இரண்டாக உடைகி்ன்றது இலங்கைத் தமிழரசுக் கட்சி!! சிறிதரன் தலைவராகின்றார்??
இலங்கை தமிழ் அரசு கட்சி இரண்டாக உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திரைமறைவில் நடக்கும் மோதல்கள் இன்னும் பகிரங்கமாகா விட்டாலும், பிளவிற்கான வலுவான அடித்தளம் ஏற்படுவதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது. ஓரிரு தினங்கள் தொடக்கம் ஓரிரு மாதங்கள் வரையான ஏதாவதொரு எல்லையில் பிளவு ஏற்படும் வலுவான ஏது நிலைகள் ஏற்பட்டுள்ளன.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா பொதுத்தேர்தலில் தோல்வியடைந்தார். கட்சியில் சுமந்திரன், சிறிதரனிற்கு ஆதரவான தரப்பினரால் தாம் தோற்கடிக்கப்பட்டதாக மாவை சேனாதிராசா தரப்பு கோபமடைந்துள்ளது.
கட்சி சில காலமாக இரண்டு தரப்பாக பிளவடைந்திருந்தது. சுமந்திரன் தரப்பு, மாவை தரப்பு என இரண்டு தரப்பாக செயற்பட்டு வந்தது. மாவை சேனாதிராசாவில் அதிருப்தியிருந்தாலும், எந்த தரப்பிலும் செயற்படாமல் சிறிதரன் செயற்பட்டு வந்தார். ஆனால் பொதுத்தேர்தல் பிரச்சாரத்துடன், சுமந்திரனுடன் கைகோர்த்து- இரட்டை குழல் துப்பாக்கியாக- செயற்பட்டார்.
சுமந்திரனின் நன்றியறிதல்
கடந்த பொதுத்தேர்தலில் சிறிதரன் கைகொடுத்திருக்கா விட்டால், பெரும்பாலும் சுமந்திரன் தோல்வியடைந்திருப்பார். தேர்தலின் பின்னர் சுமந்திரன் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் சிறிதரன் தொடர்பில் உரிய நன்றியறிதலை வெளிப்படுத்தியிருந்தார்.
தன்னை விடுதலைப் புலிகளின் பிரதிநிதியாக காண்பித்துக் கொண்டிருந்த சிறிதரன், விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்களினால் எதிர்க்கப்பட்டவரான சுமந்திரனுடன், பிரச்சார கூட்டணி வைத்தது பல தரப்பிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கான பின்னணி என்ன என பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டு வந்தன. தமிழ் அரசியல் பரப்பில் சாத்தியமற்ற ஊகங்களிற்கும் பெறுமதி உண்டென்பதால், அவை அதிகம் பரவி வந்தன. அவற்றை நாம் பொருட்படுத்தவில்லை.
எனினும், உண்மையில் அப்படியொரு இணக்கப்பாடு இருவருக்குமிடையில் ஏற்பட்டிருந்தால், அது கட்சி மற்றும் கூட்டமைப்பின் தலைமைத்துவம் தொடர்பானதாக மட்டுமே இருந்திருக்க முடியும்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமையை சிறிதரன் அடைய விரும்பியிருந்தார். உடனடியாக இல்லாவிட்டாலும், அதற்குரிய காலம் தனக்கு வரும் என அவர் நம்பியிருந்தார்.
அந்த காலம், மாவை சேனாதிராசாவின் தோல்வியுடன் ஏற்பட்டிருப்பதாக அவர் நம்பலாம். சிறிதரன் தமிழ் அரசு கட்சி தலைவராக வர சுமந்திரனும், சுமந்திரன் கூட்டமைப்பின் தலைவராக வர சிறிதரனும் உதவுவதாக ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்திருக்கவே அதிக சாத்தியமுள்ளது.
