யாழில் வீடு புகுந்து காவாலிகள் பெரும் அட்டூழியம்: சிக்கிய சிசிரிவி காட்சிகள் (VIDEOS, PHOTOS)
யாழ்.சுன்னாகம் மேற்குப் பகுதியில் ஜே- 199 கிராம சேவகர் பிரிவில் ஐயன்னா வீதியில் அமைந்துள்ள வீடொன்றிற்குள் நேற்றுச் சனிக்கிழமை(20) இரவு வாள்களுடன் சென்ற இனம் தெரியாத குழு பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றது.
மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
சுன்னாகம் தாளையம்பதி ஸ்ரீ அரிகர புத்திர ஐயனார் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந் திருவிழா கடந்த வியாழக்கிழமை(18) ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில் ஆலயத்தின் மூன்றாவது நாள் உற்சவமான முத்துச் சப்பர உற்சவம் நேற்று இரவு இடம்பெற்றது.இந்த நிலையில் குறித்த பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் ஆலய உற்சவத்திற்குச் சென்ற சமயம் பார்த்தே இரவு வேளையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
குறித்த வீட்டில் வசித்து வந்த இளைஞனும் ஆலயத் திருவிழாவுக்குச் சென்ற நிலையில் வீட்டில் மூன்று பேர் நின்றுள்ளனர்.
இந்தநிலையில் இரண்டு மோட்டார்ச் சைக்கிள்களில் கறுப்புத் துணிகளால் தங்கள் முகங்களை மறைத்துக் கொண்டு ஹெல்மெற் அணிந்து ஆறு பேர் கொண்ட குழுவினர் வந்துள்ளனர்.
அவர்களில் மோட்டார்ச் சைக்கிள் செலுத்தி வந்த இருவர் மாத்திரம் வெளியே நிற்க ஏனைய நால்வரும் மேற்படி பகுதியிலுள்ள வீட்டுக்குள் வேகமாக அத்துமீறி உள்நுழைந்தனர். அவர்களில் ஒருவன் மதிலேறிப் பாய்கின்றான் .
வீட்டிலிருந்த மூவரும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த நிலையில் குறித்த குழுவினர் வீட்டின் முன்பக்க யன்னல் கதவுகளை வாள்களால் பலமாக அடித்து உடைத்ததுடன் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார்ச் சைக்கிள்களையும் உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனர். அத்துடன் வீட்டின் முன்பாக வைக்கப்பட்டிருந்த கதிரைகளையும் அடித்து நொறுக்கினர். வீட்டின் முன்பாக எரிந்து கொண்டிருந்த மின்விளக்கையும் குறித்த குழு விட்டு வைக்கவில்லை.
இந்நிலையில் சத்தம் கேட்டு வீட்டின் குடும்பப் பெண்மணி வீட்டிற்குள்ளிருந்தவாறு வெளியே எட்டிப் பார்த்துள்ளார். அப்போது குறித்த குழுவினர் போத்தலுக்குள் கொண்டு வந்த பெற்றோலைக் குறித்த பெண்ணின் முகத்தின் மீது சடுதியாக வீசியுள்ளனர். அதனைத் தொடர்ந்து எட்டிப் பார்த்த வீட்டின் குடும்பத் தலைவனின் முகத்தின் மீதும் பெற்றோல் வீசப்பட்டது. இதனால் அவர்கள் இருவருக்கும் முகத்தில் எரிவு உண்டானது.
வீட்டில் உள்ளவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாதவாறு தாம் கொண்டு வந்த பெற்றோலை வீட்டின் முன்பக்கத்தில் வீசித் தீ மூட்டிய குறித்த குழுவினர் வீட்டின் முன் கேற்றையும் வாள்களால் வெட்டிக் கடுமையாகச் சேதப்படுத்தியுள்ளனர். பின்னர் வீட்டின் முன்பாக வைக்கப்பட்டிருந்த ஹெல்மெற்றையும் எடுத்துக் கொண்டு குறித்த குழுவினர் அங்கிருந்து தப்பிச் சென்றனர். வீட்டிலிருந்தவர்களின் அவலக் குரல் கேட்டு அயல் வீட்டைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் ஓடி வந்த நிலையில் குறித்த குழுவைச் சேர்ந்தவர்கள் வாள் காட்டி மிரட்டியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி சம்பவம் தொடர்பில் உடனடியாகச் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன் பின்னர் வீட்டு உரிமையாளர்களால் நேற்று இரவே நேரடியாகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டது.
குறித்த சம்பவம் வீட்டின் முன்பாகப் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி காணொளியில் பதிவாகியுள்ள நிலையில் சுன்னாகம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, இதுபோன்றதொரு சம்பவம் மேற்படி பகுதியில் இதுவரை பதிவாகாத நிலையில் இச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . சுன்னாகம் பொலிஸார் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பிரத்தியேக சிசிரிவி காணொளியையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
(நேரடி ரிப்போர்ட், காணொளிகள் மற்றும் படங்கள்:- சுன்னாகத்திலிருந்து எஸ். ரவி)

