யாழ் பல்கலைக்கழக வரலாற்றில் முதல் முறையாக இராணுவம் செய்த அலங்கோலம்!! கலைப்பீட மாணவர் தலைவர் கூறுவது என்ன?!!
இத்தனை வருட யாழ். பல்கலைக்கழக வரலாற்றில் இராணுவத்தினராக இருந்தாலும் சரி பொலிஸாராக இருந்தாலும் சரி பல்கலைக்கழகத்திற்குள் இதுவரை உள்நுழைந்ததில்லை. இதனை மாணவர் ஒன்றியமோ அல்லது பல்கலைக்கழக நிர்வாகத்தினரோ ஏற்றுக்கொண்டதுமில்லை என யாழ். பல்கலையின் கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை யாழ். பல்கலைக்கழகத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் ஆகியோர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பான விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று யாழ். ஊடக அமையத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரது அலுவலக அறையினை சோதனையிட்டபோது அங்கு தேசியத் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.
இதற்கு எதிராக தலைவரையும் செயலாளரையும் கைது செய்துள்ளனர். எமக்கு முற்பட்ட 10, 15 மாணவர் ஒன்றியங்கள் அந்த புகைப்படத்தை வைத்துள்ளனர்.
சோதனையில் ஈடுபடபோவதாக தெரிவித்ததும், இராணுவத்தினர் மாணவர்களின் நலன் கருதி வெடிகுண்டுகள் தொடர்பான சோதனையை நடத்துவார்கள் என எண்ணியிருந்தோம்.
அந்த புகைப்படம் எம்மால் வைக்கப்பட்டதல்ல என நாங்கள் தெரிவித்தபோதும் தலைவரையும் செயலாளரையும் கைது செய்துள்ளனர். அவர்கள் தலைவராக இருந்தாலும் கூட அவர்களும் மாணவர்களே. ஆனால் இதை அவர்கள் பெரும் பொருட்டாக எடுப்பதில்லை. எனவே மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு இதனை பெரிதுபடுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம்.
எந்த தவறும் செய்யாத குறித்த இரு மாணவர்களும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும்.
பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தில் உயர்மட்டத்தில் இருப்பவர்கள் எவரும் இந்த விடயத்தில் கரிசனை செலுத்தவில்லை. அது மிகவும் மன வேதனை அளிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.