பருத்தித்துறையில் ஆசிரியருக்கு கொரோனா: இளைஞருக்கும் கொரோனா பரப்பியவராம்!
வடமராட்சி பருத்தித்துறையில் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் புலோலி இளைஞருக்கு கொரோனா தொற்றை பரப்பியவரும் அவரே என சுகாதாரத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அருவிக்கு சுகாதாரத் தரப்பில் இருந்து கிடைத்த தகவல் வருமாறு,
பருத்தித்துறையில் வசித்து வரும் பண்டாரவளையை சேர்ந்த 26 வயதுடைய ஆசிரியர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த ஆசிரியர் அண்மையில் தொற்று உறுதி செய்யப்பட்ட புலோலி இளைஞருடைய சகா எனவும், அவர்கள் இருவரும் மிக நெருக்கமான பழக்கத்தில் இருந்தவர்கள் எனவும் விசாரணையில் கண்டறியப்பட்டிருந்தது.
பண்டாரவளையில் இருந்து வந்து பருத்தித்துறையில் வசித்து வந்த போதிலும் சுகாதாரத் தரப்பினருக்கு அது குறித்த தகவல்களை வெளிப்படுத்தாது இருந்துள்ளமையும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவரை தனிமைப்படுத்தி பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

