யாழ் மருத்துவபீட மாணவனின் தற்கொலைக்கு காரணம் என்ன??டொக்டர் சிவச்சந்திரனின் தகவல் இதோ!!

நேற்று யாழ் மருத்துவ பீட தற்கொலைகள் பற்றி பதிவிட்டிருந்தேன். பல மாணவிகள் தங்கள் கருத்துக்களை அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு மாணவனும் கருத்தை அனுப்பவில்லை. நடைபெற்ற தற்கொலைகள் ஆண்களிடையேதான் அதிகம்.இரண்டுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாகவே உணர்கிறேன். பிரச்சினைகளை பெண்கள் ஏதோ ஒரு சமயத்தில் பேச தயாராக இருக்கிறார்கள். ஆண்களுக்கு பேசினால், ” இது எல்லாம் ஒரு பெரிய பிரச்சினையா? இதை தாங்கிக்கொள்ள முடியாத நீயெல்லாம் ஒரு ஆணா? ” என்று கேலிசெய்யப்படுவோமா என்ற பயமாக இருக்கலாம். இது ஒரு அனுமானம்தான்.ஒரு சகோதரி ஒரு நீண்ட கருத்தை அனுப்பி இருந்தார். கொஞ்சம் தயக்கத்துடனேயே அதை பதிகிறேன். கொஞ்சம் பிசகினாலும் பிரதேசவாதமாகக் கூடிய பதிவு. அவர் பிரதானமாக வடக்கைப் பற்றி எழுதினாலும் பல விடயங்கள் தமிழ் பகுதி எல்லாவற்றுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். தயவு செய்து இதை ஒரு பிரதேசவாத பிரச்சினை ஆக்காமல் இது பற்றிய கருத்துக்களைப் பதியுங்கள்.//
வணக்கம் அண்ணா… யாழ் மருத்துபீட மாணவர்களின் தொடர் இழப்பு பற்றி பதிவிட்டிருந்தீர்கள்… எனது கருத்தைப் பகிரலாம் என தோன்றியது.
நான் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நான்காம் வருட மாணவி. எனது பெற்றோர் இருவரின் குடும்பங்களுமே யாழ்பாண பூர்விகம் என்பதாலும் யாழ் பல்கலைக்கழகத்தில் சில நண்பர்கள் எனக்கிருப்பதாலும் சில விடயங்களை அறிவேன்.
பொதுவாகவே இலங்கையின் எந்தப் பகுதியைக் காட்டிலும் வடக்கில் கல்வி தொடர்பான அழுத்தம் சற்று அதிகமாகவே இருக்கிறது. நான் நுவரெலியா, கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் வசித்திருந்ததால் இதனை சற்றே ஒப்பிட்டு நோக்க முடிந்தது. நாட்டுப் பிரச்சனைகளின் காரணமாக வடக்கு இளைஞர்களுக்கு கல்வி ஒன்றே மேலுழுவதற்கான ஒரே வழியாய்ப் போனதும் சாதித்துக் காட்ட வேண்டுமென்ற அவர்தம் மனப்பாங்கும் எமக்கு தெரிந்த ஒன்றே… இருப்பினும் இம்மனப்பாங்கே சில (பல) நேரங்களில் அதீத அழுத்தமொன்றாய் மாறி விடுகிறது.
சாதாரணமான ஒரு உதாரணம். நான் நுவரெலியா மாவட்டத்தில் கல்வி கற்கையில் பல பிரதேசங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் கற்பித்தனர். எனினும் எந்தப்பாட வேளையிலும் இல்லாது யாழ்ப்பாண ஆசிரியர்கள் (சிலரின்) பாடவேளைகளில் மட்டும் நாம் மேலதிக அழுத்தத்துடனும் பதற்றத்துடனும் பயத்துடனும் தான் இருந்தோம். கல்வி ஒன்றே, அது மட்டுமே முக்கியம் என்ற திணிப்பும் சற்று பின் தங்கிய மாணவர்களுக்கான மட்டம் தட்டலும் அங்கு வெகுவாய் இருந்தது. இது பலரின் தன்னம்பிக்கையைக்கூட குறைத்தது. அதைவிட பார தூரமான ஒன்று மாணவர்களின் தனிப்பட்ட வாழ்வில் தலையிடுவதும் அதைக்கொண்டவர்களை மதிப்பிடுவதும். (Judgemental mindset)
