கொழும்பு பிரதான வீதியில் 16 வயதுச் சிறுவன் ஓடிய கார் மோதி ஒருவர் பலி!! பலர் படுகாயம்!!
கொழும்பு நீர்கொழும்பு பிரதான வீதியில் இன்று (04) காலை இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலிருந்து நீர்கொழும்பு திசையாகப் பயணித்த அதிசொகுசு மகிழுந்து ஒன்று, வீதியை விட்டு விலகி, எதிர் திசையில் பயணித்த இரு உந்துருளிகளையும், முச்சக்கரவண்டியொன்றையும், மகிழுந்து ஒன்றையும் மோதியுள்ளது.
பதினாறு வயதான இளைஞர் ஒருவர் செலுத்திய சொகுசு மகிழுந்து ஒன்றே இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் குறித்த மகிழுந்து வீதியை விட்டு விலகி விபத்தை ஏற்படுத்தியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் உந்துருளியொன்றில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ள அதேவேளை, அவருடன் பயணித்த மற்றுமொருவர் பலத்த காயமடைந்த நிலையில் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

