யாழ்ப்பாணத்தில் ஒரு பகுதி முடக்கம்!! கொரோனா கொத்தனி உருவாகியது??
யாழ்ப்பாணம் உடுவில் பி்ரதேச செயலக பிரிவு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்படுவதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர், க.மகேசன் அறிவித்துள்ளார்.
உடுவில் பிரதேச செயலக பிரிவில் மருத்துவ – சுகாதார சேவைகள் தவிர்ந்த ஏனைய நடவடிக்கைள் முடக்கப்படுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உடுவில் பிரதேச செயலக பிரிவில் 28 கிராம அலுவலகர் பிரிவுகளில் 26 பிரிவுகளில் கோரோனா வைரஸ் தொற்றாளர்கள் இருக்கலாம் என்ற அடிப்படையில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுகாதாரத் துறையினரின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் குறிப்பிட்டார்.
யாழ்.பரிசோதனைக்கூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் அடிப்படையில் 31 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் ஆறு பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த விடயம் எவ்வாறு நடந்தது என்று பெயர் குறிப்பிடவிரும்பாத உயர் அதிகாரி ஒருவரைத் தொடர்புகொண்டு கேட்டோம்.
அதற்கு பதிலளித்த அவர்,
இன்று யாழ். போதனா வைத்தியசாலை பரிசோதனைக் கூடத்தில் 300 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அவர்களில் 31 பேருக்கு கொரோனாத் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டன. அவர்களில் உடுவிலைச் சேர்ந்த ஒரே வீட்டில் வசிக்கும் ஆறு பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏனைய 25 பேருக்கும் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. 100 வீதம் தொற்றுறுதியாக அவர்களுடைய மாதிரிகள் காணப்படவில்லை. இதனால் அவர்கள் இருபத்தைந்து பேருக்கும் மீண்டும் நாளையும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
குறித்த தகவல்கள் ஆய்வு கூடத்தினைச் சேர்ந்த ஒருவராலேயே ஊடகங்களுக்கு பகிரப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரிகளிடம் பெறப்பட்ட மாதிரிகளில் 136 பேரின் மாதிரிகள் அநுராதபுரம் வைத்தியசாலை ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அவற்றின் பிசிஆர் பரிசோதனை அறிக்கை நாளையே வெளிவரும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

