புதினங்களின் சங்கமம்

யாழில் மனைவியின் வீட்டுக்கு முகமூடி அணிந்து வந்து பெற்றோல் குண்டு எறிந்து மனைவியின் தாயையும் வெட்டியது கணவரா? நடந்தது என்ன?

அச்சுவேலி, பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தி, வீட்டிலிருந்த பெண்ணை வெட்டிவிட்டு தப்பிச் சென்ற ஆறு சந்தேக நபர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

ஆறு சந்தேக நபர்களில் ஒருவர் புதன்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புத்தூரைச் சேர்ந்த 24 வயதுடையவர் ஆவார்.

இத்தாக்குதல் செவ்வாய்க்கிழமை (18) இரவு இடம்பெற்றுள்ளது.

முகத்தை துணியால் மறைத்தவாறு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் குறித்த வீட்டில் ஜன்னல் கதவு என்பவற்றை அடித்து உடைத்து பெட்ரோல் குண்டு வீசி வீட்டின் பல பொருட்களை எரித்து சேதமாக்கியுள்ளனர்.

பின்னர் வீட்டிலிருந்த 42 வயதான பெண்ணை வாளால் வெட்டி காயப்படுத்தியுள்ளனர். அந்த பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

காயமடைந்த பெண்ணின் மகள் கணவனை பிரிந்து, அவருடன் வசிப்பதால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டை தாக்க வந்த ஆறு சந்தேக நபர்களில் மகளின் கணவரும் உள்ளடங்குவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.