முதல் முயற்சி
சிறிதரனை தமிழ் அரசு கட்சியின் தலைவராக்கும் முயற்சியின் முதல் அடியை, நேற்று (7) சுமந்திரன் எடுத்து வைத்தார். கட்சி தலைமையில் மாற்றம் செய்ய வேண்டுமென பகிரங்கமாக அவர் அறிவித்தல் விடுத்திருந்தார். கட்சிக்குள் இது பற்றி பேசாமல் அவர் எப்படி இதைப்பற்றி பகிரங்கமாக பேசலாம், உட்கட்சி விவகாரங்களை உள்ளுக்குள்ளேயே பேசாமல் ஊடகங்களில் கசிய விடுகிறார்கள் என அண்மைக்காலம் வரை மேடைகளில் குறைபட்ட சுமந்திரன் எப்படி இப்படி நடக்கலாமென கட்சிக்குள் பலரும் கொதித்து போயுள்ளனர்.
இதேவேளை, மாவை செயல்திறனில்லாமல் இருக்கிறார், அவர் மாற்றப்பட வேண்டுமென சுமந்திரன் தரப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
ஒட்ட முடியாத பிளவு
இதேவேளை தமிழ் அரசு கட்சிக்குள் சுமந்திரன் அணி, மாவை அணியென ஒட்ட முடியாத பிளவு ஏற்பட்டுள்ளது. இளைஞர் அணியின் கணிசமானவர்கள், மாவட்ட கிளைகளின் கணிசமான நிர்வாகிகள் மாவை தரப்பில் உள்ளார்கள்.
வலி வடக்கு மாவையின் கோட்டை. ஆனால், இம்முறை வலி வடக்கு பிரதேசசபையின் தவிசாளர் உள்ளிட்ட பல உறுப்பினர்கள் மாவை சேனாதிராசாவிற்கு விசுவாசமாக தேர்தல் பணியில் ஈடுபடவில்லையென மாவை தரப்பு கருதுகிறது. மாவை சேனாதிராசாவுடன் உறவை பேணுவதை போல காண்பித்தபடி, சிறிதரன் மற்றும் சுமந்திரனுக்கே அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறுகிறார்கள்.
அதேபோல, வடமராட்சி மற்றும் தென்மராட்சி பிரதேச கட்சியினரும் சிறிதரன், சுமந்திரனிற்கே வாக்கு சேகரித்தனர். கிளிநொச்சியில் பகிரங்க கூட்டங்களில் சிறிதரன், சுமந்திரனிற்கு வாக்கு சேகரிக்கப்பட்டாலும், கிராமங்களில் நடத்தப்பட்ட வீடு வீடான பிரச்சாரங்களில் சிறிதரனிற்கு மட்டுமே வாக்கு சேகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், ரெலோ மற்றும் புளொட் வேட்பாளர்கள் ஒப்பீட்டளவில் மாவை சேனாதிராசாவிற்கு வாக்கு கோரியிருந்தனர். ஒப்பீட்டளவில் சொந்த கட்சி வேட்பாளர்களால் மாவைக்கு வாக்கு கோரப்பட்டதை விட, பங்காளிகளாலும், தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணியினராலுமே அதிகமாக வாக்கு கோரப்பட்டது.
இந்த மோதல், தேர்தல் முடிவுடன் அதிகமாக வலுவடைந்துள்ளது. இந்த மோதலின் எதிரொலிதான், யாழ் மத்திய கல்லூரி வாக்கெண்ணும் மையத்தில் மோதலாக மாறியது. அன்று சுமந்திரனிற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் இலங்கை தழிழ் அரசு கட்சியின் இளைஞர் அணியினரும் இருந்தனர். அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்ததும், அங்கு திரண்டிருந்த ஏனைய கட்சியினரும் இணைந்த கொண்டனர். நூறு பேர் வரையில் திரண்டிருந்த அங்கஜனின் ஆதரவாளர்களும் பின்னர் இணைந்து கொண்டனர்.
எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது அங்கு கடமையிலிருந்த பொலிசார், சுமந்திரனின் பாதுகாப்பிற்கான விசேட அதிரடிப்படையினர் தாக்குதல் நடத்தினர். இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது, சுமந்திரனுடன் வந்திருந்த கிளிநொச்சி பிரதேசசபை தமிழ் அரசு கட்சி பிரதேசசபை உறுப்பினர் ஒருவர்- அதிரடிப்படை பாதுகாப்பில் நின்றபடி, போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் அரசு கட்சியினரை பார்த்து கைகாட்டியிருந்தார்.
