காணி சுவீகரிப்பை நிறுத்தி வேலணை பிரதேச செயலாளர் திடீர் இடமாற்றம்!
காணி சுவீகரிப்பை தற்காலிகமாக இடைநிறுத்திய வேலணைப் பிரதேச செயலருக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மண்கும்பான் மண்டைதீவு உள்ளிட்ட பல இடங்களிலும் கடற்படையினரின் தேவைகளுக்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் நோக்கில் நில அளவைத் திணைக்களத்தினால் அளவீட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இந்நிலையில் அங்கு விரைந்த அரசியல்வாதிகளும் பொதுமக்களும் காணி உரிமையாளர்களும் இணைந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.
மண்டைதீவில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போதும் வேலணைப் பிரதேச செயலகத்தின் முன்பாக நடைபெற்ற போராட்டத்தின் போதும் போராட்டக்காரர்களை நேரடியாக சந்தித்த பிரதேச செயலர் சோதிநாதன் மக்களினது இத்தகைய எதிர்ப்புகள் காரணமாக காணி அளவீட்டு பணிகளை தற்காலிகமாக இடை நிறுத்துவதாக அறிவித்திருந்தார்.
அத்தோடு இது தொடர்பில் காணி அமைச்சின் செயலாளரிற்கு தெரியப்படுத்தபடும் என்றும் இதற்கான பதில் வரும் வரையும் காணி அளவிடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என்றும் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தொடர்ந்தும் காணி அளவீட்டு பணிகளை முன்னெடுக்க கூடாது என்றும் காணி அளவீட்டு நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும் பிரதேச செயலகத்தின் முன்பாக நேற்றும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை குறித்த பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று காலை இடம்பெற்ற நிலையில் காணிகளை சுவீகரிக்கும் நோக்கில் அளவீடுகள் செய்யப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டமும் முன்னெடுக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில் கடற்படையினருக்கு காணி சுவிகரிப்பதற்காக நிலஅளவைத் திணைக்களத்தினால் காணி அளவீட்டு பணிகளை மேற்கொள்வதற்கு குறித்த பிரதேச செயலர் தடையாக இருப்பதாகவும் அவரே தடுத்து நிறுத்தியதாகவும் அரசு உயர் மட்டத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட காரணத்தினாலேயே குறித்த பிரதேச செயலருக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதாவது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வேலணை பிரதேச செயலராக இருந்த சோதிநாதனுக்கு வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. அதேநேரம் செட்டிகுளம் பிரதேச செயலாளர் வேலனை பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிரதேச செயலரின் திடீர் இடமாற்றம் அதிர்ச்சி அடைந்துள்ள அரசு அதிகாரிகள் அரசின் திட்டமிட்ட பழிவாங்கும் செயற்பாடு எனவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

