்.
சில இடங்களில் பார்சல் கட்டி உணவுப் பிரச்சினை ஏற்படுவதைத் தடுப்பதற்காக வீட்டுக்காரரே அளவான பார்சலைக் கட்டி வருகை தந்தோருக்குக் குடும்பத்திற்கு ஒரு பார்சல் வீதம் கொடுப்பதைக் கண்டுள்ளேன்.
அவித்த முட்டை, உழுந்து வடை போன்றவற்றை ஒரு பார்சலுக்குள் நாலைந்து கட்டி விடும் சூரர்களையும் கண்டுள்ளேன்.
தமக்கு மட்டுமே வாய் உள்ளதென்ற சுயநலம். விளைவு தொற்றாத நோயில் விரைவில் விழுந்து விடுவார்கள்.
கெடுப்பட்டுப் பார்சல் கட்டுவோரை அவதானித்திருக்கிறேன் உணவுப் பஞ்சத்தில் வளர்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கே இப் பழக்கம் பெரும்பாலும் உண்டு.
காணி பூமியில் தன்னிறைவாக வாழ்ந்த குடும்பத்து நிகழ்வுகளில் பார்சல் கட்டும் கெலிப் பழக்கத்தைக் காண முடிவதில்லை.
எது எப்படியோ வீடுகளில் உணவு பரிமாறும் நிகழ்வுகளுக்குச் சென்றால் தேவைப்படின் மனச்சாட்சிப்படி பார்சல் கட்டுங்கள்.
பஞ்சம் போகும் பஞ்சத்தில் பட்ட வடுப் போகாது என்பார்கள். பிறர் கேலியாகக் கதைத்து மரியாதையை இழக்காதீர்கள்.
உணவுப் பாதுகாப்பில் அக்கறையைச் செலுத்துங்கள். தன்னிறைவான இலங்கைத் திருநாட்டைக் கட்டி எழுப்பலாம் நண்பர்களே.