ஜோதிடம்

இன்று செல்வம் தரும் சித்ரா பவுர்ணமி விரதம்! இன்று விரதம் இருந்தால் என்ன பலன் தெரியுமா?

சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி மிகவும் சிறப்பான நாள் என்று இந்துக்களிடம் ஒரு ஐதீகமாக இருந்து வருகிறது.இதனால் சித்ரா பவுர்ணமி அன்று காலையில் குளித்து விட்டு பூஜையறையில் விநாயகர் படத்தை நடுவில் வைத்து, சிவனை எண்ணி பூஜித்து, சர்க்கரைப் பொங்கல் படைத்து அனைவருக்கும் வழங்குவார்கள்.

வீட்டில் செல்வ வளத்தை அதிகரித்து, கஷ்டங்களை போக்கிட சித்திரை மாதத்தில் அதிகமாக கிடைக்கும் மா, பலா, வாழை போன்ற முக்கனிகளை இறைவனுக்கு படைத்து பூஜை செய்வார்கள்.சித்ரா பவுர்ணமி அன்று உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் நதிக்கரையில் அமர்ந்து சாப்பிடுவது பழங்காலத்தில் இருந்தே தொடரும் வழக்கமாக இருந்தாலும் அது வெயிலின் உஷ்ணத்தை போக்குவதற்கு என்பது விஞ்ஞானப் பூர்வமான உண்மை.

இந்த சித்ரா பவுர்ணமி நாளானது, அம்பாளை பூஜிக்க மிகவும் சிறப்பானது, அத்துடன் இந்நாள் தாயை இழந்தவர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்யும் நாளாகவும், பிரம்மஹத்தி தோஷம் பிடித்தவர்கள் தோஷம் நீங்க விரதம் இருக்க உகந்த நாளாகவும் அமைகின்றது.

இந்த நாளில் அம்மன் ஆலயங்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை, விசேஷ அபிஷேக ஆராதனைகள், சிவாலயங்களிலும், பெருமாள் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், இறைவழிபாடு, வீதி ஊர்வலங்கள் என்று பல சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

அம்மனுக்கு சிறப்பு பொருந்திய இந்த சித்ரா பவுர்ணமி விரத நாளன்று ஒவ்வொருவரும் செய்திருக்கும் பாவ தோஷங்களை போக்கி, மறுபிறவியில் சொர்க்க மோட்சம் பெறுவதற்கு, சில கோவில்களில் சித்திரகுப்த பூஜைகளையும் செய்து வழிபடுவார்கள்.