புதினங்களின் சங்கமம்

இலங்கையின் விமான நிலையங்களுக்கு தாக்குதல் எச்சரிக்கை; பாதுகாப்பு அதிகரிப்பு!

கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தளை , மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் மீது தாக்குதல் ஒன்று நடாத்தப்படலாம் என கிடைக்கப் பெற்றதாக கூறப்படும் தகவல் ஒன்றுக்கு அமைய, அவற்றின் பாதுகாப்பு நேற்றுத் தொடக்கம் திடீரென மேலதிக படையினர் கொண்டு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தென்னிலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் நேற்று (14) இரவு விமான நிலையத்துக்கு கிடைக்கப் பெற்றதாக கூறப்படும் மின்னஞ்சல் ஒன்றுக்கு அமைய இந்த விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவயிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அது குறித்த எந்த தகவலும் தன்னிடம் இல்லை எனவும், தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்ட விவகாரம் என்பதால் கிடைக்கும் அனைத்து தகவல்களும் ஊடகப் பேச்சாளருடன் பகிர்ந்துகொள்ளப்பட வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும் உறுதிப் படுத்தப்படாத தகவல் ஒன்றாக குறித்த தகவல் கிடைக்கப் பெற்றிருப்பினும், முன் கூட்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளின் நிமித்தம் இவ்வாறு விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.