Tik Tok ஐ அமெரிக்காவுக்கு விற்றுவிடுங்கள் இல்லையேல் தடை விதிப்பேன்; ட்ரம்ப்!
சீனாவைச் சோ்ந்த நிறுவனத்துக்குச் சொந்தமான பிரபல குறும் வீடியோ கைத்தொலைபேசி செயலியான ரிக்டோக்கை செப்டம்பர் 15-ஆம் திகதிக்குள் ஏதேனும் ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு விற்காவிட்டால் அமெரிக்காவில் அதற்கு தடை விதிக்கப்படும் என ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தியாவை தொடர்ந்து ரிக்டோக் செயலியை அமெரிக்காவிலும் தடை செய்யவுள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதற்கிடையில் ரிக்டோக் செயலியை வாங்கும் முயற்சியில் அமெரிக்காவைச் சோ்ந்த மக்ரோசொப்ட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இது தொடா்பாக மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சத்ய நாதெள்ளாவுடன் தான் ஆலோசனை நடத்தியுள்ளதாக ட்ரம்ப் கூறினார்.
இந்தப் பேச்சின்போது ரிக்டோக் நிறுவனத்தை வாங்குவது குறித்து ஆய்வு செய்து வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளதாகவும் அவா் கூறினார்.
எனினும் ரிக்டோக்கின் பங்குகளை வாங்காமல் அதனை முழுமையாக அமெரிக்க நிறுவனம் ஒன்று வாங்குவதே சிறந்தது எனத் தான் கருதுவதாகவும் வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ட்ரம்ப் கூறினார்.
யாருக்குக் கைமாறினாலும் அதன் மொத்த தொகைக்கான வரி அமெரிக்கா அரசுக்குச் சேர்ந்துவிட வேண்டும் எனவும் ட்ரம்ப் கருத்து வெளியிட்டார்.

