யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மிருதங்க வித்துவான் லண்டனில் கொரோனாவுக்குப் பலி!! (photos)
யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வாழ்ந்து வந்த பிரபல மிருதங்கக் கலைஞரும் ஆனந்தலயா மிருதங்க பள்ளியின் இயக்குநருமான கந்தையா ஆனந்தநடேசன் (வயது 59) கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இன்று வியாழக்கிழமை லண்டனில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
பெண் பிள்ளைகள் இருவரின் தந்தையான இவர் யாழ்ப்பாணம் தெல்லிப்பழையை பிறப்பிடமாவும் புலம்பெயர்ந்து லண்டனில் கென்டன், கரோ நகரை வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.
கடந்த 17 நாட்களாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த அவர் கடந்த சில நாட்களாக கோமா நிலையில் காணப்பட்டதாகவும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இலங்கையின் மிக மூத்த பிரபல்யமான மிருதங்கக் கலைஞர் க.ப.சின்னராசா அவர்களின் மாணவரான ஆனந்தநடேசன், லண்டனில் மிகப் பிரபல்யமான மிருதங்கக் கலைஞராக விளங்கியிருக்கின்றார்.
ஆனந்தலயா மிருதங்கப் பள்ளி என்கிற இசைக் கல்லூரியை லண்டனில் நிறுவி பல நூற்றுக்கணக்கான மிருதங்கக் கலைஞர்களை வளர்த்தெடுத்த அவர் பெருமளவான மாணவர்களின் மிருதங்க அரங்கேற்றத்தினையும் நிகழ்த்தியிருக்கின்றார்.
லண்டனில் வாழ்ந்து வந்த மிகச்சிறந்த மிருதங்கக்கலைஞரின் இழப்பு கலைத் துறைக்கு பாரிய இழப்பாகும்.
ஆனந்தநடேசன் மாஸ்டர்.
1996 ல் Brent Tamil Associationல் ஒன்றாக கற்பித்த காலங்களில் அறிமுகம். மனைவி குட்டிக்குட்டி மகள்மாருடன் தமிழ்ப்பாடசாலைக்கு வருவார். அன்பாக பழகும் குடும்பம். இத்தனை ஆண்டுகளுக்குப்பின்பு அவரிடம் நான் கண்ட மாறுதல் ஒன்றேஒன்றுதான் , வயது முதிர்ச்சி.
மற்றும்படி அன்றும் இன்றும் அதே ஆனந்தநடேசன் மாஸ்டர்தான். எளிமையாக,அன்புடன் எல்லோருடனும் பழகும் இயல்போ , அடுத்தவரில் காட்டும் உண்மையான அக்கறையோ , நேர்மையாக கூறும் ஆலோசனைகளோ எதுவும் இத்தனை வருடங்களுக்குப்பின்பும் மாறவில்லை. அவரோடு இணைந்துவிட்ட குணவியல்புகளாகவே இருந்தது. புலம்பெயர்தேசத்தில் கலைப்பாடம் கற்பிக்கும் ஒரு ஆசிரியர், எப்படி தமது மாணவர்களை ஊக்குவிக்கவேண்டும் என்பதை அவர் வாழ்ந்து காட்டினார். அவர் மாணவர்களைமட்டுமல்ல சக ஆசிரியர்களையும் ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தும் மனம் கொண்டவர். எனது மாணவர்களது வீணை நிகழ்ச்சிகளுக்கெல்லாம் கேட்கும்போது, தனது மிருதங்கமாணவர்களை அனுப்பி, எல்லாமாணவமாணவிகளையும் ஊக்குவிப்பார்.
போடும் குறும் செய்திகளுக்கெல்லாம் தவறாது பதில் போடுவார் , அல்லது போன்பண்ணிப்பேசுவார். கடைசியாக அவர் நோயுற்றது ஆறிந்து நான் போட்ட செய்திக்குமட்டும் பதில் இல்லை. இனி வராது.
மாஸ்டர்,
மண்ணுலகில் வாழ்வாங்கு வாழ்ந்து விண்ணுலகிற்கு பயணிக்கும் உங்கள் ஆத்மா நற்கதியடைய பிரார்த்திக்கிறோம்.
ஈடுசெய்ய முடியாத இழப்பால் துயருற்றிருக்கும் மனைவி மகள்மாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.



