புதினங்களின் சங்கமம்

ஊடகவியலாளர்கள் முன் பச்சை மீனைச் சாப்பிட்ட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்!! (video)

முன்னாள் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திலீப் வெதாரச்சி இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்கள் முன்னிலையில் சமைக்காத பச்சை மீனைச் சாப்பிட்டார்.

கொரோனா பரவும் என்ற அச்சமின்றி மீன் வாங்குமாறு பொதுமக்களை அறிவுறுத்தும் வகையில் அவர் இவ்வாறு பச்சையாக மீனை உண்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் வெதாரச்சி, பொருளாதார நெருக்கடியில் உள்ள கடற்றொழிலாளர் சமூகத்துக்கு பொதுமக்கள் இப்போது செய்யக்கூடிய மிகப் பெரிய உதவி அவர்களிடம் இருந்து கடலுணவுகளைக் கொள்வனவு செய்வதாகவும் எனக் கூறினார்.

பேலியகொடை மீன் சந்தையை மையமாகக் கொண்டு கொரோனா வைரஸ் தொற்று நோய் கொத்தணி உருவான நிலையில் கடலுணவுகள், கடலுணவு விற்பனையாளர்கள் ஊடாக கொரோனா தொற்று பரவலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதனால் கடலுணவுகளை விற்பனை செய்ய முடியாமல் கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஏற்றுமதி இல்லாததாலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் கடலுணவுகளை வாங்குவது தொடர்பில் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்குவது அரசு மற்றும் கடற்றொழில் அமைச்சின் கடமை எனவும் முன்னாள் அமைச்சர் வெதாரச்சி, தெரிவித்தார்.