புதினங்களின் சங்கமம்

ஆளுநராக பொறுப்பேற்பவர்கள் குடிப்பழக்கத்தை நிறுத்துங்கள்!! வடக்கு மாகாண ஆளுநரும் அதே கொள்கையுடன்!!

வடக்கு மாகாண ஆளுநராக பொறுப்பேற்ற ஜனவரி ஏழாம் திகதி முதல் நான் குடியை
விட்டுவிட்டேன் என வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

நேற்று (25) கிளிநொச்சியில் இடம்பெற்ற தேசிய போதை தடுப்பு வாரத்தின் வட மாகாண
நிகழ்வில் கலந்துகொண்ட விழிப்புணர்வு வாகன பேரணியின் இறுதியில் கிளிநொச்சி மத்திய
கல்லூரி மைதானத்தில் கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு
தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னர் நான் Social Drink- அதாவது விருந்துபசாரங்களில் கலந்து கொண்டால் மட்டும் மது
அருந்துவதுண்டு. அது எனது நண்பர்களுக்கு தெரியும். ஆனால் ஆளுநராக பொறுப்பேற்ற ஜனவரி
ஏழு முதல் எந்தவொரு குடியையும் தனிப்பட்ட ரீதியாகவோ, பிரத்தியேகமாகவோ கையில்
எடுத்தது கிடையாது. இதுவொரு போராட்டம். இந்த போராட்டத்தை முடிக்கும் வரை நாங்கள்
சத்தியவான்களாக இருக்க வேண்டும். காலையில் ஒன்றை சொல்லி மாலையில் ஒன்றை செய்யக்
கூடாது. எனவே போதை என்ற பிசாசுக்கு எதிராக நாம் ஒன்று சேர்ந்து போராடுவோம் எனவும்
தெரிவித்தார்.

இந்தநிகழ்வில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் வவுனியா அரச அதிபர்கள்,
வடக்கு மாகாண பிரதம செயலாளர், அமைச்சின் செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள், பொலீஸ்
மற்றும் இராணுவத்தினர், உத்தியோத்தர்கள். உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.