யாழ்ப்பாணக் கிடாய் அடிப்பும் இரத்தவறையும்!!

கிடாய் வளர்ப்பு
”அண்ணை நாக்கை ஒருக்கா இறுக்கிக் கடியுங்கோ. ஒரு புதினம் சொல்லப் போறன் ”
”என்னடா சொல்லு.”
”அண்ணை நான் யாழ்ப்பாணத்திற்குப் போய் ஆட்டிறைச்சியும், இரத்தவறையுமெல்லோ
சாப்பிட்டு வாறன்.”
ஆ…. நீ குடுத்து வச்சனியடா. காட் கிடைச்சு ஊருக்குப் போய் வந்திட்டாயடா.
எங்களுக்கு எப்ப காட் கிடைச்சு ஊருக்குப் போகப் போறமோ?
தெரியேல்ல. அதுவல்லடா வாழ்க்கை.
1999 இல் புலம்பெயர் நாட்டிலிருந்து தாயகம் வந்து திரும்பிய ஒருவர் தனது
உறவுக்காரனுடன் தொலைபேசியில் சம்பாசித்த கதை தான் அது.
ஆட்டிறைச்சிக்கும் இரத்த வறைக்கும் யாழ்ப்பாணத்தானுக்கும் உள்ள உறவு
இரத்தமும் சதையும் போன்றதொரு உறவு.
யாழ்ப்பாணத்தானின் வசந்தகால நினைவுகளில் அதுவும் ஒன்று.
கடா என்பது சரியான சொல் வழக்காக இருந்தாலும் கிடாய் என்ற பேச்சுவழக்குச்
சொல்லே புழக்கத்தில் இருக்கிறது.
கிடாய் வெட்டி பங்கு இறைச்சி போடுதல் என்பது ஓர் கூட்டுறவுத் தொழில்.
குடும்ப உறவுகள் கூடுவார்கள்.
இரத்த வறைக்கென இறைச்சி வகைகள் கொஞ்சம் கொஞ்சமாக எடுப்பார்கள். பின்பு
பங்கு போடும் படலம் தொடங்கும்.
இரத்தத்தை கைளால் நன்றாகப் பிசைவார்கள். அதில் வரும் கள்ள நீரை ஊற்றுவார்கள்.
பிசைந்த இரத்தத்துடன் கொஞ்சம் தேங்காய்ப் பூவும் கலந்து கொள்வார்கள்.
வேறொரு சட்டியில் கொஞ்சம் தேங்காய் எண்ணை கலந்து வெங்காயம், மிளகாய்
சீரகம் போட்டு வதக்கிய பின்பு இரத்த வறைக்கென தெரிந்தெடுத்த ஆட்டு
இறைச்சியைப் போட்டு வதக்குவார்கள்.
பின்பு பிசைந்த இரத்தத்தை அந்தச் சட்டிக்குள் போட்டு வறை செய்வார்கள்.
கறிவேப்பிலையும் போட்டு மணக்க மணக்க இரத்த வறை தயாராகும். சிலர் சம்பா
அரிசிச் சோறு போட்டு இரத்த வறையுடன் ஒரு பிடி பிடிப்பார்கள்.
சாராயம், கள்ளு எடுத்து சந்தோசம் கொண்டாடுவோரும் உள்ளனர்.
இரத்த வறை செய்யும் கைப் பக்குவம் ஊருக்கு ஊர் மாறுபடும்.
எப்படி இருந்தாலும் யாழ்ப்பாணத்தானின் இரத்த வறையும் அதன் மீதான மோகமும்
தீராத தாகம் தான்.
யாழ்ப்பாணத்தார் தவிர பிற பிரதேச தமிழ் மக்கள் இரத்த வறை சாப்பிடுவது
நான் அறியவில்லை.
ஆட்டறைச்சியைப் பனையோலைக்குள் போட்டுக் கட்டினால் அதன் பெயர் குடலை. இது
ஒரு பிளா போன்ற அமைப்பில் இருக்கும்.
புலம் பெயர்ந்து சென்ற நாடுகளிலும் கிடாய்க் குட்டி தேடி எடுத்து
வெள்ளைக்காரனுக்குத் தெரியாமல் ரகசியமாக வெட்டி இரத்த வறை செய்து தமது
தாகத்தைத் தீர்த்தவர்கள் உண்டு.
