புதினங்களின் சங்கமம்

யாழ் மருதனாமடம் சந்தியில் உயர்சாதி ஆண், பெண்களை இறக்கி நையப்புடைத்த ஈ.பி.ஆர்.எல்.எப் போராளிகளின் கதை இது!!

1988ம் ஆண்டு காலப்பகுதி. இந்தியன் இராணுவத்தினர் யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் நிலை கொண்டிருந்த நேரம். சமாதானப்படையினராக வந்த இந்தியன் ஆமி புலிகளுக்கு எதிராக தாக்குதல் நடாத்தி யாழ் குடாநாடு உட்பட வடக்கு கிழக்கை ஆக்கிரமித்து நின்றனர். 1985ம் ஆண்டு இறுதிப் பகுதியிலிருந்து ஆரம்பித்த புலிகள் மற்றும் ஏனைய இயக்கங்களுக்களுக்கிடையேயான சகோதர யுத்தத்தில் புலிகளின் கை ஓங்கி, ஏனைய இயக்கங்கள் ஓடி ஒளிந்தனர். இந்தியன் ஆமி யாழ்ப்பாணம் வந்த பின்னர் மீண்டும் யாழில் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.

இயக்கங்கள் ஆரம்பித்த காலப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தில் 95 வீதமான போராளிகள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். குறித்த இயக்கத்தின் தலைமைகள் உயர்சாதிகளில் இருந்தாலும் பெருமளவான போராளிகள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள்.

இந்தியன் ஆமி யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டிருந்த போது குறித்த ஈ.பி.ஆர்.எல்.எப் போராளிகளே விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் எனக் கருதப்படுபவர்களை தீர்த்துக் கட்டியும் சித்திரவதை செய்து கொண்டிருந்த நேரம் அது. இந்தியன் ஆமியின் அனுசரனையுடன் யாழில் நிலை கொண்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் போராளிகளின் பெரிய முகாம் ஒன்று கே.கே.எஸ் வீதியில் மருதனாமடம் சந்தியில் இருந்தது. அந்த காலகட்டத்தில் காங்கேசன்துறை – யாழ்ப்பாணம் போக்குவரத்து வழிப் பாதையில், தனியார் பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள், பஸ் முதலாளிகளாக இருந்தவர்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கே மிகவும் மரியாதையான காலமாக இருந்தது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு சொந்தமான பஸ்களில் ஏறினால் மருதனாமடம் முகாமில் இருக்கும் போராளிகளின் ”செக்கிங்” இற்கு உள்ளாக வேண்டிய நிலைமை ஓரளவுக்கு இல்லாதிருந்தது.

உயர்சாதிக்காரர்களுடைய பஸ் அந்த வழியால் வந்தால் அந்த பஸ்சை நிறுத்தி அதில் வருபவர்களை கடும் சோதனைக்கு உள்ளாக்குவார்கள் குறித்த முகாம் போராளிகள். குறித்த போராளிகளுக்கு யார்,யார் தங்களுக்கு ஆதரவானவர்கள் யார், யார் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்பது தெரியும். சில வேளை தாழ்த்தப்பட்டவர்களின் பஸ்களில் பிரயாணம் செய்யும் உயர்சாதிக்காரர்கள் அல்லது அந்த வீதியால் பயணம் செய்யும் உயர்சாதி என அவர்களால் அறியப்பட்டவர்கள் போராளிகளின் கண்களில் பட்டால் அவர்களை இறக்கி பச்சை மட்டையால் அடித்து அபிசேகம் செய்த பின்னரே அங்கிருந்து அனுப்புவர். இவ்வாறான நிலையில் உயர்சாதிக்காரர்கள் மருதனாமடம் சந்தியால் செல்வதைத் தவிர்த்து உடுவில் தோட்ட வெளிகளுக்கூடாகவே யாழ் நகர் மற்றும் ஏனைய இடங்களுக்கு செல்வதை வழமையாகக் கொண்டிருந்தனர்.

