வவுனியாவில் தடுக்கப்பட்ட பாரிய ரயில் விபத்து ; இருந்தும் சில உயிர்கள் மாய்ந்தன
வவுனியாவில் இன்று மாலை 5மணியளவில் கொழும்பிலிருந்து யாழ் நோக்கிச் சென்ற ரயிலுடன் மாடு மோதியதில் பாரிய விபத்துச்சம்பவம் ஒன்று ரயில் சாரதியின் சாதுரியத்தினால் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் பலமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று மாலை 5மணியளவில் தாண்டிக்குளம் கொக்குவெளி இராணுவமுகாமிற்கு முன்பாகவுள்ள ரயில்க்கடவையில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகளுடன் புகையிரதம் மோதியுள்ளது. இதன்போது பல மாடுகள் உயிரிழந்து துண்டுகளாகின. இந்நிலையில் மாடு ஒன்று ரயிலின் பிரதான கட்டுப்பாட்டு இயந்திரத்திற்குள் சிக்கிக்கொண்டுள்ளது.
தண்டவாளத்திற்கு பொருத்தப்பட்டிருந்த தடுக்கைகள் ரயில்ப்பாதையில் காணப்பட்டன. ரயில் சரிந்து வீழ்ந்திருக்குமாயின் பலர் விபத்தை எதிர்நோக்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என்றும் தெரியவருகின்றது.
இதனால் குறித்த ரயில் நகர முடியாமல் தண்டவாளத்திலிருக்கின்றது. மாட்டை வெளியே எடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை படையினருடன் இணைந்து பொதுமக்களும் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் பிரதான கண்டி வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது இதனைப்பார்வையிடுவதற்காக பலர் தமது வாகனங்களை வீதியின் அருகே நிறுத்திவிட்டுச் சென்று ரயிலுக்குள் சிக்குண்ட மாட்டை வெளியே எடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் இடம்பெறவிருந்த பாரிய ரயில் விபத்து ஒன்று ரயில் சாரதியினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் ரயிலில் பயணித்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக காப்பாற்றப்பட்டுள்ளார்கள். ஒன்றரை மணித்தியாலய நேரத்தாமதத்தின் பின்னர் ரயில் தனது சேவையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.