புதினங்களின் சங்கமம்

கொரோனா உறுதியான 1,034 பேரில் ஒருசிலரை தவிர அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதி!

கம்பஹா ஆடைத் தொழிற்சாலையுடன் தொடர்புடைய இன்றும் ஒரு-சில கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளே மருத்தவமனையில் அனுமதிக்கப்படவேண்டியுள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் சுதத் சமரவீரா இன்று தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை நிலவரப்படி மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையுடன் தொடர்புடைய 1034 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இவா்களில் பெரும்பாலான நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சிலரே இன்னும் மருத்துவமனையில் சேர்க்கப்படவில்லை எனவும் அவா் குறிப்பிட்டார்.

தொற்று உறுதி செய்யப்பட்ட ஏனைய சில நோயாளிகளையும் மருத்துவமனையில் அனுமதிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் அங்கொடை ஐ.டி.எச். மருத்துவமனை, வெலிகந்தை மருத்துவமனை, இரணவில மருத்துவமனை, மினுவங்கொடை மருத்துவமனை, காத்தான்குடி மருத்துவமனை, தெல்தெனிய மருத்துவமனை, நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை மற்றும் முல்லேரியா, ஹம்பாந்தோட்டை, ரம்புக்கனை, கம்புருகமுவ ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கொரோனா வைரஸ் நோயாளிகளை அனுமதிக்க ஹோமகம, அம்பன்பொல மற்றும் லக்கல ஆகிய மருத்துவமனைகள் தயாராகி வருவதாகவும் அவர் கூறினார்.

மினுவங்கொடை கொத்துத் தொற்றில் பாதிக்கப்பட்ட பிராண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களின் அனைவரும் நேற்று முழுமையாகப் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் சுதத் சமரவீர தெரிவித்தார்.

தற்போது ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களின் குடும்பத்தினர், அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியவா்கள் மற்றும் தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் அயலவா்கள் ஆகியோரிடம் தொற்று பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் சுதத் சமரவீரா தெரிவித்தார்.