புதினங்களின் சங்கமம்பெண்கள்

உனக்கு இப்படி சொட்டு சொட்டாக பால் வருது. எனக்கெல்லாம் எப்போது வேண்டுமானாலும் நிறைய சுரக்கும்!!

“மற்றவர்கள் கூறுவது சரியா? தவறா?” என்று யோசிப்பதற்கு கூட, பொறுமை இல்லா மனநிலையில் இருந்த நாட்களில் அது..! “குழந்தை பிறக்கும் வரை, நம்மை விழுந்து விழுந்து கவனித்த, ஒட்டுமொத்த கூட்டமும், பிறந்த பின்பு அப்படியே மாறி விடும்.”

அப்பப்பா எத்தனை பேச்சுக்கள்!!! அவை அனைத்தையும் சொல்லிமாளாது..! இதை செய்யாதே, அதை செய்யாதே! நாங்கள் பிள்ளைப் பெற்ற வலியிலும், எத்தனை வேலைகளை செய்தோம் தெரியுமா? ஒரு குழந்தைக்கே இப்படியா? இந்தப் பால் எப்படி குழந்தைக்கு பத்தும்? நாலு ஐந்து குழந்தைகளை, பெற்று எடுத்தது போல பேசாதே!!! இப்படி எத்தனையோ கேள்விகளும், பேச்சுக்களும், அம்புகள் போல மனதை துளைத்துக் கொண்டே இருந்தது. ஆனால் அவை அனைத்துக்கும், பதில் கூற தான், எனக்கு பொறுமை இருந்ததில்லை.

குழந்தை பிறந்த சில நாட்களில், அனைத்து அம்மாக்களும் கட்டாயம், நான் கூறப்போகும் இந்த பிரச்சனையில், சிக்கி தவித்து இருப்பார்கள். உடல் சோர்ந்து போய் படுத்திருக்கும் போது, குழந்தை பசியால் அழுதால், படுத்துக்கொண்டே பால் கொடுக்கலாம் என்று நினைத்தால்.., யாராவது ஒருவர் வந்து, “படுத்துக் கொண்டு பால் கொடுக்கக்கூடாது, எழுந்து அமரு” என்று கூறிவிட்டு செல்வார்! சரி யென்று உட்கார்ந்து கொண்டு கொடுக்கும் போது, சில நிமிடங்களிலேயே குழந்தை தூங்கிவிடும்! “கீழே படுக்க போட்டால், மீண்டும் அழத்தான் செய்வாள்” என்று மடியிலேயே படுக்க வைத்து இருந்தால், “குழந்தை மடி சுகம் கண்டு விடும்! கீழே போடு” என்று ஒருவர் சொல்லிவிட்டு செல்வார். “சரி கீழே போடலாம்!” என்று நினைத்து குழந்தையை தூக்கும் போது, மற்றொருவர் வந்து “கொஞ்ச நேரம் கூட, பால் குடிக்க வில்லை! இது எப்படி குழந்தைக்கு பத்தும்?” என்று குறை சொல்லி விட்டு செல்வார். அந்த நேரத்தில் “நான் என்னதான் செய்வது??? யார் சொல்வதை தான் கேட்பது???” என்று சத்தம்போட்டு அழ தான் தோன்றும்! பல நாட்கள் அது போன்று, நான் கதறி அழவும் செய்திருக்கிறேன்..!

இதே போன்ற ஒரு சூழ்நிலையில், நான் அழுது கொண்டிருக்கும் போது நடந்த, இன்னொரு சம்பவம் எனக்கு நன்கு நினைவிருக்கிறது! ஏதோ ஒரு தேவைக்காக, தாய்ப்பால் வேண்டும் என்று, ஒரு அக்கா என்னிடம் வந்தார்! நான் அப்பொழுதுதான் குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு, கீழே படுக்க வைத்தேன். அவர் வந்து என்னிடம் பாலாடையை நீட்ட, நானும் வேறு வழியில்லாமல், எவ்வளவோ சிரமப்பட்டு, பாலை வரவைக்க நினைத்தும், அது வரவில்லை! அதற்கு அந்த அக்கா என்னை பார்த்து “என்ன இது! உனக்கு இப்படி சொட்டு சொட்டாக பால் வருது. எனக்கெல்லாம் எப்போது வேண்டுமானாலும் நிறைய சுரக்கும். என் உடையே நனைந்து விடும் அடிக்கடி. நீ இவ்வளவு பலவீனமாக இருக்கிறாய். இப்படி இருக்கும்போது, எப்படி குழந்தைக்கு வயிறு நிறைய பால் கொடுப்பாய்? கஷ்டம்தான்!” என்று கூற, எனக்கு பயங்கரமாக கோபம் வந்துவிட்டது. இருந்தாலும் அவர்களிடம் எதுவும் கூற முடியாமல், மனதுக்குள்ளே புலம்பும் படி ஆகிவிட்டது..!

அன்பான உறவுகளே! மதிப்பிற்குரிய சுற்றத்தினரே, புதிதாக தாயான பெண்களிடம் பேசும்போது, தயவு செய்து அவருடைய மனநிலை அறிந்து பேசுங்கள். நீங்கள் சரியான விஷயத்தை, நல்லது என்று நினைத்து கூறினாலும், அதை கொஞ்சம் நல்லவிதமாக கூறுங்கள்!

நன்றி

லாவன்ஜா பேஸ்புக் பதிவு