புதினங்களின் சங்கமம்

சுவை, மண உணர்வுகளை முற்றாக அழிக்கும் கொரோனா; அதிர்ச்சி தரும் மற்றொரு நீடித்த பேராபத்து!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்படும் பலருக்கு பொதுவாக ஏற்படும் சுவை மற்றும் மணம் உணர்வு இழப்பு குணமடைந்த பின்னரும் சிலருக்கு தொடர்ந்து நிரந்தரமாக நீடிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரிதான இந்த நோய் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவர்களில் மிகச் சில நோயாளிகளுக்கு சுவை மற்றும் மணம் இழப்பு குணமடைந்த பின்னரும் நீண்ட நாட்களாக நீடிக்கிறது. இந்த உணர்வுகள் மீளத் திரும்புமா? எப்போது திரும்பும்? என்பது குறித்து மருத்துவர்களால் கூறமுடியாதுள்ளது.

சுவை மற்றும் மணம் இழப்பால் பாதிக்கப்பட்டவர்கள் அதன் தாக்கம் காரணமாக உடல், உள ரீதியாப் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்டலாம் என அஞ்சப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டு அரிதாக சுவை மற்றும் மணம் இழப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான அமெரிக்காவின் மேற்குக் கடலோர துறைமுக நகரமாக சேர்ந்த சியாட்டில் பகுதியைச் சோ்ந்த கத்ரின் ஹேன்சன் தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை விபரித்துள்ளார்.

சுவை மற்றும் மணம் இழப்பு ஏற்பட்ட பின்னர் நான் குறைபாடு உள்ளவராக, வயதானது போல உணர்கிறேன் என அவா் கூறுகிறார்.

கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்படும் வரை கத்ரின் ஹேன்சன் எல்லோரையும் போன்று சுவை மற்றும் மணம் உள்ளிட்ட எல்லா உணர்வுகளையும் அறியும் ஆரோக்கியமானவராகவே இருந்தார்.

அவா் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டபோது முதலாவதாக வாசனை சக்தியை இழந்தார். அடுத்து சுவை உணர்வை இழந்தார். இதனால் இப்போது எதனையும் உண்ணப் பிடிக்காமல் உயிர்வாழ சூப்களையும் பானங்களையும் அவா் குடித்துவருகிறார்.

மணம் குறைந்து வரும் உணர்வு அனோஸ்மியா (anosmia) என அழைக்கப்படுகிறது. இது சிலருக்கு கோவிட் -19 தொற்று நோயின் ஏற்படும் முதல் அறிகுறிகளில் ஒன்றாகும். தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட மேலும் சிலருக்கு மணத்துடன், சுவை உணர்வும் அற்றுப் போய்விடுகிறது.

எனினும் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் குணமடைந்த பிறகு பொதுவாக சில வாரங்களுக்குள் வாசனை மற்றும் சுவை உணர்வை மீண்டும் பெறுகிறார்கள்.

ஆனால் திருமதி ஹேன்சன் போன்ற மிகச் சிறிய அளவு நோயாளிகளுக்கு சுவை, மணம் போன்ற உணர்வு இழப்புக்கள் தொடர்ந்து நீடிக்கின்றன. இந்த உணா்வுகள் எப்போது மீண்டும் வழமைக்கும் திரும்பும்? என மருத்துவர்களால் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட மேலும் ஏராளமானவர்கள் நிரந்தரமாகவே மணம் மற்றும் சுவை உணர்வுகளை இழக்க நேரிடும் என்று சில நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் ஏன் இந்த அத்தியாவசிய உணர்வுகளை இழக்கிறார்கள்? அவர்களுக்கு எவ்வாறு உதவுவது? என்பதை கண்டறிய அவசரமாகப் போராட வேண்டிய நிலையை இது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

சுவை மற்றும் வாசனை இழப்பு நோய்க்கு தீா்வு கண்டறிய பல ஆய்வாளர்கள் பல தசாப்தங்களாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இப்போது கொரோனா வைரஸால் இவ்வாறான உணா்வுகளை இழந்து பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து இன்றும் வேகமாக ஆரயப்பட வேண்டியுள்ளது என நியூயோர்க் சினாய் மவுண்டில் உள்ள இகான் மருத்துவக் கல்லூரியின் உளவியல், நரம்பியல் மற்றும் மரபியல் பேராசிரியர் டாக்டர் டோலோரஸ் மலாஸ்பினா தெரிவித்துள்ளார்.