புலம் பெயர் வாழ்வில் நீண்ட பல வருடங்கள் தாயகத்தைப் பிரிந்து இருந்து
மீள வரும் வாய்ப்புக் கிடைத்தவர்கள் கிடாய் வெட்டி இரத்த வறை உண்டு தமது
தவிப்பைப் போக்கிக் கொள்வார்கள்.
கிடாய் அடிப்பு பெரும்பாலும் சனிக்கிழமைகளில் தான் நிகழும். சனி நீராடு என்பார்கள்.
முழுகிப் போட்டு கிடாய் இறைச்சி சாப்பிடும் வழக்கம் இருந்ததால் அதனை
முழுக்குச் சாப்பாடு எனவும் அழைக்கும் வழக்கம் இருந்தது.
எமது மூத்த தலைமுறையைப் பார்த்திருக்கிறேன். ஆண்கள் சனிக்கிழமைகளில் உடல்
முழுவதும் நல்லெண்ணையைப் பூசிக் கொண்டு வாயிற்குள் சொட்டு நல்லெண்ணையை
வைத்துக் கொள்வார்கள்.
ஓரிரு மணி நேரம் அவ்வாறு வைத்திருந்து விட்டு நல்லெண்ணையைக் கொப்பளிப்பார்கள்.
பின்னர் அவித்த அரப்பு, தேசிக்காய் தலையில் தேய்த்து முழுகுவார்கள்.
சிலர் சீயாக்காய் வெந்தயம் அவித்து தலையில் வைத்து முழுகுவார்கள்.
1977 இல் ஜே.ஆரின் திறந்த பொருளாதாரம் வர முன்பு சம்போ என்றால்
என்னவென்று இந்த நாட்டிலுள்ள மக்களுக்குத் தெரியாது.
கிடாய் வளர்ப்பு நகரம்,கிராமம் என்ற வேறுபாடு இன்றி பெரும்பாலான
யாழ்ப்பாணத்தானின் சுயதொழிலாக இருந்த ஒரு காலம் இருந்தது.
அது இன்று கிட்டத்தட்ட விடைபெறும் நிலைக்கு வந்து விட்டது.
எனது சிறு பராயப் பொழுதுகளில் இரண்டு நேரப் பாடசாலை இருந்தது.
மூன்றரைக்குப் பாடசாலை முடிய கொக்கத்தடியும், சாக்கும் கொண்டு நானும்
தம்பியுமாக ஆள்கள் இல்லாத காணிகளின் வேலிகளில் முள்முருக்கம் குழை
ஒடிக்கப் போய் விடுவோம்.
மத்தியானச் சோற்றுக் கஞ்சியுடன் பிழிந்த தேங்காய்ப் பூவைக் கலந்து அம்மா
ஆட்டுக்கு வைப்பார்.காலை,மாலை, இரவு நேரத்தில் கிடாய் ஆடு ஸ்பெசலாகக்
கவனிக்கப்படும்.
அன்றைய நாள்களில் பாண் ஒரு இறாத்தல் 30 சதம்.கொய்யாத்தோட்டம் பேக்கரியில்
றாத்தல் 5 சதப்படி பழைய பாண் வாங்கி வருவோம்.
அம்மா சோற்றுக் கஞ்சியுடன் அல்லது தவிட்டுடன் பழைய பாணைச் சேர்த்துக்
குழைத்து தீத்த கிடாய் திமிறிக் கொண்டு வளரும்.
தோட்டப் புறங்களில் வாழைப் பொத்தியை அரிந்து கிடாய்க்கு உணவாக வைப்பார்கள்.
நாளாந்தம் இரண்டு ,மூன்று வாழைப்பொத்திகள் தின்று வளரும் கிடாய் ஆட்டின்
மொச்சை ( கொழுப்பு ) மணம் தூர இருப்பவர்களுக்கும் மணக்கும்.
அந்தக் கிடாயின் இறைச்சியின் ருசியோ ருசி.
வேப்பங்குழை, கிளுவங்குழை,இப்பில் இப்பில் குழை,கிளிசரியா குழை ,பலா மரச்
சருகு போன்றவற்றையும் ஆடுகளுக்கு வைப்பார்கள்.
