புதினங்களின் சங்கமம்

ஒரு லட்சம் தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் – நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு

சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட ஒரு லட்சம் பேருக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பயிலுனர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (19) ஆரம்பிக்கப்பட்டது.

முதற் சுற்றில் 34818 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

நியமனம் பெறுவோருக்கு அவர்களின் திறன்கள் மற்றும் விருப்பத்தின் பேரில் இனம்காணப்பட்டுள்ள 25 துறைகளின் கீழ் 06 மாதங்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. தேசிய பயிலுனர் மற்றும் தொழிற் பயிற்சி அதிகார சபை பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்திற்கு பொறுப்பாகவுள்ளது. பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவுசெய்யும் பயிலுனர்களுக்கு NVQ III தரச் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக் காலத்தின் போது பயிலுனர்களுக்கு 22500 ரூபா மாதாந்த கொடுப்பனவாக வழங்கப்படும்.

ஒரு லட்சம் தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ” சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “ வறுமையற்ற இலங்கை” என்ற எண்ணக்கருவிற்கு ஏற்ப திட்டமிடப்பட்ட நிகழ்ச்சித்திட்டமாகும். அது பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

குறைந்த வருமானம் பெறுவோரின் வருமானத்தை அதிகரித்தல், சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்தி வறுமையை ஒழித்தல், வருமான ஏற்றத்தாழ்வினை முடியுமானளவு சமப்படுத்தி மக்கள் மைய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.

நிகழ்ச்சித்திட்டம் இவ்வருடம் ஜனவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்ட பத்திரிகை அறிவித்தலின் மூலம் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அனைத்து விண்ணப்பங்களையும் தமது பிரதேச கிராம அலுவலரிடம் வழங்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் பிரதேச செயலாளர் அலுவலகங்களின் ஊடாக மாவட்ட செயலாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு விண்ணப்பதாரிகளை நேர்முக தேர்வுக்கு உற்படுத்தி பயிலுனர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

தெரிவுசெய்யப்பட்ட எவரும் அரச அல்லது தனியார் துறை நிறுவனங்களில் தொழில் ஒன்றினை பெறாத குடும்ப உறுப்பினர்கள் ஆவர்.

ஆறு மாத பயிற்சியின் பின்னர் பயிலுனர்கள் PL-01 வகுப்பில் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டு, அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசின் கீழ் உள்ள நிறுவனங்களில் காணப்படும் வெற்றிடங்களுக்கு நியமிக்கப்படுவர். ஆட்சேர்ப்பு செய்யப்படுவோர் அரச விவசாய காணிகள் மற்றும் கைவிடப்பட்டுள்ள விவசாயம் செய்யமுடியுமான காணிகளில் நவீன விவசாய தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி மரக்கறி மற்றும் பழ வகைகளை உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளிலும் வன சீவராசிகள், வனப் பாதுகாப்பு, நீர்ப்பாசன கமநல சேவைகள், விவசாய சேவைகள் மத்திய நிலையங்கள், கிராமிய வைத்தியசாலைகள், பாடசாலைகள் ஆகிய இடங்களிலும் பணியில் இணைத்துக்கொள்ளப்படுவர்.