வாசனை, சுவை மற்றும் பசி ஆகிய உணர்வுகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. இந்நிலையில் திடீரென ஏற்படும் அனோஸ்மியா எனப்படும் வாசனை இழப்பு மற்றும் சுவை இழப்பு உடல், உள ரீதியாக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

வாசனை, சுவை ஆகிய இன்பத்தை உணர இயலாமை, இவற்றால் ஏற்படும் பற்றின்மை ஆகிய விசித்திரமான உணர்வுகள் ஆரோக்கியத்தில் பெரும்பாலும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஹார்வர்ட் மருத்துவ கல்லூரியின் நரம்பியல், உயிரியல் துறை இணை பேராசிரியர் டாக்டர் சந்தீப் ராபர்ட் தத்தா கூறுகிறார்.

ஒருவர் திடீரென வாசனை உணர்வை இழக்கும்போது அது சுற்றுச்சூழலை அவர்கள் உணருவதில் தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த உணர்வு அவா்களுக்கு கூச்சமாகவும், அதிருப்தியாகவும் இருக்கலாம்.

அனோஸ்மியா என்ற வாசனை உணர்விழப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அது குறித்து ஆழமாகக் கவலை கொண்டுள்ளனர். இதனால் தாம் மிகவும் பலவீனப்பட்டுள்ளதாக அவா்கள் விவரிக்கிறார்கள் எனவும் பேராசிரியர் சந்தீப் ராபர்ட் தத்தா தெரிவித்துள்ளார்.

வாசனை உணர்வு அற்றுப் போகும் வரை நாம் அது குறித்து அதிக கவனம் செலுத்துவதில்லை. ஆனால் அந்த உணர்வு திடீரென அற்றுப்போகும்போது அதன் தாக்கங்கள் பல்வேறு வழிகளில் பிரதிபலிக்கின்றன என பிலடெல்பியாவில் உள்ள மோனெல் மையத்தில் உணர்வாற்றல்கள் குறித்து ஆய்வு செய்துவரும் பமீலா டால்டன் குறிப்பிடுகிறார்.

அப்ஸென்ட் என்ற தொண்டு குழுவால் அமைக்கப்பட்ட பேஸ்புக் குழுவில் இணைந்துள்ள 9,000 கொரோனா தொற்று நோயாளிகளின் அனுபவங்களை கடந்த மார்ச் 24 முதல் செப்டம்பர் 30 வரை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

இதில் கருத்து வெளியிட்ட பல நுகர்வு சக்தி இழந்த நோயாளிகள் தாங்கள் உண்பதில் மட்டுமல்லாமல், சமூகத்துடன் இணைவதிலும் தயக்கம் கொண்டுள்ளதாகக் கூறினர். இது மற்றவர்களுடனான அவர்களின் பிணைப்பை பலவீனப்படுத்தியது. நெருக்கமான உறவுகளைப் பாதித்தது. அத்துடன் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக உணரத் தலைப்பட்டனர்.

நான் அந்நியமாக உணர்கிறேன். அன்றாட, அடிப்படை வாழ்வின் உணர்ச்சிகளை இனி என்னால் அனுபவிக்க முடியாது. இதனால் எனது வாழ்வின் ஒரு பகுதியை இழந்துவி்டதாகவே உணர்கிறேன் என கொரோனா தொற்றுக்குள்ளாகி அதன் பி்ன்னர் வாசனை உணர்வை இழந்த மற்றொருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

நான் வெளியே செல்லும்போது சூழலுக்கேற்ற காற்றின் வாசனையை என்னால் உணர முடியாது. புல்லில் இருந்து வரும் வாசானையை உணர முடியாது. மழையின்போது மாறும் வாசனையை அனுபவிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

வாசனை இழப்பு என்பது கவலை மற்றும் மனச்சோர்வுக்கான ஆபத்தான காரணியாக உள்ளது. எனவே, இது குறித்து மனநல வைத்திய நிபுணர்கள் ஆழமான கரிசனை கொண்டுள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான குறைந்தளவானோருக்கு மட்டுமே நீண்டகால வாசனை இழப்பு ஏற்பட்டாலும் பொது சுகாதார கண்ணோட்டத்தில் இது மிகவும் முக்கியமானது என்று டாக்டர் சந்தீப் ராபர்ட் தத்தா கூறினார்.