தேசியப்பட்டியல் சர்ச்சை
மாவை சேனாதிராசாவை கட்சி தலைமையிலிருந்து அகற்ற வேண்டுமெனில், அவருக்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கக்கூடாது. அதை மாவையின் எதிர்த்தரப்பினர், இரா.சம்பந்தனிடம் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. ஆனால், மாவையை தவிர்த்து இன்னொருவருக்கு வழங்குவதால் உருவாகும் விளைவுகளையும் இரா.சம்பந்தன் அறிவார்.
மாவை சேனாதிராசாவிற்கு தேசியப்பட்டியல் ஆசனத்தை வழங்கும்படி கூட்டமைப்பின் இரண்டு பங்காளிக்கட்சிகளின் தலைவர்களும் இரா.சம்பந்தனிடம் கோரியுள்ளனர். அத்துடன், கட்சியின் மூத்த, முக்கிய நிர்வாகிகள் அனைவரும் அதையே வலியுறுத்தியுள்ளனர். கட்சியின் இந்த நிலைப்பாட்டை அறிவிக்க, தமிழ் அரசு கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் இன்று சம்பந்தனை சந்திக்கிறார்.
இதன்போது, அவர் முக்கிய விடயமொன்றையும் அழுத்திச் சொல்லவுள்ளதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.
தமிழ் அரசு கட்சியின் முக்கிய தலைவர்கள் தரப்பில் இரா.சம்பந்தனிற்கு அறிவிக்கப்படவுள்ள அந்த செய்தி- “மாவை சேனாதிராசாவிற்கு தேசியப்பட்டியல் வழங்கப்படாவிட்டால், இலங்கை தமிழ் அரசு கட்சி இரண்டாக உடையும்“.
பிளவு நிச்சயம்
கட்சியின் தலைமைத்துவ மாற்றத்தை விரும்பும் சுமந்திரன், சிறிதரன் தரப்பு மாவைக்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்குவதை ஆதரிக்கமாட்டார்கள். இது இரா.சம்பந்தனிற்கு சங்கடமான சூழலை உருவாக்கும்.
எனினும், நெருக்கடியான சந்தர்ப்பங்களில் மற்ற எல்லோரையும் கைவிட்டாலும், சுமந்திரனின் பக்கமாக முடிவெடுக்கும் வழக்கத்தை கொண்ட இரா.சம்பந்தன் இம்முறை எப்படியான முடிவை எடுப்பார் என்பதிலேயே கட்சியின் எதிர்காலம் தங்கியுள்ளது.
மாவை சேனாதிராசாவிற்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்படா விட்டால், உடனடியாக கட்சிக்குள் பிளவு ஏற்படுமென்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது. அதற்காக மேற்கொள்ளப்பட்ட நகர்வுகளை அறிந்திருந்தபோதும், ஒரு சில நாட்களிற்கு அதை பகிரங்கப்படுத்தாமலிருக்க முடிவு செய்துள்ளோம்.
இதேவேளை, மாவை சேனாதிராசாவிற்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டாலும் கட்சியின் உடைவை தடுக்க முடியாது என்பதே யதார்த்தம். ஒட்ட முடியாமல் பிளவடைந்த இரு அணியும் ஒன்றித்து செயற்பட முடியாது. உடைவை ஒரு சில மாதங்களிற்கு தள்ளி வைக்கலாமே தவிர, நிரந்தரமாக தடுப்பது இப்போதைய நிலைமையில் சிரமம் போலவே தென்படுகிறது.
இலங்கைக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்த ஐ.தே.க இம்முறை ஒரு ஆசனத்தை கூட பெற்றுக்கொள்ளவில்லை. அந்த கட்சி இரண்டாக உடைந்துள்ளது. அந்த கட்சியை கடந்த ஆட்சிக்காலத்தில் காப்பாற்றி வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான கட்சியான- 70 ஆண்டு வரலாற்றை கொண்ட இலங்கை தமிழ் அரசு கட்சியும் உடையும் தறுவாயில் உள்ளமை ஒரு துயரமான முரண்நகை

