”யாழ் கச்சேரியைக்கடந்து பிரதான வீதியூடாக வந்த போது ஓர் உருவம் சரிந்து கிடந்தது”!! யாழ்ப்பபாண நிலை இதோ!!
‘யாழ் கச்சேரியைக்கடந்து பிரதான வீதியூடாக வந்துகொண்டிருந்த போது மின்சார கம்பத்தில் மோதியபடி ஒரு மோட்டார் சைக்கிள்.
அதிலே ஓர் உருவம் சரிந்து கிடக்கிறது. மதிலை நோக்கி சரிந்து கிடந்ததால் முகம் எதுவும் தெரியவில்லை. இளைஞனாக இருக்கலாம். பதறிப் போய்விட்டேன்.’
– மருத்துவர் Uthayaseelan Katkandu ??
// நேரம் இரவு பதினொரு மணியை கடந்துவிட்டிருக்கிறது. கொட்டும் கடும் மழையூடே அதிகரித்த காற்றிற்கு எதிர்த்தக்கவாறு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிகொண்டிருக்கிறேன். இடையிடையே மின்தடை வேறு. யாழ் கச்சேரியைக்கடந்து பிரதான வீதியூடாக வந்துகொண்டிருந்த போது மின்சார கம்பத்தில் மோதியபடி ஒரு மோட்டார் சைக்கிள்.
அதிலே ஓர் உருவம் சரிந்து கிடக்கிறது. மதிலை நோக்கி சரிந்து கிடந்ததால் முகம் எதுவும் தெரியவில்லை. இளைஞனாக இருக்கலாம். பதறிப் போய்விட்டேன். அந்த இருட்டுக்குள் கடும் மழை மற்றும் காற்றுக்குள் என்னால் தனியாக ஏதும் செய்துவிட முடியுமா என்று கூட எனக்கு தெரியவில்லை. புலப்படவும் இல்லை.
ஆளரவமற்றுக்கிடந்த வீதியில் வீழ்ந்து கிடப்பவர் எதனால் என்று கூட தெரியவில்லை. விபத்தாக இருக்கலாம். காற்றினால் ஏற்பட்ட மின்சார தாக்கமாக கூட இருக்கலாம். அவ்வேளையில் தனியாக உதவச் செல்வது முட்டாள்தனமாக கூட இருக்கலாம். ஆனால் அவரை தனியே விட்டுச் செல்ல மனம் கேட்கவில்லை.
வேலைக்கு சென்று வீடு திரும்பும் ஒரு மகனாக இருக்கலாம் இல்லை தந்தையாக இருக்கலாம். ஏதேனும் அவசர விடயமாக நகருக்கு வந்து திரும்பும் ஒருவராக இருக்கலாம். ஏன் குழந்தைக்கோ, வயது முதிர்ந்த பெற்றோருக்கோ மருந்து வாங்கிவர வந்தவராக கூட இருக்கலாம். ஆனால் நிச்சயமாக இவரது வரவை எதிர்பார்த்து ஒருவரோ பலரோ காத்திருப்பார்களே! அவர்களுக்காகவேனும் அவருக்கு உதவ வேண்டுமே..
1990அவசர இலக்கத்திற்கு அழைக்கிறேன். உங்கள் அழைப்பு பதியப்பட்டது. ஆம்புலன்ஸ் வண்டியினர் உங்களை அழைப்பார்கள் அவர்களுக்கு சரியான இடத்தை கூறுங்கள் அதுவரை அழைப்பில் காத்திருங்கள் என்றனர். அடுத்த நிமிடமே அழைப்பிற்கு வந்த அவசர ஊர்தி இளைஞனிடம் விடயத்தை கூறி விழுந்து கிடந்தவர் பற்றி மேலதிக தகவல்களை எனக்கும் அறியத் தாருங்கள் என்றேன்.
வீட்டிற்கு வந்து தலையை துவட்டி கொண்டே அவர்களது அழைப்பிற்காக காத்திருந்தேன். ஏறத்தாழ முப்பது நிமிடங்களில் அழைப்பு.
” சேர் போய் பாத்த நாங்கள். ஒரு வெளிக்காயமும் இல்லை. தட்டி எழுப்ப ஆள் முழிக்கிறார். ட்ரக்ஸ் அடிச்சிருக்கிறார். எண்டாலும் இந்த மழைக்க விடேல்லாது தானே! பக்கத்து கடை வாசலில கொண்டு வந்து இருத்தி விட்டிருக்கம்.”
” என்ன தம்பி செய்யலாம்”
” ஹெட் ஒஃப்பிஸ் டொக்டரோட கதைச்சனான். இவையள ஹொஸ்பிடல்ல அட்மிட் பண்ணேல்லா. இல்லாட்டி பொலிசுக்கு தான் இன்போர்ம் பண்ணோனும். இந்த பொடியன் வேண்டாம், நான் வீட்ட போவன் எண்டு சொல்லுறான். நாங்கள் அடுத்த கட்டம் என்ன எண்டு ஆலோசிச்சு முடிவவெடுக்கிறம். நன்றி சேர்”
” நன்றி தம்பி” எனது ஒற்றை பதிலுக்கு கூட காத்திராமல் அவன் அடுத்த கடமைக்கு தயாராகிவிட்டான்.
போதை தடுப்பு பற்றிய உயர் மட்ட கூட்டங்களும் விழிப்புணர்வு கருத்தரங்குகளும் கடை கோடி வீடுவரை என்றுமே எட்டுவதில்லை. இது ஓர் நாளில் தொடங்கியதல்ல. போதைப்பொருள் எனும் விதை முளைத்து, வேர்விட்டு, மரமாகி பூத்து, காய்த்து, கனியாகி, அதன் பல்லாயிரக்கணக்கான வித்துக்கள் சமூகம் முழுக்க பரம்பிவிட்டன. அவை ஒவ்வொன்றும் மரமாகி கனி உவந்து விதை பரப்ப முதல் தடுக்காவிடில் ஒரு தலைமுறையே இருக்க போவதில்லை.
ஒவ்வொரு குடும்பத்தினரும் உங்கள் உங்கள் குடும்பத்தை மாத்திரம் பார்த்து கொண்டாலே போதுமானது. சமூக விழிப்புணர்வு, சமூக மாற்றம் என்ற நிலையை இது எப்போதோ கடந்து விட்டிருக்கிறது. அரசியலும் சட்டமும் நினத்தால் ஓர் இரவில் இதனை ஒழித்து விடலாம் என்று பேசிக்கொண்டு இருக்காமல் உங்கள் வீட்டைச் சுற்றி மட்டுமே ஒவ்வொருவரும் எல்லையிட்டு காத்து நில்லுங்கள்.
ஒரு தலைமுறையை போர் தின்றுவிட இன்னோர் தலைமுறையை போதை தின்கிறது.\\