வாசனையை உணர முடியாத பலர் பசி உணர்வையும் இழக்கின்றனர்.இதனால் உணவில் நாட்டமின்றி ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் எதிர்பாராத எடைக் குறைவு போன்றவற்றுக்கு அவர்கள் உள்ளாக நேரிடலாம்.

மார்ச் மாதத்தில் வாசனை உணர்வை இழந்ததில் இருந்து தனது எடையில் 20 பவுண்டுகளை இழந்துவிட்டதாக ப்ரூக்லின் பகுதியில் வசிக்கும் காரா வான்கில்டர் கூறுகிறார்.

சுகாதாரத் துறையில் பணிபுரியும் 26 வயதான திருமதி வான்கில்டர் என்பவரும் இவ்வாறே தனது உணர்வுகளை வெளிப்படுத்தினார்.

மார்ச் மாதத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானதில் இருந்து என்னால் எந்த வாசனையையும் உணர முடியவில்லை. இது எனக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது. இதனை எண்ணி ஒவ்வொரு நாளும் நான் அழுகிறேன். சமையல் அறையில் எரிவாயு கசிந்தால் கூட அந்த வாசனையை என்னால் உணர முடியாது என வான்கில்டர் குறிப்பிடுகிறார்.

தீ அல்லது வாயு கசிவுகள் போன்றவற்றால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து மனிதர்களை எச்சரிக்கும் ஒரு முதன்மை எச்சரிக்கை உணர்வாக வாசனை உள்ளது. வயதான காலத்தில் வாசனை உணர்திறன் குறைந்து வருவதாலேயே வயதான நபர்கள் அதிகளவில் தீ விபத்து உள்ளிட்டவற்றுக்கு ஆளாக நேரிடுகிறது.

நியூயோர்க்கைச் சேர்ந்த மைக்கேல் மில்லர் கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டார். அதன்பின் அவளால் எந்த வாசனையையும் உணர முடியவில்லை. சமீபத்தில் வீட்டு சமையலறையில் எரிவாயு கசிந்துள்ளதாகக் கூறி அவரது கணவரும் மகளும் அவரை வேகமாக வீட்டுக்கு வெளியே தள்ளிச் சென்றனர். அதுவரை தனக்கு எதவும் தெரியாது என மைக்கேல் மில்லர் கூறுகிறார்.

மாற்றங்கள் மற்றும் சாத்தியமான தீங்குகள் குறித்து மனிதர்களுக்கு முதலில் சமிக்ஞை செய்வது வாசனை உணர்வே.

அழுக்கான உடைகள், கெட்டுப்போன உணவுகள் போன்றவற்றால் ஏற்படும் ஆபத்துக் குறித்து வாசனைகளே மனிதர்களை முன்னெச்சரிக்கை செய்கின்றன. இந்த உணர்வு இல்லாவிட்டால் அது பல வழிகளில் ஆபத்தை ஏற்படுத்தும் என மோனெல் வேதியியல் உணர்வுகள் மையத்தைச் சேர்ந்த டாக்டர் டால்டன் கூறினார்.

கலிபோர்னியாவின் சாண்டா மரியா பகுதியைச் சேர்ந்த 51 வயதான எரிக் ரெனால்ட்ஸ் ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றுக்குள்ளானதைத் தொடா்ந்து வாசனை உணர்வை இழந்தார். இப்போது துர்நாற்ற வாசனைகளையே அவர் அடிக்கடி உணர்கிறார். குடிக்கும் பானங்கள் அழுக்கு போல மணக்கின்றன என அவா் கூறுகிறார்.

இவரைப் போன்ற நோயாளிகள் தங்கள் சிதைந்துபோன உணர்வுகளால் உணவு வெறுப்புக்கு ஆளாவது வழக்கத்திற்கு மாறானதல்ல என வர்ஜீனியா கொமன்வெல்த் பல்கலைக்கழகத்தின் வாசனை மற்றும் சுவை மையத்தின் மருத்துவ இயக்குநர் டாக்டர் இவான் ஆர். ரீட்டர் கூறினார்.

இவர் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுக் குணமடைந்த பின்னரும் வாசனை உணர்வை இழந்துள்ள 2,000பேரைக் கண்காணித்து வருகிறார்.

