புதினங்களின் சங்கமம்

வல்லிபுர ஆழ்வார் தேர்த் திருவிழாவில் பலரதும் கவனத்தை வெகுவாக ஈர்த்த பறவைக் காவடி(Photos)

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.வடமராட்சி துன்னாலை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழாவின் தேர்த் திருவிழா நேற்றுச் சனிக்கிழமை(08.10.2022) காலை வெகுசிறப்பாக நடைபெற்றது.

இதன்போது கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் பல எண்ணிக்கையான ஆண் அடியவர்கள் பறவைக் காவடிகள், தூக்குக் காவடிகள், ஆட்டக் காவடிகள் முதலான காவடிகள் எடுத்துத் தமது நேரத்திக் கடன்களை நேர்த்தியுடன் நிறைவு செய்தனர்.

அந்தவகையில் பருத்தித்துறை மந்திகையைச் சேர்ந்த 26 வயதான இளைஞன் ஒருவர் உடலின் பல பகுதிகளிலும் பெரிய முள்ளுகள் குத்திப் பறவைக் காவடி எடுத்து வந்த காட்சி ஆலயத்தில் திரண்டிருந்த அடியவர்கள் பலரினதும் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

இதேவேளை, நீண்ட தூரத்திலிருந்தும் அடியவர்கள் பலரும் பறவைக்காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்து வந்து தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். அளவெட்டியைச் சேர்ந்த மூன்று நண்பர்கள் ஒன்றிணைந்து பன்னாலை வரத்தலம் கற்பகப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து காவடி எடுத்து வந்தனர். மூவரில் இருவர் பறவைக்காவடியும், ஒருவர் குத்துக் கால் காவடியும் எடுத்து வந்து தமது நேர்த்திக் கடன்களை நிறைவு செய்த காட்சி பக்தியின் உயர்நிலையைப் பறைசாற்றுவதாக அமைந்திருந்தது.

(சிறப்புத் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)