புதினங்களின் சங்கமம்

சிங்கள பட்டதாரி இளம் ஆசிரியை போதைப்பொருளுடன் பிடிபட்டது எப்படி?

இளம் யுவதியான பாடசாலை ஆசிரியையொருவர் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டபோது கையும் மெய்யுமாக சிக்கியுள்ளர்.

நிட்டம்புவ நகரில் வைத்து அவரும், தாயாரும் கைது செய்யப்பட்டனர்.

கம்பஹா, வெயாங்கொட, கொரச பிரதேசத்தில் வசிக்கும் இளம் ஆசிரியையொருவர் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக வெயாங்கொடை பொலிஸ் நிலைய லஞ்ச ஒழிப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆசிரியை இ-காஷ் முறையில் பணம் பெறுவதையும், அடையாளம் காணப்பட்ட குறிப்பிட்ட இடங்களில் வெவ்வேறு அளவுகளில் ஹெரோயின் போதைப்பொருள் பக்கெட்டுகளை மறைத்து வைத்து, வாங்குபவர்களிடம் ஒப்படைக்கிறார் என்றும் பொலிசாருக்கு தகவல் கிடைத்திருந்தது.


பட்டதாரி ஆசிரியையான அவர், நீர்கொழும்பில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் உயர்தர சிங்கள பாடத்தை கற்பித்து வருகின்றார்.அவருக்கு வயது 28.

இந்த ஆசிரியையின் தந்தையும் போதைப்பொருள் வியாபாரி. அவர் அண்மையில் போதைப்பொருளுடன் பெமுல்லை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதையடுத்து, தனது தந்தையின் வாடிக்கையாளர்களையும் கவனிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

தந்தையின் வாடிக்கையாளர்களை கவனிக்க, தனியாக பல இடங்களுக்குச் செல்லும் போது அம்மாவுடன் சென்று வந்துள்ளார்.

எவருக்கும் சந்தேகம் வராத வகையில் தனது மோசடியை மேற்கொண்ட இந்த பட்டதாரி, தனது நடவடிக்கைகளை பொலிசார் பார்த்துக் கொண்டிருப்பதை அறியவில்லை. எனவே, அவர் தன் இஷ்டம் போல் தன் மோசடியை சுதந்திரமாக நடத்தி வந்தார்.

கடந்த 10ஆம் திகதி நிட்டம்புவ, மல்வத்த பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான ஆசிரியையும், தாயாரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே பொலிஸார் அவர்களை சுற்றிவளைத்தனர்.

சந்தேகநபர்கள் இருவரையும் பரிசோதித்த போது, ​​பாடசாலை ஆசிரியையிடம் 2300 மில்லிகிராம் ஹெரோயினும், அவரது தாயிடம் 4500 மில்லிகிராம் ஹெரோயினும் இருந்ததை பொலிஸ் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

ஆசிரியை 01 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயின் பொதிகளை தயாரித்து நிட்டம்புவ, திஹாரிய, மல்வத்தை, கொரசே உள்ளிட்ட பிரதேசங்களில் மிக நுணுக்கமாக ஈஷி காஷ் முறையில் பணத்தை பெற்றுக் கொண்டு விற்பனை செய்துள்ளார். பணத்தை செலுத்தியவர்களுக்கு போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடம் குறிப்பிடப்படும். போதைப்பொருளை மறைத்து வைப்பதற்காக வேறு நபர்களை பணியில் அமர்த்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடங்கள் குறித்த குறிப்புகள் அடங்கிய குறிப்பேடு மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பனவும் வெயங்கொட பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபரான ஆசிரியரின் தந்தை வொயங்கொட பிரதேசத்தில் பிரபல போதைப்பொருள் வியாபாரி எனவும், ஹெரோயின் கடத்தல் குற்றச்சாட்டில் சில நாட்களுக்கு முன்னர் பெமுல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை மாணவர்களுக்கு இவ்வாறு போதைப்பொருள் விநியோகம் செய்யும் நடவடிக்கையில் இந்த ஆசிரியரும் ஈடுபட்டாரா என்பது தொடர்பிலும் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பட்டதாரி பாடசாலை ஆசிரியை மற்றும் அவரது தாயாரை வயங்கொடை பொலிஸார் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் விளக்கமறியலில் வைக்குமாறு அத்தனகல்ல பிரதான நீதவான் மஞ்சுளா கருணாரத்ன உத்தரவிட்டார்.