புதினங்களின் சங்கமம்

ஒரு லட்சம் காணித்துண்டுகள் வழங்கும் திட்டம்!! இளம் தொழில்முனைவோருக்கு வழிகாட்டல் இலக்கம் இதோ!!

இளம் தொழில்முனைவோருக்கு 100,000 காணித்துண்டுகளை வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு விண்ணப்பிப்போருக்கு துறைசார் நிபுணத்துவ அமைப்புக்கள் ஊடாக தொடர்ச்சியாக பல்வேறு உதவிகளையும், ஒத்துழைப்பையும் பெற்றுக்கொடுப்பதற்கு கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாடு செய்துள்ளது.

ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதனுடன் இணைந்து, மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.

இந்தத் திட்டத்தின்கீழ் தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்காக விண்ணப்பிக்கும் இளைஞர்-யுவதியருக்கு தேவைப்படும் வழிகாட்டல் உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருத்தமான தொழில்முயற்சிகளை இனங்காணல், அதற்கான திட்ட முன்மொழிவைத் தயாரித்தல், திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துதல் முதற்கொண்டு, உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்துவது வரையில் தொடர்ச்சியாக இந்த ஒத்துழைப்பு வழங்கப்படவுள்ளதாக ஒருங்கிணைப்புக்குழுவின் மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலான தொழில்முறைசார் அமைப்பான வியத்மக அமைப்பின் வடக்கு, கிழக்கு, மலையக பகுதிகளுக்கான விசேட பிரிவான நியூஸ் பிறிட்ஜ் மற்றும் கிராமிய தொழில்முயற்சிகளின் வலைப்பின்னல் அமைப்பான “றென்” ஆகியன இதற்கான ஆதரவை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக மேலதிக இணைப்பாளர் அறியத்தந்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலக பிரிவுகளான கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி மற்றும் மாவட்டச் செயலகம் ஆகியவற்றின் ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தோர், மாவட்டச் செயலகத்திலுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அலுவலகத்துடன் தொடர்புகொண்டு இந்த உதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அவர் அறிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டம் மாத்திரமன்றி, யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரிகளுக்கும் இந்த உதவிகளை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதுவரை இந்தத் திட்டத்தின் கீழ் காணிகளுக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காத இளைஞர், யுவதியர், தத்தமது பிரதேச செயலகங்களை உடனடியாகத் தொடர்புகொண்டு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என்றும், இதற்கான முடிவுத் திகதி எதிர்வரும் 15ம் திகதி என்பதால், உடனடியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரின் மேலதிக இணைப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர் 0777 324 004 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.