அதிலும் கிடாய் ஆட்டுக்கு ஸ்பெசலான கவனிப்பு நடக்கும். ஆள்கள் பார்த்தால்
கண்ணூறு பட்டுப் போகுமென மறைவில் கொட்டில் போட்டு வளர்ப்பார்கள்.
தீபாவளிப் பண்டிகை கிடாய் விற்பனைக்கென பெரியதொரு சந்தையாக இருக்கும்.
இதை விடக் கிராமிய குலதெய்வங்களின் வருடாந்த வேள்விகளில் பங்கேற்கவெனவும்
போட்டிக்கு வளர்ப்பார்கள்.
கருகம்பனை கவுணாவத்தை நரசிம்மர் ஆலயம் வேள்விக்குக் காலாதி காலம் பிரபலமான கோயில்.
அங்கு வேள்வி பார்ப்பதற்கென ஏராளம் பேர் ஒன்று கூடுவார்கள்.
அந்த வேள்வியில் தமது கிடாய் தான் முதல் தரமான கிடாயாக நிற்க வேண்டுமெனப்
போட்டிக்கு கிடாய் வளர்ப்பார்கள்.
கிடங்கு வெட்டி அதற்குள் கிடாயை விட்டு அதற்குரிய சாப்பாடுகளை கொடுப்பார்கள்.
நல்லெண்ணை வடிக்கும் கிராமங்களில் எள்ளுப் புண்ணாக்குப் போட்டு வளர்ப்பார்கள்.
அந்தக் கிடாய்கள் கொழுகொழுவென்று கொழுத்து நம்பர் வன்னாக நிற்கும்.அதன்
இறைச்சி தனி ருசியும் வாசமும் தான்.
வேள்வியில் ஒரு இலட்சம்,இரண்டு இலட்சம் ரூபா விலை போன கிடாய்களும் உள்ளது.
தெய்வ சந்திநிதியில் வேள்வி என்ற பெயரில் உயிர்க் கொலைகள் செய்யக்
கூடாது , பொதுமக்கள் பார்க்க உயிர்க்கொலைகள் செய்யக் கூடாது என்ற
கருத்துள்ளது.
அதே வேளை ஆடு வளர்த்து வருவாய் ஈட்டும் சந்தையாகக் கோயில்கள் இருக்கிறது.
எமது கிராமியப் பொருளாதாரத்தை உயர்த்த வேள்வி முறை வழி வகுக்கிறது.இது
எமது பாரம்பரியம் என்ற வாதத்தையும் முன்வைக்கின்றனர்.
தீபாவளிக்கு உடுப்பு எடுக்க, தைப் பிறக்கும் போது பாடசாலைத் தேவைக்கு
கொப்பி,புத்தகம் வாங்க, புதுச் சைக்கிள் வாங்க,வீடு மேய கிடாய் விற்ற
காசு உதவியது.இது ஒரு வகை முதலீடு தான்.
வளர்த்த கிடாயைச் சாப்பிட மாட்டார்கள்.
கிடாய் ஆடு வளரும் போது கொழுப்பு ஏற ஏற அது மணக்கும். அதை மொச்சை
மணக்குது என்பார்கள்.
வெளி ஆட்கள் கண்காணாத இடத்தில் தான் ஆட்டைக் கட்டி வைத்து வளர்ப்பார்கள்.
இரவோடு இரவாகக் கிடாயை அவிழ்த்துக் கொண்டு போகும் கள்ளர் கூட்டம் அன்றும் இருந்தது.
கிடாய், மறி ஆடுகளின் ஆட்டுப் புழுக்கைகளை வீட்டுத் தோட்டத்திற்குப் போடுவோம்.
கிடாய் வளர்ந்து வெளி ஆட்களுக்கு விற்பதாயின் விலை பேசி விற்கும்
காலத்தில் ஆட்டைத் தொட விட மாட்டோம். வியாபாரிகள் வந்து ஆட்டின்
சதைப்பிடிப்பு பார்க்கப் போகின்றோமெனச் சொல்லி வயிற்றுப் பக்கத்தை
அமர்த்திப் பார்ப்பார்கள்.
அறாவிலை கேட்பார்கள். அவர்கள் கேட்ட விலை எமக்கு கட்டுப்படியான விலையாக
இருக்க மாட்டாது. கொடுக்க மாட்டோம். வியாபாரி வயிற்றுப் பக்கம் அமத்தி
விட்டுச் சதைப்பிடிப்பு பார்த்த ஆடு மெல்ல மெல்ல மெலிந்து நாளடைவில்
இறந்து விடும்.