அவ்வாறான சிக்கலான காலகட்டத்தில் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லுாரியில் உயர்தர விஞ்ஞானப்பிரிவில் கற்று வந்த உயர்சாதி மாணவன் யாழ் நகரப்பகுதி ரியூசனில் விஞ்ஞான பாடம் கற்பதற்காக அந்த வழியால் செல்லும் தனியார் பஸ்சில் சனி, ஞாயிறு தினங்களில் செல்வதை வழமையாகக் கொண்டிருந்தான். அத்துடன் அவன் ஏற்கனவே ஓ.எல் படித்த காலகட்டத்தில் சுன்னாகம் பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு திறமை மிக்க ஆங்கில ஆசிரியரிடமும் ரியூசனுக்கு சென்று வந்தவன். அதனால் அப்பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்களுக்கு நன்கு அறிமுகமானவன் அந்த மாணவன்.

மருதனாமடம் சந்தியில் நிற்கும் போராளிகள் சனி, ஞாயிறு தினங்களில் நன்றாக சாராயம் பாவித்துவிட்டு நிற்பதை வழமையாகக் கொண்டிருந்தவர்கள். இதனால் அந்த நாட்களில் அவர்களுக்கு அறிமுகமான எந்தவொரு உயர்சாதிக்காரர்களும் அந்தப் பக்கம் தலைகாட்டுவதில்லை. அவ்வாறு காட்டினால் வடிவேலு பாணியில் அவர்கள் கும்பிட கும்பிட நையப்புடைக்கப்படுவார்கள்.

அவ்வாறான ஒரு சனிக்கிழமை குறித்த மாணவன் தாழ்த்தப்பட்டவர்களின் பஸ்சில் எறி யாழ் நகரப்பகுதியை நோக்கி செல்லத் தொடங்கினான். அவனுக்கு ஏற்கனவே தாழ்த்தப்பட்டவர்களின் பஸ்சிலேயே செல்லுமாறு பெற்றோரால் அறிவுறுத்தப்பட்டிருந்தது. மருதாமடம் சந்தியை நெருங்கியது பஸ். சாராயம் சாப்பிட்டுவிட்டு நின்ற போராளிகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சொந்தமான பஸ் என அறிந்தும் அந்த பஸ்சை நிறுத்தினர். பஸ்சின் உள்ளே ஏறி பார்வையால் அளந்து பார்த்து சிலரது அடையாள அட்டைகளை பரிசோதித்தனர்.

இதில் முக்கிய விடயம் ஒன்றை குறிப்பிட வேண்டும். அந்தக் காலத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பெயர்கள் கந்தன், செல்லன்,, சிவலை, சின்னப்பொடியன் போன்ற பெயர்களுடனேயே இள வயதானவர்களின் தந்தையின் பெயருடன் அடையாள அட்டைகள் இருக்கும். செல்லையா, கந்தையா போன்ற தந்தையின் பெயர்களுடன் காணப்படும் அடையாள அட்டைகள் உயர்சாதியுடையவர்களாக இருப்பார்கள் என்பது குறித்த போராளிகள் அறிந்திருந்தனர்.

அவ்வாறான பெயர்களை உடைய அடையாள அட்டை உள்ளவர்கள் சிலர் இறக்கப்பட்டு பூசைகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. குறித்த ஏ.எல் மாணவனுக்கு குலைப்பன் எடுக்கத் தொங்கியது. அவன் பஸ்சின் கடைசி இருக்கையில் இருந்தவன். இவ்வாறான நேரத்தில் அவனிடம் அடையாள அட்டை கேட்பதற்கு போராளி ஒருவன் முயற்சித்த போது ”அவர் என்ர மருமோன் பொடியன்” என வாகனச் சாரதியான தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அந்த புண்ணியவான் கூறியுள்ளான். சரியான சந்தர்ப்பத்தில் சரியான நேரத்தில் அவன் அவ்வாறு கூறாது விட்டிருந்தால் குறித்த மாணவனும் நையப்புடைக்கப்பட்டிருப்பான்…..
அந்த பஸ்சில் உள்ள அனைவரையும் தனது சொந்தம் என கூற முடியாது என்பது சாரதிக்கு தெரியும். அத்துடன் அவ்வாறு கூறியிருந்தால் அவனும் தாக்கப்பட்டிருப்பான்.

ஆனால் தனக்குத் தெரிந்த ஒரு பெடியன் அடிவாங்கக் கூடாது என்பதில் அந்தச் சாரதிக்கு இருந்த மனிதாபிமானத்தை என்னவென்று கூறுவது??

சாதிகள் இல்லையடி பாப்பா; குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்”

இச் சம்பவத்தை எமக்கு வாய் வழியாக கூறிய அரச திணைக்கள அதிகாரிக்கு எமது நன்றிகள்.