யாழ். கொரோனா மருத்துவ கூட பரிசோதனை: ஒருவருக்கு தொற்று!!
யாழ்ப்பாணத்தில் நேற்று (06) மேற்கொள்ளப்பட்ட கொரோனா தொற்று தொடர்பிலான பரிசோதனையில் ஒருவர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நாளாந்த கொரோனோ புள்ளிவிபரம் குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
64 பேருக்கு கொரோனா தொற்று தொடர்பிலான மருத்துவ பரிசோதனை (06) மேற்கொள்ளப்பட்டது.
இவர்களில் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. பெரியகாடு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 22 பேருக்கு கொரோனா தொடர்பிலான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவர்களில் ஒருவருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கின்றமை மருத்துவ பரிசோதனைகளில் தெரியவந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை யாழ்.போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள மூவர், வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்ட எண்மர், மன்னார் பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட 31 பேரிடமும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி தெரிவித்திருக்கின்றார்.