அதனால் வியாபாரி வந்தால் தொடாமல் பார்க்க வேண்டுமெனக் கூறுவோம்.
வீடுகளில் வைத்துப் பங்கு இறைச்சி விற்றுப் பெரும் பணக்காரர் ஆகிய
முதலாளிகளும் உள்ளனர்.
போர் முடிந்த காலத்தின் பின் ஆனி,ஆடி மாதங்களில் தாயகம் வரும் பல்லாயிரம்
உறவுகளை எதிர்பார்த்து நல்ல விலை போகுமெனக் கிடாய் வளர்க்கிறார்கள்.
இந்த நாள்களில் கிடாய் ஆனைவிலை,குதிரை விலை.
1996 ஆம் ஆண்டின் பிற்பகுதி முதல் காங்கேசன்துறையிலிருந்து
திருக்கோணமலைக்கு கப்பல் ஓடத் தொடங்கியது. திருகோணமலை காளி கோயிலில் கௌரி
காப்பு விரதத்தைப் பார்த்து வந்தனர்.
காசு வசதி கூடக் கூட யாழ்ப்பாணத்தில் விரதங்களும் கூடியது. அது போல கௌரி
விரதமும் பெருகி வர தீபாவளியை ஒட்டி காப்புக் கட்டும் வழக்கம் வந்தது.
அதன் விளைவு யாழ்ப்பாணத்தில் நிறைய இடங்களில் தீபாவளிக்கு கிடாய்
அடிக்கும் பழக்கம் ஒளிந்து போனது.
வேலிகள் மதில்களாக மாறி, கேபிள் ரிவி, ஸ்மார்ட் போன்களுடன் மனிதன்
முடங்கிய காலங்களில் இன்று இலைகுழை போடுவார் இல்லை.
ஆட்டிற்கும் மாஸ். மாட்டிற்கும் மாஸ். கோழிக்கும் மாஸ்.
மனுசனுக்கும் நூடில்ஸ்,பேஸ்ரி போல பலவகை மாஸ்கள் வந்து விட்டது.
மாஸ் போட்டு வளர்த்த கிடாய் இறைச்சியில் வாசம் வருவதில்லை. ருசியும்
குறைவு. செயற்கைத்தனம் எல்லா இடங்களிலும் ஊடுருவி விட்டது.
வேப்பங்குழை சாப்பிட்ட ஆட்டின் இறைச்சியில் கசப்பு இருக்கும். அதனால்
அந்தக் கிடாய் இறைச்சிகளுக்கு டிமான்ட் குறைவு.
ஆட்டு இறைச்சி சாப்பிடுவதால் நெஞ்சுத் தைரியம் அதாவது உடல்
பலமடையுமென்பது முன்னோர் வாக்கு.அது உண்மையுங் கூட.
செம்மறி ஆட்டு இறைச்சி சாப்பிட்டவர்களுக்குத் தூக்கம் வரும். ஏனெனில்
செம்மறி ஆட்டின் குணமும் அது தான்.உசார் இல்லாத ஆள்களைச் செம்மறி என
அழைக்கும் வழக்கமும் அதனால் தான் வந்தது.
சாய்வான மரத்தில ஏறிக் குழை சாப்பிடும் ஆடுகளும் உள்ளன. அத்தகைய ஆடுகளின்
இறைச்சிகள் தனியான சத்து என்பார்கள்.
அதாவது நிறைய மூலிகை வகைகளைச் சாப்பிடும் ஆட்டின் இறைச்சி நல்லதென்பார்கள்.
இரத்த அழுத்த நோய் உள்ளோர் ஆட்டிறைச்சி சாப்பிட்டு நித்திரையிலேயே உயிர்
விட்டோரும் உள்ளனர்.
பாரிசவாதம் வந்து படுக்கையில் வாழ் நாளைக் கழித்தோரும் உள்ளனர்.
ஆட்டிறைச்சியின் நினைவுகள் மிகவும் நீளமானவை.
எமது மண்ணின் நினைவுகளில் அதன் பங்கும் மாறாத ஒன்று தான்.
ஆக்கம் -வேதநாயகம் தபேந்திரன்

error

Enjoy this blog? Please spread the word :)