கண்டி விகாரைக்குள் வைத்து ஆமிக்காரனை அடித்துக் கொன்றவர்கள் யார்? நடந்தது என்ன?
கண்டி, கெட்டம்பே, தியாகப்பனதோட்டை பௌத்த விகாரை வளாகத்தில் வைத்து நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மெனிகின்னவைச் சேர்ந்த சமில சுதீர ரத்நாயக்க (43) என்ற முன்னாள் இராணுவ சிப்பாயின் சடலத்தை ஆலயத்தின் வாகனம் நிறுத்துமிடத்தில் இருந்து பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
அவர் கோயிலில் திருட முயன்றதாகக் கூறப்படுகிறது. வாகனம் நிறுத்துமிடத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஹெல்மெட்டை போலீசார் கண்டுபிடித்தனர். இறந்தவர் கோயிலுக்கு வர மோட்டார் சைக்கிளை பயன்படுத்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பலரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை உயிரிழந்தவரின் உடலில் காணப்பட்ட காயங்களிலிருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதிகாலை 3.30 மணியளவில் குறித்த நபர் ஆலய வளாகத்திற்குள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் கயிறுகளால் கட்டப்பட்டு பல மணி நேரம் கொடூரமாக தாக்கப்பட்டதாக தெரிகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் விகாரையில் இருந்து எவரும் பொலிஸாருக்கு அறிவிக்கவில்லை எனவும், இது சந்தேகத்திற்குரிய செயலாகவே கருதப்படும் எனவும் கண்டியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விகாரை வளாகத்தில் போலீஸ் சோதனை சாவடியும் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த நாளில் கடமையில் இருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர், சத்தம் கேட்டு விசாரித்த போது, பலர் மற்றொருவரை அடிப்பதைக் கண்டதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
விகாரை பிரதமகுரு உட்பட பலரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.