புதினங்களின் சங்கமம்

யாழ் உணவகத்தில் மோதகத்துக்குள் கிடந்த அட்டை!! (video)

மோதகத்திற்குள் அட்டை:
சுகாதாரப் பிரிவில் முறையீடு

சித்தங்கேணியில் உள்ள உணவகத்தில் வாங்கிய மோதகம் ஒன்றினுள் அட்டை இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அது தொடர்பாக பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (30) வியாழக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றது.

பண்ணாகத்தில் உள்ள முன்பள்ளி ஒன்றில் கல்வி கற்கும் மாணவனுக்கு பெற்றோர், சித்தங்கேணிச் சந்தியில், சித்தங்கேணி – சங்கானை பிரதான வீதியில் உள்ள உணவகத்தில் மோதகம் வாங்கிக் கொடுத்தனர்.

குறித்த மாணவன் அதை முன்பள்ளியில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது உள்ளே அட்டை இருந்துள்ளது. அதை எடுத்து வெளியே எறிந்த மாணவன் இது தொடர்பாக ஆசிரியையிடம் கூறியுள்ளான். ஆசிரியை, மதியம் மாணவனை அழைத்துச் செல்ல வந்த பெற்றோரிடம் விடயத்தை தெரியப்படுத்தினார்.

நேரே குறித்த உணவகத்திற்குச் சென்ற பெற்றோர் இது தொடர்பாகக் கேட்டனர். தாங்கள் உணவகத்தில் மோதகம் அவிப்பதில்லை எனவும் வேறு நபர்களிடம் எடுத்தே விற்பனை செய்வதாகவும் உணவக உரிமையாளர் கூறினார்.

இதுபோன்று சில சம்பவங்கள் தொடர்பாக முன்னரும் சிலர் தங்கள் கவனத்திற்கு கொண்டுவந்தனர் எனவும், இனிமேல் இந்த விடயத்தில் கூடிய கவனம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

எனினும், இந்த விடயம் தொடர்பாக அப்பகுதிக்கான பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்வதாக அவர் கூறினார்.

உணவகங்களில் முறையான சுகாதார விதிமுறைகளைப் பேணுமாறு சுகாதாரப் பிரிவினர் அடிக்கடி கூறுகின்ற போதிலும் சில உணவக உரிமையாளர்கள் இந்த விடயத்தில் அதிக அக்கறை எடுப்பதில்லை எனவும் சுகாதாரம் பேணப்படாத உணவுகள், பழுதடைந்த உணவுகள் கூட விற்பனை செய்யப்படுவதாகவும் நுகர்வோர் அடிக்கடி குற்றஞ்சாட்டி வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

No photo description available.