யாழ் பாடசாலையில் சம்பவம்!! “மதன் சேர்” தங்களுக்கு வேணும் என அடம்பிடித்த மாணவிகளால் பதற்றம்!! (Video)
இடம் மாற்றம் பெற்றுச் சென்றுள்ள குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தின் தமிழ் ஆசிரியர் மதன் ஆசிரியரை மீண்டும் ஆசிரியராக நியமிக்கக் கோரியும், தற்போதைய அதிபர் இரா.ஜெயக்குமாரை உடன் இடமாற்றக் கோரியும் பாடசாலையின் முன்பாக இன்று திங்கட்கிழமை(07) காலை மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.
பாடசாலையின் மாணவர்களும், பெற்றோர்களும் இணைந்து இன்று காலை-08 மணி முதல் இந்த ஆர்ப்பாட்டத்தை நடாத்தியுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “மதன் சேர் எங்களுக்கு வேண்டும்”, ” அதிபரை மாற்று” உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பித் தமது கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
“அதிபரை இடம் மாற்று”, “அன்று நிசாந்தன் ஆசிரியர்! இன்று மதன் ஆசிரியர்!! இனி யார்?”, “புதிய அதிபர் வருகைக்கு முன் பாடசாலையின் செயற்பாடுகளில் ஏதும் குறை இருந்ததா???”, “சமூகவலைத்தளங்கள் மூலம் எமது பாடசாலையின் கெளரவத்தைப் பாதிக்க விடுவது நல்ல ஓர் அதிபரின் செயற்படா!!”, ” சமூக வலைத் தளங்கள் ஊடாகவா பாடசாலை நடாத்துவது?”, “அதிபரின் அராஜகத்துக்கு மறுப்புத் தெரிவிக்கும் ஆசிரியர்களுக்கு இடமாற்றமா?”, “வினைத் திறன் மிக்க ஆசிரியர்களை இடமாற்றுவதா? அல்லது அதிபரை இடமாற்றுவதா?”, “மனமகிழ்ச்சியுடன் ஆசிரியர்கள் கற்பிக்கும் சூழலை ஏற்படுத்து”, ” ஆசிரியர்களுடன் கண்ணாம் மூச்சி விளையாட்டா?”, “உரிய அதிகாரிகளே பதில் அளியுங்கள்!” உள்ளிட்ட பல்வேறு சுலோகங்களைத் தாங்கி கடும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இடமாற்றம் பெற்றுச் சென்ற தமிழ் ஆசான் மதன் ஆசிரியர் பாடசாலைக்கு மீண்டும் வேண்டுமென மாணவர்களாலும், பெற்றோர்களாலும் மிக உறுதியாக வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகிச் சிறிதுநேரத்தில் அங்கு வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் சு.சுந்தரசிவம் அங்கு வருகை தந்த நிலையில் அங்கு ஒருவித அமைதியின்மை ஏற்பட்டது.
இதனையடுத்து வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் சு. சுந்தரசிவம், உடுவில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் செ. மோகநாதன், சுன்னாகம் பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதன்பின்னரும் தீர்வுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் ஆரம்பப் பிரிவு மாணவர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்தப்பட்டனர். எனினும், மதன் சேர் அங்கு வராவிடில் தாம் இங்கிருந்து செல்லப் போவதில்லையென பத்தாம் தர மாணவர்களும், க.பொ. த சாதரணதர மாணவர்களும், பெற்றோர்களும் உறுதிபடத் தெரிவித்துவிட்டனர்.
இதனையடுத்து இடமாற்றம் பெற்றுச் சென்ற மதன் ஆசிரியர் கல்வி அதிகாரிகளால் அங்கு வரவழைக்கப்பட்டு அவருடன் இணைந்த வகையிலும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலிலும் உறுதியான முடிவுகள் எவையும் எட்டப்படாத நிலையில் வடமாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் இ. இளங்கோவன் குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை நேரில் ஆராய்ந்தார்.
அத்துடன் வடமாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர், உடுவில் கோட்டக் கல்விப் பணிப்பாளர், பாடசாலை அதிபர், இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள ஆசிரியர், பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நலன் விரும்பிகள் ஆகியோருடன் விசேட கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

இந்தக் கலந்துரையாடலில் குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தின் தற்போதைய அதிபரை உடனடியாக இடமாற்ற வேண்டுமெனவும், தமிழ் ஆசிரியரை மீண்டும் நியமிக்கவும் மாணவர்களின் பெற்றோர்கள் தரப்பால் ஆணித்தரமாக வலியுறுத்தப்பட்டது.
இதேவேளை, இடமாற்றம் பெற்று யூனியன் கல்லூரிக்கு ஆசிரியராக நியமனம் பெற்றுச் சென்ற மேற்படி பாடசாலையின் தமிழ் ஆசிரியராக கடமையாற்றிய மதன் ஆசிரியரை எதிர்வரும்-01-02-2021 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தும் குப்பிழான் விக்னேஸ்வரா ஆசிரியராக கடமையாற்றத் தற்காலிக இணைப்புக் கடிதத்தை உடனடியாக வழங்குவதெனவும், மூன்றுபேர் கொண்ட விசாரணைக் குழுவொன்றை அமைத்து விசாரணைகள் மேற்கொண்டு அதிபரை இடமாற்றுவது தொடர்பிலும், மதன் ஆசிரியரைத் தொடர்ந்தும் குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தில் கடமையாற்ற அனுமதிப்பது தொடர்பிலும் நடவடிக்கை எடுப்பதென கலந்துரையாடலின் பின்னர் தீர்மானம் எட்டப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
{நேரடி ரிப்போர்ட், காணொளி, படங்கள்:- செ. ரவிசாந்}

