புதினங்களின் சங்கமம்

கொரோனா ஆபத்து!! யாழ் காரைநகர் கனகேஸ்வரன் பொறுப்பற்று செயற்பட்டாரா? நடந்தது என்ன? சிறப்பு அலசல்!!

காரைநகரைச் சேர்ந்த கனகேஸ்வரன் (வயது-40) கொழும்பில் இருந்து கொரோனாவுடன் வருகைதந்து யாழ்ப்பாணம் எங்கும் கொரோனாவைப் பரப்பிவிட்டான் என அவன் மீது வசைமாரிகள், குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன.
சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடக்கம் சாதாரண முகப்புத்தக போராளிகள் வரை அவன் பொறுப்பற்றுச் செயற்பட்டான் என அறிக்கைகள் வேறு விடுகின்றீர்கள். உண்மையில் அவனில் மட்டும் தவறில்லை. ஒட்டுமொத்த சமூகமும் தவறு செய்திருக்கின்றது.
கனகேஸ்வரன் கொழும்பில் இருந்து காரைநகரில் உள்ள வீட்டிற்கு வந்து நின்ற விடயம் யாருக்குத்தான் தெரியாது?
அயல் வீடுகளுக்கு தெரியாதா? உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கு தெரியாதா? ஆட்டத்திவசம் ஒன்றுக்கு அவன் சென்றபோது நட்பு பாராட்டி அவனை வரவேற்று, உபசரித்து, அவனோடு சேர்ந்திருந்து உணவு உட்கொண்டவர்களுக்கு தெரியாதா? அவனோடு சேர்ந்து நீராகாரம் அருந்தியவர்களுக்கு தெரியாதா? அவனை வீதியில் கண்ட எவருக்கும் தெரியாதா?
இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து கொரோனா தலைவிரித்தாடுகின்றது. காரைநகரில் ஏற்கனவே பலர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில், ஒருவர் கொழும்பில் இருந்து வந்திருக்கின்றார் எனில், அவர் தொடர்பாக கிராம சேவையாளருக்கு அல்லது பொதுச் சுகாதார பரிசோதகருக்கு தகவல் கொடுக்கவேண்டும் எனத் தெரிந்திருந்தும் வேடிக்கை பார்த்த அனைவரும் பொறுப்பற்றுத்தான் செயற்பட்டிருக்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதிகளில் தரவுகளை எடுத்துப் பாருங்கள், பெரும் பதவிகளில் உள்ள எத்தனை பேர் தினமும் கொழும்பில் இருந்து வருகைதந்து அங்கு தங்கி நின்று யாழ்ப்பாணத்தில் சுற்றித் திரிகின்றனர். அவர்கள் அனைவரும் உத்தமர்களா? அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லையா? அவர்களில் எத்தனை பேருக்கு சுகாதாரத்துறை பி.சி.ஆர் பரிசோதனை செய்தது?
கொழும்பில் இருந்து வருபவர்களை தாரளமாக யாழ்ப்பாணத்தினுள் அனுமதிக்கின்றீர்கள். அவர்களில் யாருக்கேனும் கொரோனா தொற்று என்றவுடன் அவர்கள் பயணித்த வழித்தடம் தேடுகின்றீர்கள். பயங்கரவாதிகளைப் போல அவர்களை பார்க்கின்றீர்கள்.
இன்று கனகேஸ்வரன் சென்று வந்த அத்தனை இடங்களும் பூட்டப்பட்டு நூற்றுக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஏ.சி அறைகளில் இருப்போரால் ஏழைகளை நோக்கி தனிமைப்படுத்தல் உத்தரவு பறக்கின்றது. ஆனால், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் அவர்கள் உணவுக்கு என்ன செய்கின்றார்கள் என யார் அவதானிக்கின்றீர்கள்? தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் குடிதண்ணீரைப் பெறுவதற்குக்கூட அவர்கள் படுகின்ற கஷ்டத்தை யார் பார்க்கின்றீர்கள்?
சங்கானை மீன் சந்தை பூட்டப்பட்டு மீன் வியாபாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அன்றாடம் காய்ச்சிகளான அவர்களின் வயிற்றுப்பசியை யார் போக்குவது?
உயிர்கொல்லி கொரோனா கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. அதற்காக, அனைவரும் கூடி அதற்கு ஒரு தெளிவான பொறிமுறையை உருவாக்குங்கள். அதிகாரிகளில் இருந்து சாதாரண மக்கள் வரை முதலில் அனைவரும் பொறுப்புடன் செயற்படத் தயாராகுங்கள்.
சனசமூக நிலையங்கள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள் இவற்றைப் போன்று அத்தனை சமூகட்ட அமைப்புக்களையும் உள்ளடக்கி ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிலும் கொரோனா கட்டுப்பாட்டு செயலணியை உருவாக்குங்கள்.
இவர்களை அழைத்து மாதம் இரு கலந்துரையாடல்களை நடத்துங்கள். இதன் மூலம் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். சமூக இடைவெளியை பேணி கலந்துரையாடும்போது எந்த நோயும் யாரையும் அணுகாது.
விரும்பியோ விரும்பாமலோ இனிமேல் கொரோனாவுடன்தான் வாழப்போகின்றோம். ஆனால், அனைவரும் பொறுப்புடன் செயற்பட்டால் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புக்களை குறைக்க முடியும்.
(இது எனது தனிப்பட்ட ஆதங்கம் மட்டுமே. யாரையும் குற்றஞ்சாட்டுவதற்கான பதிவு அல்ல)

பிருந்தாபன் பொன்ராசா….