யாழ் வெங்காயத்துக்கு வந்த சோதனை
யாழ் மாவட்டத்தில் தற்போது வெங்காய செய்கையில் வெங்காயத்தாள் கொதி புழுவின் தாக்கம் இனம் காணப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் அஞ்சனாதேவி ஸ்ரீரங்கன் தெரிவித்துள்ளார் .
இன்றைய தினம் இது தொடர்பில் நபர்கள் மாவட்டத்திலுள்ள வெங்காய செய்திகள் மேற்கொள்ளப்படும் இடங்களுக்கு நேரடி கள விஜயத்தை மேற்கொண்ட போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
தற்போது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புதிதாக நீண்ட காலத்திற்குப் பின்னர் வெங்காயத்தாள் கொதி புழுவின் தாக்கம் இனங்காணப்பட்டுள்ளது.
1980, 1981 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இதன் தாக்கமானது இனங்காணப்பட்டது. தற்பொழுது இந்த புழுவின் தாக்கம் மீண்டும் இனங்காணப்பட்டுள்ளது .
இதன் தாக்கமானது ஆரம்பகாலத்தில் வெங்காயச் செய்கை மேற்கொள்ளப்பட்டு 20 ஆவது நாட்களில் அவதானிக்கக்கூடிய மாதிரி காணப்பட்டது. ஆனால் தற்பொழுது நடைபெறுகின்ற இந்த வெங்காய செய்கையில் 40, 45 நாட்களுக்குப் பின்னர் வெங்காயத்தில் தாள் கொதி புழுவின் தாக்கத்தினை இனங்காணக் கூடியதாக உள்ளது .
வெங்காயத்தின் குமுழில் இதன் தாக்கம் இனங்காணப்படுவதனால் விதை வெங்காயத்திலும் இதன் பாதிப்பு காணக்கூடியதாக இருக்கும். விவசாயிகள் இது தொடர்பில் பூரண அறிவைப் பெற்று விவசாய போதனாசிரியர் களுடன் தொடர்பு கொண்டு இதனை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பது தொடர்பில், விளக்கங்களைப் பெற்று இந்த தாள் கொதி புழுவின் தாக்கத்தை கட்டுப்படுத்த முன்வரவேண்டும் .
இந்த புழுவின் தாக்கம் காணப்படும் வெங்காயச் செய்கையில் கொக்குகளின் நடமாட்டத்தை அதிகளவு காணக்கூடியதாக இருக்கும். இதனைக் கொண்டே விவசாயிகள் வெங்காயச் செய்கையில் புழுவின் தாக்கத்தை இலகுவாக இனங்கண்டு கொள்ள முடியும் .
கொக்குகள் இருப்பதற்கான முழுக்காரணம் இந்த புழுக்களைப் பிடித்து தின்பது. விவசாயிகள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் உங்கள் விவசாய நிலங்களில் அல்லது வெங்காயச் செய்கையில் கொக்குகள் நடமாட்டம் காணப்படுவதாக இருந்தால் , புழுவின் தாக்கம் இருக்கின்றது என்ற காரணத்தினை நீங்கள் கருத்தில் கொள்ள முடியும். யாழ் மாவட்டத்தின் பிற பகுதிகளில் 50 ஏக்கர் அளவுக்கு இந்தப் புழுவின் தாக்கம் வெங்காய செய்கையில் காணப்படுகின்றது.
புழுக்கள் ஆவதற்கு முன்னர் இந்த அந்துப் பூச்சிகள் வெங்காயத்தின் தாளில் முதல் தாக்கத்தினை ஏற்படுத்தும். அங்கு அவை முட்டைகளை கொத்துக் கொத்தாக இடுவதனை காணக்கூடியதாக இருக்கும் .அந்த முட்டையில் இருந்து உருவாக்கப்படும் குடம்பிகள் ஆரம்பத்தில் வெங்காயத்தின் இலையின் மேற்பகுதியில், பச்சயத்தினனை உணவாகக் கொள்வதனை காணக்கூடியதாக இருக்கும் .
விவசாயிகள் காலை மற்றும் மாலை நேரங்களில், வெங்காயத்தின் அடிப்பகுதியில் அவதானிக்கும் பொழுது இதன் தாக்கத்தை உணரக்கூடியதாக இருக்கும்.
அதற்குரிய தீர்வை வழங்குவதற்கு எம்மாலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. என யாழ் மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் அஞ்சனாதேவி ஸ்ரீரங்கன் தெரிவித்தார்.

