யாழில் குழந்தை பெற்று 6 நாளான இளம் குடும்பப் பெண்ணை தும்புத்தடியால் அடித்து துவைத்த கணவனுக்கு நடந்த கதி!!
குழந்தை பிரசவித்து ஆறு நாட்களேயான குடும்பப் பெண்ணை அடித்து சித்திரவதை செய்த குற்றச்சாட்டில், அவரது கணவரான 26 வயதான இளம் குடும்பத் தலைவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
உர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசித்த சந்தேகநபர், பொலிஸ் நியமனம் கிடைத்ததும் களுத்துறை பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு சிங்கள யுவதியொருவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். பின்னர் இருவரும் ஊர்காவற்றுறை திரும்பி, குடும்பம் நடத்தியுள்ளனர்.
பொலிஸ் சேவையையும் கைவிட்டு, கூலி வேலைக்கு இளைஞன் சென்றுள்ளார்.
கடந்த வாரம் மனைவிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் குழந்தை பிறந்து 6வது நாள். அன்று இரவு நிகழ்வொன்றிற்கு செல்வதற்காக தயாராகியுள்ளார்.
இதற்கு மனைவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனக்கு இங்கு உறவினர்கள் இல்லையென்றும், குழந்தை பிரசவித்த 6வது நாளில் தன்னை தனித்து விட்டு செல்ல வேண்டாமென்றும் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞன் மனைவியை தாக்கியுள்ளார். பின்னர் தரதரவென வீட்டுக்கு வெளியில் இழுத்துச் சென்று, நடுவீதியில் வைத்து தும்புத்தடியினால் கொடூரமாக தாக்கியுள்ளார்.
இதனால் அந்தப் பெண்ணுக்கு குருதிப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனினும், அவரை வீதியிலேயே விட்டுவிட்டு, கணவன் நிகழ்வுக்கு சென்றுவிட்டார்.
இதையடுத்து அயலவர்கள் தலையிட்டு அந்தப் பெண்ணை வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் முறைப்பாட்டுக்கு அமைய, அன்று இரவே கணவன் கைது செய்யப்பட்டார். நேற்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.