புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

அகதிகளுக்கு பொலீஸார் வழங்கிய இலக்கக் காப்புகள்! ரியூனியன் தீவுக்கு வந்தோர் தடுப்பில் இருந்து விடுவிப்பு!! அவர்களில் பலர் சிங்களவர்!!

அண்மையில் இலங்கையில் இருந்து ரியூனியன் தீவுக்குப் படகில் வந்த அகதிகளை ஆரம்பத்தில் எல்லைக் காவல் படையினர் பராமரித்த விதம் குறித்துப் பிரான்ஸின் தொண்டு நிறுவனம் ஒன்று கண்டனம் வெளியிட்டுள்ளது.

அனாஃபே(Anafé) எனப்படும் எல்லைப் பகுதிகளில் ஏதிலிகளுக்காக இயங்குகின்ற பிரெஞ்சு தொண்டர் அமைப்பு, காத்திருப்பு மையங்களில் இலங்கை அகதிகளுக்குப் பொலீஸாரால் இலக்கக் காப்புகள் (bracelets with numbers) வழங்கப்பட்டு அந்த இலக்கங்களின் பெயரால் அவர்கள் அழைக்கப்பட்ட விதத்தை “மனிதத்தன்மையற்ற நடைமுறை” எனக் கூறிக் கண்டித்துள்ளது.

உதாரணமாக ஒருவருக்கு 8 என்ற இலக்கமும் அவரது பிள்ளைகளுக்கு 8A, 8B, 8C என்றும் இலக்கங்களும் வழங்கப்பட்டு அந்த இலக்கங்களின் பெயரால் அவர்கள் அழைக்கப்பட்டனர் என்று மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மாத நடுப்பகுதியில் இலங்கையில் இருந்து படகில் ரியூனியன் தீவுக்கு வந்தடைந்த இந்த அகதிகள் 46 பேரும் அவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்த வரவேற்பு நிலையங்களில் இருந்து தற்போது விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். இனிமேல் தீவின் எந்தப் பகுதிக்கும் அவர்கள் சென்றுவர முடியும். அகதிகள் மற்றும் நாடற்றவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் Ofpra என்ற பிரெஞ்சு அலுவலகம் இவர்களது தஞ்சக் கோரிக்கைகளைப் பரிசீலிக்கும். இதற்கு முன்னர் இலங்கையிலிருந்து இது போன்று படகுகளில் வந்த அகதிகளில் பெரும்பாலானவர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.

கடந்த செப்ரெம்பர் 17 ஆம் திகதி கடைசியாக வந்தடைந்த இந்த 46 பேரில் அநேகர் பெரும்பான்மையின

சிங்களவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

வெளியே செல்லவோ ஒருவரை ஒருவர் சந்திக்கவோ முடியாதவாறு

ஆரம்பத்தில் அவர்கள் காத்திருப்பு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டனர். அச்சமயம் அவர்கள் மொழி பெயர்ப்புச் சிக்கல்களை எதிர்கொண்டனர் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன. பூர்வாங்க விசாரணைகள் மற்றும் பொலீஸ் பதிவுகளின் பின்னர் தற்போது அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்ஸின் இந்து சமுத்திரத் தீவான ரியூனியன் அதிகாரிகள் இலங்கையில் இருந்து மேலும் படகுகள் அங்கு வரக் கூடும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளனர்.