தெல்லிப்பளை வைத்தியசாலை புற்றுநோயாளர்களுக்கு நடக்கும் கொடூரம்!! கண்ணீர் வாக்குமூலம்!!(Video)
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் பணிப்புறக்கணிப்பு என்ற பெயரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கின்ற நோயாளர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் செயற்பட்டுவருகின்றமை தொடர்பிலான பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கடந்த சில மாதங்களாக முன்வைக்கப்பட்டுவருகின்ற போதிலும் வைத்தியசாலையின் உயர்மட்டத்தினர் கண்டுகொள்ளாமல் கடந்து சென்ற நிலையில் தற்போது குறித்த விடயம் ஆதாரபூர்வமாக அம்பலத்துக்கு வந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, புற்றுநோய் தொடர்பிலான நோயாளர்களுக்கு கதிரியக்க தொழில்நுட்பம் மூலம் தொடக்க நிலை புற்றுநோய்த் தாக்கங்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதற்காக குறித்த வைத்தியசாலையில் எண்மர் பணிக்கமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு நோயாளருக்கு கதிரியக்க சிகிச்சை வழங்கப்படுகின்ற போது குறைந்தது மூவர் அந்த நேரத்தில் பணியில் இருக்கவேண்டும் என்பது நடைமுறை. இருந்தபோதிலும் ஒருவர் மட்டும் பணியில் இருந்து கொண்டு மேலும் இருவரும் பணியில் இருந்ததாக பதிவினை மேற்கொண்டு மேலதிக கொடுப்பனவினை மேற்கொண்டுவந்திருக்கின்றனர்.
அதேபோல கடந்த சில மாதமாக தெல்லிப்பளை வைத்தியசாலையில் மட்டும் பணிப்புறக்கணிப்பு என்ற பெயரில் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு மறுக்கும் அவர்கள் தாம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதால் சிகிச்சை வழங்கமுடியாது எனத் தெரிவித்து நோயாளர்களை திருப்பி அனுப்புகின்ற செயற்பாட்டினை முன்னெடுத்திருக்கின்றனர். ஒருமுறை சிகிச்சை வழங்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு தொடர்ந்து கதிரியக்க சிகிச்சை வழங்கப்படாத விடத்து மீண்டும் புற்றுநோய் ஏற்படும் அபாய நிலை காணப்படுகிறது. அதனால் பல நோயாளர்கள் நீண்டகால ஆயுள் காலத்தினை குறைந்த காலத்திலேயே கழிக்கவேண்டிய மிகப் பெரிய அபாய நிலைகூட ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறான நோயாளர்களில் பலர் இதே சிகிச்சைக்காக கொழும்பு மகரகம வைத்தியாசாலைக்கு போகவேண்டிய இக்கட்டும் ஏற்பட்டிருக்கின்றது. இந்தச் சூழலில் வறுமைப்பட்ட நிலையில் வாழ்கின்ற புற்றுநோய்த் தாக்கத்துக்கு உள்ளாகிய பல நோயாளர்கள் மிகப் பெரிய அவலங்களைக்கூடச் சந்தித்திருக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பிய முன்னாள் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் ஒரு சிலர் வேறு வகையான அழுத்தங்களாலும் மனச்சாட்சி உறுத்தலாலும் மேலதிக கல்வி அல்லது வேறு காரணங்களைத் தெரிவித்து வைத்தியசாலையில் இருந்து மாற்றலாகி வெளியேறியிருக்கின்றனர்.
குறித்த கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் இவ்வாறு நடப்பதற்கான காரணம் தொடர்பில் ஆராய்கின்றபோது, அவர்கள் ஒரு வலையமைப்பாக செயற்படுவதாகவும் எவருக்கும் கட்டுப்பட மறுப்பதாகவும் தெரியவருகிறது. கதிரியக்கத் தொழில்நுட்பத்தில் பணியாற்றுவது புற்றுநோயை ஏற்படுத்தும் என்கிற மாயை அவர்கள் சமூகத்தில் ஏற்படுத்தி வைத்திருப்பதால் குறித்த தொழிலுக்கு புதிதாக வருவதற்கு பலரும் தயங்குவதாகத் தெரியவருகிறது. இருந்தபோதிலும் இதுவரையில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வகையில் குறித்த உத்தியோகத்தில் பணியாற்றும் எவரும் புற்றுநோய்த் தாக்கத்திற்கு உட்பட்டிருக்கவில்லை என்றும் தெரியவருகிறது.
இந்நிலையில் கடந்த மாதமே இவ்வாறான பிரச்சினை தொடர்பிலான தகவல்கள் வெளியாகியிருந்தபோது, சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை வைத்திய அதிகாரியை ஊடகவியலாளர்கள் தொடர்புகொண்டு கேட்டபோது, அவ்வாறான பிரச்சினை இல்லை என்று பதிலளிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்ற புற்று நோய் நோயாளர்கள் தமக்கு இழைக்கப்படுகின்ற அநீதி தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததால் சம்பவம் அம்பலமாகியிருக்கின்றது.
இன்று நடைபெற்ற சம்பவம் வருமாறு,
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் ஆளுகைக்கு ட்பட்ட தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையின் சிகிச்சை பிரிவில் கடமைபுரியும் கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் எண்மர் சிகிச்சைக்கு வரும் புற்றுநோயாளிகளுடன் அடாவடியில் ஈடுபட்டு வருதாக பாதிக்கப்பட்ட நோயாளர்கள் இன்றைய தினம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சிறீ பவானந்தராஜாவை சந்தித்து முறையிட்டுள்ளனர் .
இன்றைய தினம் புற்றுநோய் சிகிச்சைக்கு சென்று திருப்பி அனுப்பப்பட்ட நோயாளிகள் ஐவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜாவைச் சந்தித்து தமது குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்கள்
இது தொடர்பில் வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில்,
குறித்த விடயம் தொடர்பில் தமக்கு பல்வேறுபட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இது தொடர்பில் சுகாதாரஅமைச்சு மட்டத்திலும் இந்த விடயம் தொடர்பில் தெரிவித்திருக்கிறோம் நேற்றைய தினம் கூட குறித்த தொழிற்சங்கத்தினருடன் கொழும்பில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம் எனினும் அவர்கள் உடன் படுவதாக இல்லை.
எனினும் விரைவில் இந்த குறித்த உத்தியோகத்தர்கள் எண்மருக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடந்த இரண்டு மாதங்களாக அந்த எட்டு உத்தியோகத்தர்களும் மேலதிக கொடுப்பனவை பெற்றமை சம்பந்தமாக அதனை மீள் பரிசீலனை செய்வதற்கான அறிக்கை ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஆளுகைக்குட்பட்ட தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை 20 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால் அங்கேயுள்ள வைத்திய நிபுணர்களினாலேயே குறித்த உத்தியோகத்தர்கள் கண்காணிக்கப்படுகின்றனர் எனினும் இனிவரும் காலத்தில் அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட நோயாளர்கள் இனிமேலும் பாதிக்கப்படாத வண்ணம் வெகுவிரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

