Home புதினங்களின் சங்கமம் யாழில் பரிதாபம்!! பிள்ளை சிறுவர்களுக்கு வழி காட்டும் அதிகாரி!! தந்தை பிச்சைக்காரன்!!

யாழில் பரிதாபம்!! பிள்ளை சிறுவர்களுக்கு வழி காட்டும் அதிகாரி!! தந்தை பிச்சைக்காரன்!!

இது கதையல்ல நிஜம்.

இதைச் சொல்ல இன்று போல் இன்னொரு நாள் பொருத்தமாக இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில் இன்று முதியோர் தினமும். நான் சிறுவயதில் இருந்து அறிந்த ஒரு இளைஞர் இலங்கை முழுவதும் இளையோருக்கான சிறுவர்களுக்கான வழிகாட்டல் பயிற்சிகளை நடத்துபவர். எனது பதின்ம வயதில் தான் அவருடைய குடும்பத்தினருடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. இப்போது இந்த இளைஞனின் தந்தை யாழ் நகரில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு முன்னால் யாசகம் கேட்டுக் கொண்டிருக்கிறார். அவரைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கும் ஏனென்றால் அவர் ஒரு சிறந்த தொழிலாளி, வாகனங்கள் திருத்துவதில் வல்லவர். என்னுடைய மோட்டார் சைக்கிளையும் திருத்தி கொடுத்திருக்கிறார். என்னுடைய தந்தை முதன் முதலில் பாவித்த கையடக்கத்தொலைபேசி கூட இவரிடம் இரண்டாவது பாவனையாளராக வாங்கியது. ஆரம்பத்தில் குறித்த முதியவரை ஆலயத்திற்கு முன்னால் காணும் போது நான் நினைத்தது ஏதோ பொழுது போகாமல் அங்கிருக்கும் யாசகர்களோடு அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார் என்று தான். ஆனால் தொடர்ச்சியாக அவரை அதே இடத்தில் காணக்கிடைத்தது. ஒரு நாள் சந்தேகத்தை தீர்த்து விடலாம் என முடிவெடுத்து அவருக்கு அருகில் சென்று என்னை அறிமுகம் செய்து கொண்டேன். என்னை அடையாளம் கண்டுகொண்டார். நல்ல பொழுதுபோக்கு தான் போல என்று கேட்டேன். அதற்கு அவர் கண் கலங்கி இல்லை அம்மாச்சி பிள்ளையள் எல்லாம் கைவிட்டுட்டினம். இப்ப நான் பிச்சை எடுத்துத்தான் சீவிக்கிறன் என்றார். அந்த நேரம் என்ன செய்வதென்றே என்னால் முடிவெடுக்க முடியாமல் இருந்தது. அவருக்கு யாசகம் போடும் மனநிலை எனக்கு ஒரு துளியும் இல்லை. நான் அவருக்கு யாசகம் கொடுக்கவும் இல்லை. அந்த இடத்தைவிட்டு எப்படி விலகிச் செல்வது என்பது மட்டும் தான் எனது சிந்தனையாக இருந்தது. எப்படியோ அங்கிருந்து விலகி வந்துவிட்டேன். இன்றுவரை ஒரு யாசகராக அவர் அமர்ந்திருக்கும் அந்த பகுதியை நான் கடக்கும் போதெல்லாம் அவர் என்னை பார்த்து விடக்கூடாது என்ற ஒரு உணர்வு மட்டுமே என்னுள் இருக்கின்றது. சாதாரண மனிதராக பார்த்த ஒருவரை யாசகராக பார்க்கும் எங்களுடைய மனநிலையே இப்படி இருந்தால், சாதாரண மனிதராக இருந்த ஒருவர் தான் வாழ்ந்த பகுதியில் யாசகம் கேட்டு அமர்ந்திருப்பது அவருக்கு எவ்வளவு மன வேதனையை கொடுக்கும்???
அதேநேரம் அந்த முதியவருடைய மகனை பார்க்கும் போதெல்லாம் எனக்கு அவ்வளவு ஆத்திரம் வரும். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் தருணம் பார்த்து அவரிடம் நேரடியாகக் கேட்டு விடுவேன். ஊருக்குத்தான் உபதேசமா என்று.

நன்றி

சாளினி சாள்ஸ் முகப்புத்தகப் பதிவு