பெண்களின் பாலியல் உறுப்புக்கு வெளியில் இருக்கும் பகுதி அளவில் பெரியதாக இருப்பது நோயல்ல!!
க்ளிட்டோரியஸ் எனும் பெண்களின் பாலியல் உறுப்புக்கு வெளியில் இருக்கும் பகுதி அளவில் பெரியதாக இருப்பது நோயல்ல.
இதற்கு மரபியல் தொடங்கி ஹார்மோன் குறைபாடுவரை பல விஷயங்கள் காரணமாக இருக்கலாம்.
பிரேசிலில் உள்ள சாரா ஃபெடரல் பல்கலைக்கழக மருத்துவமனை வளாகத்துடன் இணைந்துள்ள அசிஸ் சாட்டௌப்ரியண்ட் மகப்பேறு பள்ளி, க்ளிட்டோரியஸ் அளவை சரி செய்யும் இரண்டு க்ளிட்டோரோ பிளாஸ்டி அறுவை சிகிச்சைகளை அண்மையில் செய்தது.
அந்த சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களில் ஒருவரான 22 வயதான மரியாவிடம்( பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிபிசி பேசியது.
மரியாவிற்கு பாலியல் உறவின்போது க்ளிட்டோரியஸின் அளவு பெரிதாகி மிகவும் அசௌகரியத்தை ஏற்படுத்தியது. அதற்காக இந்த மருத்துவமனையில் 2021ஆம் ஆண்டு முதல் ஹார்மோனல் சிகிச்சை எடுத்து வந்ததாகக் கூறுகிறார் மரியா.
“18 வயதில் முதன்முறையாக உடலுறவு கொண்டபோது என்னுடைய க்ளிட்டோரியஸ் வழக்கத்திற்கு மாறாக பெரிதாவதைக் கண்டேன். இது என்னை மிகவும் கவலைக்குள்ளாக்கியது” என்று மரியா பிபிசியிடம் கூறினார்.
தீர்வை நாடிய மரியா
இந்தப் பிரச்னையால் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த மரியா, ஒரு நாள் தன்னுடைய வழக்கமான பரிசோதனையின்போது க்ளிட்டோரியஸ் அளவைக் குறைக்க ஏதேனும் வழி இருக்கிறதா என்று பெண்களுக்கான சிறப்பு மருத்துவரிடம் கேட்டார்.
மருத்துவர்களின் கூற்றுப்படி, இந்தப் பிரச்னை மரியாவிற்கு மரபியல் ரீதியாக இருந்தது.
எல்லா நேரமும் எனக்கு இது பிரச்னையாக இல்லை. ஆனால், உடலுறவு கொள்ளும்போது க்ளிட்டோரியஸ் வழக்கத்திற்கு மாறாக பெரிதாவதைக் கண்டேன். அதனால்தான் அதைக் குறைக்க நினைத்தேன் என்று கூறும் மரியா, அவரது பாலியல் துணை இது குறித்து எந்த அதிருப்தியையும் வெளிப்படுத்தவில்லை என்றும் இதன் காரணமாகத் தான் அதிகம் கஷ்டப்பட்டபோது அவர்தான் சிகிச்சை எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தியதாகவும் கூறுகிறார்.
அறுவை சிகிச்சை
பட மூலாதாரம், Getty Images
அதற்கான அறுவை சிகிச்சை மருத்துவர் அங்கு இல்லாததால் சில காலம் எடுத்தது.
ஸா பாலோவில் இருந்த பெண்களுக்கான சிறப்பு மருத்துவர் ஒருவர் இந்த சிகிச்சைக்காக ஏறக்குறைய 3,000கிமீ பயணித்து வருவதற்கு சம்மதித்ததால் கிறிஸ்துமஸ் மாலையில் மரியாவிற்கு அறுவை சிகிச்சை நடந்தது.
“அறுவை சிகிச்சை சிறப்பாக நடந்தது. நான் சிறப்பாகக் குணமடைந்து வருகிறேன். தற்போது முழுமையடைந்த பெண்ணாக வாழ்கிறேன். சிலருக்கு இது சிறிய பிரச்னையாகத் தெரியலாம். ஆனால், இதோடு வாழ்பவர்களுக்கு இது மிகவும் கடினம்” என்கிறார் மரியா.
க்ளிட்டோரியஸ் அளவு பெரிதாக இருப்பது பொதுவான குறைபாடுதான், இது நோயல்ல” என்கிறார், இந்த அறுவை சிகிச்சையைச் செய்த மருத்துவர் மார்செலோ ப்ராக்செடெஸ் மான்டீரோ ஃபில்ஹோ.
“இதிலிருந்து குணமடைய இரண்டு மாத ஓய்வு தேவைப்படும். ஆனால், தற்போது நான் முழுமையடைந்த பெண். இனி உடலுறவின் போது நான் சங்கடப்படத் தேவையில்லை” என்கிறார் மரியா.
நன்றி
பிபிசி