அவரது நோயாளிகளில் ஒருவரான பெண் தற்போது மெல்லக் குணமடைந்து வருகிறார். ஆனால் நுகர்வில் ஏற்பட்ட அசாதாரண மாறுபட்ட தன்மையால் அவா் அவதியுறுகிறார். சாப்பிடும் எல்லாமே அவளுக்கு பெட்ரோல் சுவை அல்லது பெற்றோல் வாசனையைத் தருவதாக அந்தப் பெண் கூறுவதாக என்று டாக்டர் ரீட்டர் தெரிவித்தார்.

இந்தப் பெண்ணின் மூக்கில் உள்ள வாசனை ஏற்பிகள் மீண்டும் செயற்பாட்டுக்கு வரப் போராடுகின்றன. ஆனால் தொற்று நோயால் ஏற்பட்ட குழப்பங்களால் மூளைக்கு தவறான சமிக்ஞைகள் சென்று சேருவதே இந்தக் குழப்பத்துக்குக் காரணமாக இருக்கலாம் என டாக்டர் ரீட்டர் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு வாசனை ஏற்பிகளின் செயற்பாடுகள் பாதிக்கப்படலாம். எனவே அவர்கள் மாமிசத்தை சாப்பிடும்போது அது குறித்து சமிக்ஞைகளை மூளைக்கு அனுப்பும்போது குழப்பங்கள் ஏற்படலாம். உதாரணத்துக்கு ஒரு மாமிசத்தைச் சாப்பிட்டால் அதன் சமிக்ஞை குழப்பங்களால் நீங்கள் நாய் இறைச்சி சாப்பிடுவது தவறான உணர்வை வழங்கி மூளை உங்களை ஏமாற்றக்கூடும்.

வாசனை இழப்பால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வாசனை பயிற்சி போன்ற சிகிச்சைகளை முயற்சித்துள்ளனர்: அவா்களுக்கு வெவ்வேறு வாசனைகளை வைத்து நுகர்வுப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஜேர்மனியில் இவ்வாறு வாசனை சக்தியை இழந்த 153 நோயாளிகளின் சிகிச்சை பெற்று வருவதாக ஆய்வொன்று கூறுகின்றது.

நியூயார்க்கில் உள்ள மவுண்ட் சினாய் மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை வைத்திய நிபுணர் டாக்டர் அல்பிரட் இலோரெட்டா மீன் எண்ணெயை உட்கொள்வது வாசனை உணர்வை மீட்டெடுக்க உதவுகிறதா ? என ஆராய்ந்து வருகிறார்.

மீன் எண்ணெயில் காணப்படும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் (omega-3 fatty acids) உணர்வு நரம்புகள் மேலும் சேதமடைவதில் இருந்து பாதுகாப்பதுடன், நரம்பு வளர்ச்சியை துரிதப்படுத்த உதவும் என்று அவர் பரிந்துரைத்தார்.

உங்களுக்கு வாசனை மற்றும் சுவை உணர்வுகள் இல்லையென்றால் நீங்கள் சாப்பிடுவதில் சிரமப்படுவீர்கள், அது உங்கள் வாழ்க்கையில் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என டாக்டர் இலோரெட்டா கூறினார்.

என்னிடம் சிகிச்சை பெறும் மற்றும் எனக்குத் தெரிந்த வாசனை உணர்வை இழந்த நோயாளிகள் வாழ்கையை முற்றாகப் பறிகொடுத்தவர்கள் போல் காணப்படுகிறார்கள் எனவும் டாக்டர் இலோரெட்டா சுட்டிக்காட்டினார்.

அவரது நோயாளிகளில் ஒருவரான ரெனால்ட்ஸ் தனது வீட்டிற்கு அருகிலுள்ள கடற்கரைக்கு நடந்து செல்லும்போது வாசனை இழப்பை மிகவும் தீவிரமாக உணர்கிறார். அவரால் கடல் உப்புக் காற்றின் வாசனையை அனுபவிக்க முடியவில்லை.

அது என்ன வாசனை என்று என் மனதுக்கு தெரியும். ஆனால் நான் இப்போது கடற்கரைக்குச் செல்லும்போது அதனை உணர முடியவில்லை எனவும் அவா் கூறினார்.

தகவல் மூலம் – nytimes