புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

எரியும் தீயில் எண்ணையை ஊற்றுவது போன்ற செயற்பாடு தமிழர்களின் பேரணி!! சவேந்திரசில்வா!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில், எரியும் தீயில் எண்ணையை ஊற்றுவது போல் இலங்கை அரசுக்கு எதிராகப் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி சில தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டது இவ்வாறு கவலையுடன் தெரிவித்தார் இராணுவத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா.

தமிழ்பேசும் மக்கள் மீதான இலங்கை அரசின் அடக்குமுறைகளைக் கண்டித்தும் சர்வதேசத்திடம் நீதி கோரியும் கடந்த 3ஆம் திகதி முதல் நேற்று 7ஆம் திகதி வரை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. இதில் பல பத்தாயிரம் தமிழ்பேசும் மக்கள் பங்கேற்று தங்கள் உணர்வலைகளை வெளிப்படுத்தினர்.

இந்தப் போராட்டப் பேரணி குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு இராணுவத் தளபதி இன்று வழங்கிய செவ்வியின்போதே மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டே, வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

கடந்த சில நாட்களாக நடைபெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் நடைபெற்ற இவ்வாறான போராட்டங்கள் ஒரு சில தரப்பினரின் குறுகிய நோக்கத்துக்காகவே ஏற்பாடு செய்யப்பட்டன.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில், எரியும் தீயில் எண்ணையை ஊற்றுவது போல் இலங்கை அரசுக்கு எதிராக இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்பதால் இது போன்ற போராட்டங்கள் – பேரணிகள் – ஆர்ப்பாட்டங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

இருப்பினும் கொரோனா வைரஸ் தொற்றின் தற்போதைய நிலையைக் கருத்தில்கொண்டு சுகாதார நடைமுறைகளை மீறியவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்” – என்றார்.