யாழில் ஊடகவியலாளரைக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவர் 21 வருடங்களின் பின் லண்டனில் கைது!!
ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிமலராஜன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு 21 வருடங்கள் கடந்துள்ள நிலையில் 48 வயதான சந்தேக நபர் ஒருவரை பெருநகர பொலிஸ் போர்க்குற்ற விசாரணைக் குழு 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நார்தாம்ப்டன்ஷையரில் கைது செய்ததாக பிரிட்டிஷ் பெருநகர பொலிஸார் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றச் சட்டம் 2001 இன் பிரிவு 51 இன் கீழ் குற்றங்கள் புரிந்ததாக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டாதாக பெருநகர பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறார். இது ஒரு முக்கியமான, சிக்கலான விசாரணையின் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும் என பெருநகர பொலிஸ் பயங்கரவாத எதிர்ப்பு கட்டளை பிரிவு தலைமை தாங்கும் தளபதி ரிச்சர்ட் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
நிமலராஜன் கொலை தொடர்பாக இன்னும் சிலரிடம் தகவல்கள் இருக்கலாம். நிமலராஜன் குடும்பத்திற்கு நீதி கிடைக்க அத்தகையவர்கள் முன்வந்து உதவ வேண்டும் எனவும் அவா் கோரியுள்ளார்.
பி.பி.சி. தமிழ் மற்றும் சிங்கள சேவை உட்பட பல்வேறு ஊடகங்களில் பணியாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன், 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் 19 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இவரது படுகொலையில் அரசுடன் சேர்ந்தியங்கிய தமிழ் ஆயுதக் குழுவொன்றுக்கு தொடர்புள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டது.
நிமலராஜன் கொலை தொடர்பாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணை பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டது. பின்னர் சட்ட மா அதிபரின் ஆலோசனைக்காக கடந்த பல ஆண்டுகளாக வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தது.
இந்நிலையில் நிமலராஜன் படுகொலை வழக்கின் சந்தேகநபர்கள் 6 பேருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்துக்கு கடந்த வருடம் பரிந்துரைத்தது.
இதையடுத்து 6 சந்தேக நபர்களையும் விடுவிக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