“உனக்கு பெண் தோழி இருக்கிறாளா, நீ உருப்பட மாட்டாய்… இரவில் நண்பருடன் வெளியே செல்கிறாயா, நீ உருப்பட மாட்டாய்… பெண்பிள்ளைகள் காற்சட்டை அணிகிறீகளா, கட்டாயம் உருப்பட மாட்டாய்” இவையெல்லாம் தினமும் காதில் விழும் வசனங்கள். இது எந்த வகையில் ஒருவனின் தன்னம்பிக்கைக்கு துணை நிற்கும்?
Being judgmental என்பதே இயல்பாகி விட்டது. மேலும் படிப்பில்லை என்றால் அவன் வாழ்வே முடிந்து விட்டதாய் உணர வைக்கிறார்கள். இப்போதும் யாழ் பல்கலையில் இவை யாவும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
கலாச்சாரமும், ஒழுக்கமும், பண்பாடும் கல்வியும் ஒருவன் வாழ்வை சீர் படுத்தும் அளவிற்கே இருக்க வேண்டும்; சீரழிப்பதாய் மாறிவிடக்கூடாது.
எனது வடக்கு நண்பர்கள் கூட என்னேரமும் மன அழுத்தம் மற்றும் பயத்திலிருப்பதே அதிகம். “நம்ம வாழ்க்க இது, இப்ப என்ன குறைஞ்சு போச்சு, இது இல்லன்னா அது” என்ற மனப்பாங்கு அவர்களிடம் அரிதிலும் அரிது. “அய்யோ சாதிக்க வேண்டுமே, குடும்ப பெயரை காக்க வேண்டுமே, அதுவே இதுவே” என்ற பதற்றம் தான் மேலோங்கி நின்கிறது.
இந்த சமூக அமைப்பு கட்டாயம் மாற வேண்டும். வாழ்வில் கல்வியைத்தாண்டியும் நிறைய உள்ளன. சில சின்ன சின்ன சந்தோஷங்கள் இந்த வயதில் தான் அனுபவிக்க வேண்டும், அதை செய்வதற்காகவே தம்மைக் குற்றவாளியாய் மாணவருணரும் நிலை மாற வேண்டும். அதற்கு சமூக அழுத்தம் குறைய வேண்டும். இது மட்டுமே பாதை என்பதை விடுத்து அவன் வாழ்வை அவன் கையில் கொடுக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக கலாசாரத்திற்கும் கல்விக்கும் நல்ல பெயருக்கும் அந்தஸ்துக்கும் கொடுக்கப்ழடும் முக்கியத்யுவதில் பாதியேனும் உள ஆரோக்கியத்திற்கு கொடுக்கப்பட வேண்டும். அது குடும்பங்களில் இருந்து தொடங்க வேண்டும். பெயர் கெட்டுவிட கூடாதென்ற மனைவின் பதற்றமும், சம்பாதிக்க வேண்டுமே சொத்து சேர்க்க வேண்டுமே என்ற கணவனின் அழுத்தமும் அய்யோ சாதிக்க வேண்டுமே என்ற பிள்ளைகளின் நடுக்கமும் குறைய வேண்டும். ஓடாய்த் தேய்ந்து உளைப்பதைக் காட்டிலும் பிள்ளைக்கு நடை பழக்கும் தருணங்கள் பெறுமதி வாய்ந்தவை என உணர்தல் வேண்டும்.
சுருங்கச் சொன்னால் life is a race run run எனுற virus இன் மனநிலையில் இருநது all is well என்ற பாரியின் மனநிலைக்கு சமூகம் மாறினாலே, இப்பிரச்சனைகளைம் அழுத்தங்களும் பாதியாய்க் குறையும்.

error

Enjoy this blog? Please spread the word :)