யாழில் தாலிக்கொடியை அடகு வைத்து தேர்தல் நோட்டீஸ் அடித்தவரின் மனைவி தற்கொலை முயற்சி!!
யாழில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது புகைப்படத்துடன் தேர்தல் நோட்டீஸ் மற்றும் கலண்டர்கள் அடித்தவரின் மனைவி தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ் வலிகாமம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரின் மனைவியே இவ்வாறு தற்கொலைக்கு முயன்றவராவார். குறித்த குடும்பஸ்தரை சனசமூகநிலையம் ஒன்றின் இளைஞர்கள் உசுப்பேற்றி கட்சி ஒன்றில் வட்டார வேட்பாளராக போட்டியிடுவதற்கு நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து அந்த குடும்பஸ்தரும் தேர்தலில் போட்டியிட மும்முரமாக களத்தில் இறங்கியுள்ளார். தனக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கும் நோட்டீஸ் அடிப்பதற்குமான செலவுக்காக மனைவியின் 7 பவுண் பெறுமதியான தாலிக்கொடியை அடகு வைத்து பணத்தை பெற்றுள்ளார். அத்துடன் நோட்டீஸ் மற்றும் கலண்டர்களும் இவரால் அச்சிடப்பட்டு அப்பகுதியில் ஒட்டப்பட்டிருந்தது. இந் நிலையில் குறித்த தாலிக்கொடி அடகு வைத்தமை தொடர்பாக மனைவிக்கும் குடும்பஸ்தருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குடும்பஸ்தர் மனைவியைத் தாக்கியதாகவும் தெரியவருகின்றது. அத்துடன் கடந்த புதன் கிழமை இரவு கடும் மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவி மற்றும் மனைவியின் சகோதரனையும் தாக்கியுள்ளார். இதனையடுத்து மனைவி அன்று இரவே அயலில் உள்ள தோட்டக்கிணற்றில் குதித்துள்ளார். இதனையடுத்து அங்கு திரண்ட அயலவர்கள் மனைவியை காயங்களுடன் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கால்கள் நடக்க முடியாத நிலையில் மனைவி சிகிச்சை பெறுவதாகத் தெரியவருகின்றது.
